இளம் வயதிலேயே கிரிக்கெட் திறன்களை கொண்டுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களை அடையாளம் காணும் இலக்குடன் இலங்கை கிரிக்கெட் தேசிய வழிகாட்டல் திட்டமிடலானது ஒழுங்குப்படுத்திய 15 வயதுக்குட்பட்ட மாவட்டங்களுக்கு-இடையிலான மற்றும் மாகாணங்களுக்கு-இடையிலான இலங்கை யூத் லீக்கின் (SLYL போட்டித் தொடரின் சாம்பியன்ஷிப்பை கொழும்பு தெற்கு அணி பெற்றுக்கொண்டது. இறுதிப் போட்டி 2022 நவம்பர் 29 ஆம் திகதி மேர்கன்டைல் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட இளம் கிரிக்கெட் வீரர்களின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது
ஆரம்ப சுற்றில் தோல்வியின்றி இறுதிப் போட்டிக்குள் நுழைந்த கொழும்பு வடக்கு அணியை மூன்று விக்கெட்டுகளால் தோற்கடித்து கொழும்பு தெற்கு அணி வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு வடக்கு அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 148 ஓட்டங்களையும், பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொழும்பு தெற்கு அணி 45.5 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 151 ஓட்டங்களையும் பெற்று வெற்றியை எட்டியது.
ப்ரீமா, இலங்கை கிரிக்கெட்டுடன் இணைந்து, கடந்த 12 வருடங்களாக இலங்கையில் ஜூனியர் கிரிக்கெட் திறமைகளை மேம்படுத்துவதில் பெரும் முன்னேற்றம் கண்டதுடன், ஆயிரக்கணக்கான இளம் கிரிக்கெட் வீரர்கள் தங்கள் மாவட்டத்தையும், அதன் பின்னர் அவர்களது மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்த வழிவகுத்தது. தேசிய கிரிக்கெட் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் கடந்த கால மற்றும் தற்போதைய பல திறமையான துடுப்பாட்ட வீரர்கள் இப் போட்டியில் தங்கள் ஆரம்பத்தை பெற்றுள்ளனர்.
இவ் ஒத்துழைப்பு குறித்து பேசிய இலங்கை அக்ரோ இன்டஸ்ட்ரீஸ், ப்ரீமா குழுமத்தின் பிரதிப் பொது முகாமையாளர் திரு. சஜித் குணரத்ன, “Prima U15 Sri Lanka Youth League, ஆர்வமுள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை தேசிய மற்றும் சர்வதேச அளவில் மேலும் மேம்படுத்துவதற்கான ஊக்கியாக விளங்குகிறது. “இரண்டு வருடங்களின் பின்னர், நாட்டிலுள்ள அடுத்த தலைமுறை இளம் கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் நோக்கில், இந்தப் போட்டியின் புத்துயிர் பெற்ற பதிப்பைத் தொடர, 12 வருடகாலமாக எங்களுடன் பங்காளராக இலங்கை கிரிக்கெட் இணைந்திருப்பதற்கு ப்ரீமா குழுமம் சார்பாக நான் நன்றிகளை கூறிக்கொள்கின்றேன். “எனக் கூறினார்.
கொழும்பு தெற்கின் ஹிருகா சில்வா 100 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்களைப் பெற்று இறுதிப் போட்டியில் பதிவான ஒரேயொரு அரைச்சதத்தைப் பதிவு செய்தார். ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹிருக சில்வா மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர் தெவிந்து வேவெல்வல ஆகியோர் இணைந்து 5 ஆவது விக்கெட்டுக்கு 57 ஓட்டங்களை பெற்றது இந்தப் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. இதன்படி, ஹிருகா சில்வா ‘இறுதிப் போட்டியின் வீரர்’ பட்டத்தை உறுதி செய்தார்.
4 போட்டிகளில் 162 ஓட்டங்களைப் பெற்ற தம்புள்ளை அணியின் பபசர திஸாநாயக்க சிறந்த துடுப்பாட்ட வீரராகவும், 3 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய கொழும்பு வடக்கின் தினுஜ சமரரத்ன சிறந்த பந்து வீச்சாளராகவும் தெரிவானார். 68 ஓட்டங்களையும் 9 விக்கெட்டுகளையும் கைப்பற்றிய தம்புள்ளை அணியின் தமேஷ் மதிஷான் ‘போட்டியின் ஆட்ட நாயகனாக’ தெரிவானார்.
Prima U15 SLYL 2022 போட்டியானது மாவட்ட மட்டத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்ட இளம் துடுப்பாட்ட வீரர்களின் பங்குபற்றுதலுடன் காலி, கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு, கண்டி மற்றும் தம்புள்ளை அணிகள் என ஐந்து அணிகளின் பத்து போட்டிகள் மேர்கன்டைல் கிரிக்கெட் சங்க மைதானம் மற்றும் நெஷனலைஸ்ட் சேவிஸ் மைதானம ஆகியவற்றில்; நவம்பர் 21 ஆரம்பமானது.