WSO2 இன் அடுத்த கட்ட வளர்ச்சிக்காக நிறுவனத்தில் மூன்று நிர்வாக பதவி உயர்வுகள்

Share with your friend

கலாநிதி ஸ்ரீநாத் பெரேரா சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரி மற்றும் தலைமை மென்பொருள் வடிவமைப்பாளர்; கலாநிதி மலித் ஜெயசிங்க ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு துணைத் தலைமை அதிகாரி; ரதிக் கொலம்பகே துணைத் தலைமை அதிகாரி – பெருநிறுவன சந்தைப்படுத்தல்

– டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கான தொழில்நுட்பத்தில் முன்னிலை வகித்து வருகின்ற WSO2, தனது அடுத்த கட்ட வளர்ச்சியை விரைவுபடுத்துவதால், நிறுவனத்தின் தயாரிப்பு புத்தாக்கம் மற்றும் வர்த்தகநாமம் தொடர்பான உலகளாவிய விழிப்புணர்வுக்கு உதவியாக மூன்று புதிய நிர்வாக பதவி உயர்வுகள் தொடர்பில் இன்று அறிவித்துள்ளது.

  • கலாநிதி ஸ்ரீநாத் பெரேரா அவர்கள் முன்னர் ஆராய்ச்சிக்கான துணைத் தலைமை அதிகாரியாக பணியாற்றியிருந்த நிலையில் தற்போது சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியாகவும், தலைமை மென்பொருள் வடிவமைப்பாளராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளார்.
  • கலாநிதி மலித் ஜெயசிங்க அவர்கள் முன்னர் மென்பொருள் தள வடிவமைப்பிற்கான சிரேஷ்ட பணிப்பாளராக பணியாற்றியிருந்த நிலையில், தற்போது ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவுக்கான துணைத் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.  
  • ரதிக் கொலம்பகே அவர்கள் முன்னர் சந்தைப்படுத்தல் சேவைகளுக்கான சிரேஷ்ட பணிப்பாளராகவும், பெருநிறுவன சந்தைப்படுத்தலுக்கான பதில் தலைமை அதிகாரியாகவும் பணியாற்றியிருந்த நிலையில் தற்போது பெருநிறுவன சந்தைப்படுத்தலுக்கான துணைத் தலைமை அதிகாரியாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

உலகில் பல நூற்றுக்கணக்கான பாரிய நிறுவனங்கள், உச்ச பல்கலைக்கழகங்கள் மற்றும் அரசாங்கங்கள் உட்பட பல்லாயிரக்கணக்கான நிறுவனங்கள் தமது டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்தை முன்னெடுத்துச் செல்வதில் WSO2 இன் வெளிப்படை மூலநிரல், மேகக்கணினி சார்ந்த தீர்வுகளை நம்பியுள்ளதுடன், ஆண்டுதோறும் 18 டிரில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனைகளைச் செய்கின்றன. பயன்பாட்டு நிரலாக்க இடைமுகங்கள் (API) முகாமைத்துவம், ஒருங்கிணைப்பு மற்றும் வாடிக்கையாளர் அடையாளம் மற்றும் அணுகல் முகாமைத்துவம் (CIAM) ஆகியவற்றிற்கு WSO2 ஐப் பயன்படுத்தி, இந்த நிறுவனங்கள் தங்கள் டிஜிட்டல் சேவைகள் மற்றும் பயன்பாடுகளை பாதுகாப்பாக வழங்க தங்கள் API களின் முழுமையான ஆற்றலையும் பயன்படுத்துகின்றன.

“நிறுவனங்களின் டிஜிட்டல் சார்ந்த முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான எங்கள் அடுத்த தலைமுறை மேகக்கணினி சார்ந்த தீர்வுகளுக்கு உதவ, எங்கள் உலகளாவிய அணியை நாம் தொடர்ந்து விரைவாக விரிவுபடுத்தி வருகிறோம். அதே நேரத்தில், எங்கள் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் தற்போதைய அணி உறுப்பினர்களின் பங்களிப்புகளை நாங்கள் இனங்கண்டு, அவற்றைக் கட்டியெழுப்ப விரும்புகிறோம்,” என்று WSO2 இன் ஸ்தாபகரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான கலாநிதி சஞ்ஜிவ வீரவரண அவர்கள் குறிப்பிட்டார். “ஸ்ரீநாத், மலித் மற்றும் ரதிக் ஆகியோரின் பதவி உயர்வுகள் அவர்களின் புத்தாக்கம், தலைமைத்துவம் மற்றும் உலகத் தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்குவதற்கான சந்தை தேவைகள் பற்றிய ஆழமான புரிந்துணர்வையும், அத்துடன் நமது அடுத்த கட்ட வளர்ச்சியில் அவர்கள் வகிக்கப்போகின்ற மூலோபாய பாத்திரங்களையும் அங்கீகரிக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கலாநிதி ஸ்ரீநாத் பெரேரா: டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கான மூலோபாயங்களை வரையறுத்தல்

சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியாகவும், தலைமை மென்பொருள் வடிவமைப்பாளராகவும், ஸ்ரீநாத் அவர்கள் WSO2 இன் எதிர்கால தயாரிப்பு வழங்கல்களை வடிவமைப்பதில் கவனம் செலுத்துவதுடன், WSO2 இன் தற்போதைய மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களின் டிஜிட்டல் மூலோபாயங்களை வலுப்படுத்துவார். WSO2 இன் முன்னணி ஆராய்ச்சி முயற்சிகளின் வெற்றிகள் மற்றும் உலகின் பல முன்னணி நிறுவனங்களால் பயன்படுத்தப்படும் பல டசின் கணக்கான கணினி கட்டமைப்புகள் மற்றும் கருவிகளை வடிவமைத்து உருவாக்குவதில் 17 ஆண்டுகளுக்கு மேலான அனுபவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது பணிப்பொறுப்பு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீநாத் அவர்கள் அப்பாச்சே எக்ஸிஸ்2 (Apache Axis2) செயற்திட்டத்தின் இணை ஸ்தாபகரும் மற்றும் அப்பாச்சே சொஃப்ட்வெயார் பவுண்டேஷனின் (Apache Software Foundation) இன் அங்கத்தவரும் ஆவார். அப்பாச்சே எக்ஸிஸ்2 (Apache Axis2), அப்பாச்சே ஏர்வதா (Apache Airvatha) மற்றும்  சித்தி கொம்ப்ளெக்ஸ் இவென்ட் புரொசசிங் என்ஜின் (Siddhi complex event processing (CEP) engine) உள்ளிட்ட ஒரு டசின் நிஜ-உலக விநியோக கணினி கட்டமைப்புகளை அவர் இணை வடிவமைத்துள்ளதுடன், இரண்டு புத்தகங்கள், 40 க்கும் மேற்பட்ட உடன் பணியாற்றுவோர் மதிப்பாய்விற்குட்பட்ட கட்டுரைகளையும் எழுதியுள்ளார். அவர் தனது கலாநிதிப் பட்டத்தை அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகத்தில் இருந்து 2009 இல் பெற்றுள்ளார்.

கலாநிதி மலித் ஜெயசிங்க: ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவு வழியாக தொடர்ச்சியான புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்லல்  

ஆராய்ச்சி மற்றும் செயற்கை நுண்ணறிவின் துணைத் தலைமை அதிகாரியாக, நிறுவனத்தின் அடுத்த தலைமுறை தீர்வுகளுக்குப் பயன்படுத்தப்படும் ஆராய்ச்சியை முன்னெடுப்பதன் மூலம் WSO2 இன் தொடர்ச்சியான புத்தாக்க பாரம்பரியத்தை மலித் தொடர்ந்து கட்டியெழுப்புவார். விநியோகிக்கப்பட்ட கணினி கட்டமைப்புகள், மேகக்கணினி கட்டமைப்பு, செயல்திறன் பொறியியல் மற்றும் கணினி கற்றல் அறிவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் கவனம் செலுத்தப்படும்.

மலித் ஒரு கணினி விஞ்ஞானி, எழுத்தாளர், வலைப் பதிவர் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர் எனப் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளதுடன், சிக்கலான மென்பொருள் கட்டமைப்புகளை வடிவமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் உச்சப்படுத்துதல் ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் பெற்றவர். WSO2 இல் இணைந்து கொள்வதற்கு முன்பு, அவர் பல்வேறு தொழில்நுட்ப பதவிகளில் பல்தேசிய நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். மலித் அவர்கள் கணினி அறிவியல் மற்றும் உருவாக்குனர் மாநாடுகளில் அடிக்கடி பேச்சாளராக கலந்து கொள்வதுடன், “பெர்போர்மன்ஸ் ஒஃப் வெப் சேர்விசஸ்” (Performance of Web Services) என்ற புத்தகத்தின் இணை எழுத்தாளரும் ஆவார். இவர் அவுஸ்திரேலியாவின் RMIT பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியலில் கலாநிதிப் பட்டம் பெற்றுள்ளார்.

