DFCC வங்கியானது நிலைபேற்றியலுடனான மின் உற்பத்திக்கு கட்டுபடியான நிதித் தீர்வுகளை வழங்க SLASSCOM உடன் கைகோர்த்துள்ளது

Home » DFCC வங்கியானது நிலைபேற்றியலுடனான மின் உற்பத்திக்கு கட்டுபடியான நிதித் தீர்வுகளை வழங்க SLASSCOM உடன் கைகோர்த்துள்ளது
Share with your friend

இலங்கையின் முதன்மையான வர்த்தக வங்கிகளில் ஒன்றான DFCC வங்கியானது, நாட்டுக்காக உச்ச அளவில் வெளிநாட்டு நாணயத்தைச் சம்பாதிக்கும் துறைகளில் ஒன்றான தகவல் தொழில்நுட்பம்/வணிகச் செயல்பாடுகள் முகாமைத்துவ தொழிற்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பான SLASSCOM உடன் உத்தியோகபூர்வமாக ஒரு பங்குடமையை ஏற்படுத்தியுள்ளமை தொடர்பில் அறிவித்துள்ளது. தற்போதைய எரிசக்தி நெருக்கடியின் விளைவாக தொழில்துறை மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த கூட்டாண்மை மூலம், விசேட கடன் வழங்கல் திட்டங்கள், சலுகை கட்டண வீதங்கள் மற்றும் பல பிரத்தியேக நன்மைகள் மூலம் இத்துறைக்கான நிலைபேற்றியல் கொண்ட மின் உற்பத்திக்கான வாய்ப்பினை வழங்கக்கூடிய மற்றும் கட்டுபடியான அளவிலான கடனை வழங்க DFCC வங்கி மற்றும் SLASSCOM ஆகியன இணைந்து செயல்படவுள்ளன. 115,000+ பேரை உள்ளடக்கியவாறு, 420 உறுப்பு நிறுவனங்களுடன், SLASSCOM இன் அங்கத்துவமானது இலங்கையின் தகவல் தொழில்நுட்பம்/வணிகச் செயல்பாடுகள் முகாமைத்துவ தொழிற்துறையின் ஏற்றுமதி வருமானத்தில் அண்ணளவாக 90% என்பது குறிப்பிடத்தக்கது. 

இடமிருந்து வலமாக: சமத்ரி காரியவசம் – துணைத் தலைமை அதிகாரி, பொதுச் சட்டம், DFCC வங்கி, திரு. அன்டன் ஆறுமுகம் – சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி, கடல் கடந்த வங்கிச்சேவை, பணம் அனுப்புதல் மற்றும் வர்த்தக அபிவிருத்தி, DFCC வங்கி, திரு. திமால் பெரேரா, DFCC வங்கியின் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. ஆஷிக் அலி – துணைத் தலைவர், SLASSCOM, திரு.ஜெஹான் பேரின்பநாயகம் – துணைத் தலைவர், SLASSCOM, நிஷான் மெண்டிஸ் – நிதிப் பணிப்பாளர், SLASSCOM, மற்றும் சமிந்தா டி சில்வா – நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளர், SLASSCOM.

அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதன் மூலம் இரு நிறுவனங்களுக்கிடையிலான கூட்டாண்மை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு DFCC வங்கியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, அங்கு இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். திரு. திமால் பெரேரா – பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, DFCC வங்கி பிஎல்சி, மற்றும் திரு. ஆஷிக் அலி – துணைத் தலைவர், SLASSCOM ஆகியோர் முறையே இரு நிறுவனங்களின் சார்பாகவும் கையெழுத்திட்டனர்.

DFCC வங்கியின் பணிப்பாளரும்/பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. திமால் பெரேரா அவர்கள், இந்த காலகட்டத்தில் இத்தகைய திட்டத்தின் இக்கட்டான தேவையை ஏற்றுக்கொண்டு, இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “இந்தத் துறைக்கான நிலைபேற்றியல் கொண்ட, நம்பகரமான மற்றும் தன்னிறைவான மின் உற்பத்தியை உறுதிப்படுத்துவது இந்த காலகட்டத்தில் அவசியம். எனவே, SLASSCOM உடன் இணைந்து தொழில்துறைக்கு உறுதியான நிலைபேற்றியல் கொண்ட தீர்வுகளை நாம் வழங்குகிறோம். இந்த ஏற்பாட்டின் மூலம், DFCC வங்கியிடமிருந்து பிரத்தியேகமாக நிலைபேற்றியலுடனான மின் உற்பத்திக்கான முதலீடுகளுக்காக, தொழில்துறை பங்குதாரர்கள் விசேட கடன் திட்டங்கள் மற்றும் முன்னுரிமை வட்டி வீதங்களுடன் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த நடவடிக்கையானது எமது பரந்தளவிலான நிலைபேற்றியல் ஊக்குவிப்பு மூலோபாயத்திற்கு அமைவாக உள்ளது. 1988 ஆம் ஆண்டு முதல், இலங்கையில் நிலைபேற்றியலுடனான மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்திக்கான முன்னோடி கடன் வழங்குநராக நாங்கள் திகழ்ந்து வருகிறோம். இந்த காலகட்டத்தில் எமது நாட்டுக்கு மிகச்சிறந்த வகையில் அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் தொழில்துறைகளில் ஒன்றை ஆதரிப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கைக்கு மிகவும் நிலைபேற்றியலுடனான எதிர்காலத்தை உருவாக்க வேண்டுமானால், சூழலுக்கு தீங்கிளைக்காத, உயர் தொழில்நுட்பத் தொழிற்துறைக்கு உதவ வேண்டியது அவசியம்,” என்று குறிப்பிட்டார். 

DFCC வங்கியானது 1988 ஆம் ஆண்டில் இலங்கையில் சூரிய மின்னுற்பத்தி PV உற்பத்தி ஆலைக்கு கடன் வழங்கி, நிலைபேற்றியலுடனான எரிசக்திக்கான கடன் வழங்குனராக தனது முன்னோடிப் பயணத்தை ஆரம்பித்திருந்தது. அன்று முதல், பல தசாப்தங்களாக கழிவுகளிலிருந்து எரிசக்தியை உற்பத்தி செய்யும் திட்டங்கள், காற்று மற்றும் சூரிய மின்னுற்பத்தித் திட்டங்கள், நீர் மின்னுற்பத்தித் திட்டங்கள் மற்றும் இலங்கையின் முதன்முதல் சேதன வாயு அடிப்படையிலான ஒருங்கிணைந்த வெப்ப மற்றும் மின்வலு உற்பத்திச் செயற்திட்டம் அடங்கலாக ஏராளமான திட்டங்களுக்கு கடன் வழங்கியுள்ளது. வங்கி எண்ணற்ற கூரை சூரிய மின்னுற்பத்தி கட்டமைப்புகளுக்கு கடன் வழங்கியுள்ளதுடன், 1997 இல் இலங்கையில் தரப்படுத்தப்பட்ட மின் கொள்வனவு உடன்படிக்கைகளை அறிமுகப்படுத்துவதற்கு முன்னோடியாகத் திகழ்ந்தது. இது இன்று வரை இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் தனியார் முதலீட்டுக்கு அனுசரணையளிக்கும் ஒரு வேலைத்திட்டத்தின் அத்திவாரமாக உள்ளது.

SLASSCOM இன் துணைத்தலைவரான திரு. ஆஷிக் அலி அவர்கள் இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிடுகையில், “இலங்கையின் தகவல் தொழில்நுட்ப/வணிகச் செயல்முறை முகாமைத்துவத் துறையானது 2021 ஆம் ஆண்டில் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டி, இலங்கைக்கு அந்நிய செலாவணியை ஈட்டித்தரும் முக்கிய துறைகளில் உச்சம் வகித்துள்ளதுடன், 2025 ஆம் ஆண்டளவில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ஈட்டப்பட்ட அந்நியச் செலாவணியின் பெரும்பகுதி நாட்டில் தக்கவைக்கப்படுகிறது. அது பணியாற்றும் மனித மூலதனத்திற்கு ஊதியமாக செலுத்தப்படுகிறது. இது தொற்றுநோய் காலப்பகுதியிலும், அதன்பின் தற்போதைய நிதி நெருக்கடியிலிருந்தும் மீண்டு எழுகின்ற திறனைக் காண்பித்த ஒரு தொழில்துறையாக இது திகழ்வதுடன், ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பில் வளர்ச்சி கண்டு வருகிறது. உலகளாவிய வாடிக்கையாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு தனது பணிக் கடப்பாடுகளை வழங்க நெகிழ்வுடனான பணி ஏற்பாடுகளை உள்வாங்கி வருகிறது. தகவல் தொழில்நுட்பம்-வணிக செயல்பாடுகள் முகாமைத்துவ நிறுவனங்கள் மற்றும் பணியாளர்கள் மின்சார விநியோக இடையூறுகளை சமாளிக்க சூரிய எரிசக்தித் தீர்வுகளை கைக்கொள்வதை ஊக்குவிக்க தொழில்துறை முயற்சி எடுத்துள்ளது. தொழில்துறை மட்டத்திலான உள்வாங்கல், தேசிய மின் விநியோகத்தில் சார்ந்திருப்பதை குறைக்கும் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்கான அந்நிய செலாவணி வெளியேற்றத்தை குறைக்க உதவும். தகவல் தொழில்நுட்பம்/வணிகச் செயல்பாடுகள் முகாமைத்துவ தொழில்துறைக்கான சூழலுக்குத் தீங்கற்ற இடமாக இலங்கையை நிலைநிறுத்துவது SLASSCOM இன் இலக்காகும். நிலைபேற்றிலுடனான எரிசக்தி மூலங்களை உள்வாங்குவது மற்றும் பணியாளர்களின் நலனைக் கவனிப்பது எமது சூழல், சமூகம் மற்றும் ஆட்சி அதிகாரம் சார்ந்த இலக்குகளை நோக்கி முன்னேறிச் செல்ல உதவும். எனவே, தொழில்துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் உச்ச அமைப்பாக, சூரிய எரிசக்தி உற்பத்தி மற்றும் மகத்தான அளவில் எரிசக்தி தன்னிறைவுக்காக தொழில்துறைக்கு நிலைபேற்றியலுடனான கடனுதவியை வழங்க DFCC வங்கியுடன் கைகோர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

DFCC வங்கி தனது நிலைபேற்றியல் மூலோபாயத்தின் மூலம் அனைவருக்கும் ஒரு மீள் எழுச்சித் திறன் கொண்ட உலகத்தைத் தோற்றுவிக்க முயல்கிறது. 2020 இல் தோற்றுவிக்கப்பட்டு, நடைமுறைப்படுத்தப்பட்ட DFCC வங்கியின் நிலைபேற்றியல் மூலோபாயம் அடுத்த தசாப்தத்திற்கான வங்கியின் நிலைபேற்றியல் இலக்குகளை காண்பிக்கிறது. DFCC வங்கி இலங்கையில் மிகவும் நிலைபேற்றியல் கொண்ட மற்றும் மீள் எழுச்சித்திறன் கொண்ட வங்கிகளில் ஒன்றாக தலைப்படுவதை உறுதிசெய்து, தன்னுடன் தொடர்புபட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தலைசிறந்த மதிப்பைத் தோற்றுவித்து, வழங்குவதே இதன் நோக்கமாகும்.
_DSC8586 copy.tif Background Edit copy


Share with your friend

Leave a Reply

%d bloggers like this: