2023 இன் முதல் ஒன்பது மாதங்களில் செலான் வங்கியின் வரிக்கு பிந்திய இலாபம் 79% இனால் அதிகரித்து ரூ 4.49 பில்லியனாக பதிவு 

Share with your friend

• வரிக்கு முந்திய இலாபம் 100.75% அபார வளர்ச்சியை எய்தி ரூ 7,181 மில்லியனாக பதிவு 

• 2023 செப்டெம்பர் மாத இறுதியில் ஒட்டுமொத்த சட்டத்தேவைப்பாட்டு திரள்வு சொத்துக்களின் விகிதம் 39.10% ஆக காணப்பட்டது

• 2023 செப்டெம்பர் மாத இறுதியில் மொத்த மூலதன போதுமை விகிதம் 15.29% ஆக பதிவு

2023 செப்டெம்பர் 30ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் வரிக்கு பிந்திய இலாபமாக ரூ. 4.49 பில்லியனை செலான் வங்கி அறிவித்திருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 2.5 பில்லியனுடன் ஒப்பிடுகையில் 79.47% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. சவால்கள் நிறைந்த பொருளாதார மற்றும் சந்தைச் சூழ்நிலைகளிலிருந்து மீண்டெழுந்திறன் இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் வங்கி தனது இலாபமீட்டலில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. வரிக்கு முந்திய இலாபம் (PBT) 100% எனும் அபார வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 7.181 பில்லியனாக பதிவாகியிருந்தது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 3.577 பில்லியனாக காணப்பட்டது. வருமானம் மற்றும் குறைந்தளவு மதிப்பிறக்க கட்டணங்கள் இந்தப் பெறுமதியில் வளர்ச்சியில் அதிகளவு பங்களிப்புச் செய்திருந்தன.

தேறிய வட்டி வருமானம் மற்றும் தேறிய கட்டணம் மற்றும் தரகு வருமானம் போன்றவற்றினூடான வருமானத்தினால், 2023 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாத காலப்பகுதியில் மொத்த தொழிற்படு வருமானத்தை துரிதப்படுத்தியிருந்தன. 2022 ஆம் ஆண்டில் ரூ. 35.194 பில்லியனாக பதிவாகியிருந்த இந்தப் பெறுமதி 6.19% இனால் உயர்ந்து ரூ. 37.373 பில்லியனாக பதிவாகியிருந்தது.

2023 ஆம் ஆண்டின் முதல் மூன்று காலாண்டு பகுதியில், செலான் வங்கியின் தேறிய வட்டி வருமானம் 9.28% இனால் உயர்ந்து ரூ. 30.554 பில்லியனாக பதிவாகியிருந்தது. கட்டண அடிப்படையிலான வருமானம் 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் பதிவாகியிருந்த ரூ. 4.520 பில்லியனிலிருந்து 19.29% ஆல் உயர்வடைந்து ரூ. 5.392 பில்லியனாக உயர்ந்திருந்தது. இதில் வரவு மற்றும் கடன் அட்டைகளிலிருந்தான வருமானம், வியாபார தரகு வருமானம் மற்றும் வெளிநாட்டு பண அனுப்புகைகளில் உயர்வு போன்றன பங்களிப்புச் செய்திருந்தன. மேலும், மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் வங்கி உறுதியான தேறிய வட்டி எல்லைப் பெறுமதியான 5.98% ஐ பேணியிருந்தது.

வங்கியின் மொத்த செலவுகள் 25.71% இனால் அதிகரித்து ரூ. 13.846 பில்லியனாக பதிவாகியிருந்தது. ஊழியர் அனுகூலங்களில் மேற்கொள்ளப்பட்ட சீராக்கங்கள் மற்றும் நுகர்வுப் பொருட்கள் மற்றும் சேவைகளில் அதிகரித்துச் செல்லும் செலவுகள் போன்றன இதில் பங்களிப்புச் செய்திருந்தன.

2023 செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப் பகுதியில் செலான் வங்கி ரூ. 13.447 பில்லியனை மதிப்பிறக்க கட்டணமாக பதிவு செய்திருந்தன. 2022 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 28.61% பிரதிபலிப்பை பதிவு செய்திருந்தது. பெரும்பொருளாதாரத்தில் மற்றும் வாடிக்கையாளர்களின் கடன் இடர் கோவைகளில் ஏற்படக்கூடிய மாற்றங்களுக்காக மதிப்பிறக்க ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

வங்கியின் ஐந்தொகை சிறந்த நிலையில் காணப்பட்டது. 2023 செப்டெம்பர் 30ஆம் திகதியளவில் சொத்துக்கள் வளர்ச்சி ரூ. 693 பில்லியனாக காணப்பட்டது. கடன்கள் மற்றும் முற்பணங்கள் ஆகியன ரூ. 412 பில்லியனாக காணப்பட்டன. வைப்புகள் 3.17% உயர்ந்து ரூ. 565 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், ரூபாய் மற்றும் வெளிநாட்டு நாணய வைப்புகளில் முன்னேற்றத்தை பிரதிபலித்திருந்தன.

2023 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று வங்கியின் பிரதான நிதிசார் விகிதங்கள் மற்றும் குறிகாட்டிகள் உறுதியாக காணப்பட்டன. ஆரோக்கியமான மொத்த மூலதன போதுமை விகிதமாக 15.29% ஐ வங்கி கொண்டிருந்ததுடன், ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளை விட உயர்வாக பதிவாகியிருந்தன. ஒட்டுமொத்த சட்டத்தேவைப்பாட்டு திரள்வு சொத்துக்களின் விகிதம் (SLAR) 39.10% ஆக காணப்பட்டது. இதனூடாக ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடுகளுக்கமைய வங்கி இயங்குகின்றமை உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடுமையான பொருளாதார சூழல்களுக்கு மத்தியிலும், பிரதான வருமான மூலங்களில் வங்கி சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. இலாப வளர்ச்சி, வருமானங்கள் மற்றும் வைப்புகளில் வளர்ச்சியும் பதிவாகியிருந்தன. அதன் உறுதியான மூலதன மற்றும் திரள்வு நிலை, கடுமையான நிர்வாக செயற்பாடுகள் போன்றவற்றினூடாக சந்தை தளம்பல்களுக்கு எதிராக மேலதிக இருப்பை பேண உதவியிருந்தன.

பங்கின் மீதான வருமதி (ROE) 10.54% ஆக காணப்பட்டது. பங்கொன்றின் மீதான உழைப்பு வீதம், 2023 செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைந்த ஒன்பது மாத காலப்பகுதியில் ரூ. 7.30 ஆக பதிவாகியிருந்தது. 2022 ஆம் ஆண்டின் இக்காலப் பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 4.07 ஆக பதிவாகியிருந்தது. 2023 செப்டெம்பர் 30ஆம் திகதியன்று வங்கியின் பங்கொன்றின் மீதான தேறிய சொத்துக்கள் பெறுமதி ரூ. 97.37 ஆக பதிவாகியிருந்தது.

நிலைபேறான வளர்ச்சிக்கு வங்கி தொடர்ந்தும் தன்னை அர்ப்பணித்து இயங்குவதுடன், வினைத்திறனை மேம்படுத்துவதற்காக தொழில்நுட்ப ரீதியான முன்னேற்றங்களை ஏற்படுத்துவது மற்றும் துரித இடர் முகாமைத்துவ செயற்பாடுகளை பின்பற்றுவது போன்றவற்றையும் மேற்கொள்கின்றது. நிதிசார் உறுதித் தன்மை மற்றும் வளர்ச்சிக்கான தனது அர்ப்பணிப்பை சிறந்த நிதிப் பெறுபேறுகள் வெளிப்படுத்தியிருந்ததுடன், சொத்துக்களின் தரத்தையும் மேம்படுத்தியிருந்தது. தனது வளர்ச்சிப் போக்கை தொடர்வதற்கு வங்கி சீரான நிலையில் காணப்படுவதுடன், சகல பங்காளர்களுக்கும் பெறுமதியை ஏற்படுத்திக் கொடுக்கவும், இலங்கையின் நிதிச் சேவைகள் துறையின் வலிமையூட்டும் அரணாக அமைந்திருக்கும் வகையிலும் செயலாற்றும்.


Share with your friend