ரதிக் கொலம்பகே: WSO2 வர்த்தகநாமம் தொடர்பான உலகளாவிய விழிப்புணர்வை அதிகரித்தல்

பெரு நிறுவன சந்தைப்படுத்தலுக்கான துணைத் தலைமை அதிகாரியாக, டிஜிட்டல் வளர்ச்சிக்கான நம்பிக்கை மிக்க பங்காளராக, அதன் வளர்ந்து வரும் வகிபாகத்திற்கு ஒரு முன்னணி வெளிப்படை மூலநிரல் விற்பனையாளராக நிறுவனத்தின் வர்த்தகநாமம் தொடர்பில் உலகளாவிய விழிப்புணர்வை அதன் பாரம்பரியத்திற்கு அப்பால் விரிவுபடுத்துவதில் ரதிக் அவர்கள் WSO2 நிறுவனத்தை வழிநடத்திச் செல்வார். சிரேஷ்ட பணிப்பாளர் – சந்தைப்படுத்தல் சேவைகள் மற்றும் பெருநிறுவன சந்தைப்படுத்தலுக்கான பதில் தலைமை அதிகாரியாக ஆற்றியுள்ள வெற்றிகரமான பணிகளை அவர் மேலும் கட்டியெழுப்புவதன் மூலம், முக்கிய உலகளாவிய சந்தைகளில் WSO2 இன் தோற்றத்தை மேம்படுத்துவதுடன், சந்தைப்படுத்தல் அணியின் செயல்திறன் மற்றும் பெறுபேற்றுத்திறனை உச்சப்படுத்துவதில் பயனுள்ள சந்தைப்படுத்தல் மூலோபாயங்கள் மற்றும் வசீகரிக்கின்ற விளம்பர பிரச்சாரங்களையும் அவர்கள் வடிவமைப்பார்.  

WSO2 இல் இணைந்து கொள்வதற்கு முன்பு, ரதிக் அவர்கள் உலகெங்கிலும் உள்ள பல சந்தைகளில் adidas மற்றும் Reebok வர்த்தகநாமங்களுக்கான வாடிக்கையாளர்களை திசைதிருப்புதல் மற்றும் மூலோபாய விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முயற்சிகளை தோற்றுவித்து, செயல்படுத்தியுள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்துடன், தொழில்துறை நுண்ணறிவு மற்றும் சந்தையில் பிரதிபலிக்கப்படுகின்ற கருத்துக்களை சரியான நேரத்தில் ரதிக் அவர்கள் தொடர்ந்து தொகுத்து வழங்குகிறார்.

###

WSO2 நிறுவனம் தொடர்பான விபரங்கள் 

2005 இல் ஸ்தாபிக்கப்பட்ட WSO2, ஆற்றல்மிக்க நிறுவனங்களை கட்டியெழுப்ப தேவையான மென்பொருட்களை உருவாக்குகிறது. எமது வெளிப்படை மூலநிரல் (opensource), API முதன்மை மற்றும் பரவலாக்கப்பட்ட (decentralized) அணுகுமுறையானது மென்பொருள் உருவாக்குனர்கள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பாளர்களை சிறந்த செயல்திறனாளர்களாக்குவதுடன் அவர்களின் நிறுவனத்தின் அல்லது வாடிக்கையாளர்களின் மாறும் தேவைகளை பூர்த்திசெய்யக்கூடிய மென்பொருட்களை துரிதகதியில் தயாரிப்பதற்கும் உதவுகிறது. அதிக திறன்கள் பொருந்திய ஒருங்கிணைந்த தளம் (integrated platform), வெளிப்படை மூலநிரல் அணுகுமுறை, மற்றும் நிறுவனங்கள் டிஜிட்டல் முறையில் மீள புத்துருவாக்கமடைவதற்கான அணுகுமுறை என்பவற்றிற்காக வாடிக்கையாளர்கள் எம்மை தேர்வு செய்கின்றனர். ஒருங்கிணைப்புகளை (integrations) உருவாக்குதல், அவற்றை மீள உபயோகித்தல், இயக்குதல் மற்றும் நிர்வகித்தல் என்பவற்றிற்கான எமது தயாரிப்புகளை நிறுவனத்தின் கணினிகளிலோ அல்லது மேக கணினியிலோ உபயோகிக்க முடிவது மற்றும் எமது வெளிப்படை மூலநிரல் அணுகுமுறை என்பன வாடிக்கையாளர்களை ஒரு குறிப்பிட்ட விற்பனையாளருடனோ அல்லது ஒரு குறிப்பிட்ட வகையறைக்குள்ளோ கட்டிப்போடாமல், அவர்களுக்கு பலவிதமான சாத்தியப்பாடுகளை உருவாக்குகின்றன. WSO2, உலகளாவியரீதியில் 800 க்கும் மேற்பட்ட பொறியியலாளர்கள், ஆலோசகர்கள் மற்றும் நிபுணர்களை பணியிலமர்த்தியுள்ளதுடன், அவுஸ்திரேலியா, பிரேசில், ஜேர்மனி, இலங்கை, ஐக்கிய அரபு இராச்சியம், இங்கிலாந்து, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது. இன்று, நூற்றுக்கணக்கான முன்னணி வர்த்தகநாமங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான உலகளாவிய செயற்திட்டங்கள் என்பன WSO2 ஒருங்கிணைப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண்டுதோறும் 18 டிரில்லியனுக்கும் மேற்பட்ட பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றன. மேலும் விபரங்களுக்கு https://wso2.com ஐப் பார்வையிடவும். எம்முடன் தொடர்புகளைப் பேண LinkedIn மற்றும் Twitter.      

வர்த்தகச் சின்னங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட வர்த்தகச் சின்னங்கள் முறையே உரிமையாண்மையாளர்களின் உடமையாகும்.   


Share with your friend
Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply