இலங்கையின் நிறுவனசார் முதலீடுகளுக்கு காணப்படும் வாய்ப்புகள் தொடர்பில் SLT-MOBITEL மற்றும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகளிடையே கலந்துரையாடல்

Share with your friend

இலங்கையின் முன்னணி தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே. சங் மற்றும் இதர அமெரிக்க உயரதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்திருந்தது. அமெரிக்காவை தளமாகக் கொண்ட வியாபாரங்களுக்கு இலங்கையில் காணப்படும் முதலீட்டு வாய்ப்புகள் பற்றி இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டிருந்தது. 

SLT-MOBITEL இன் சிரேஷ்ட அதிகாரிகளான குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ (இடமிருந்து 3ஆம் நபர்), குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன (வலமிருந்து 3ஆம் நபர்) ஆகியோர் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே. சங் (நடுவில்) மற்றும் இதர அதிகாரிகளுடன் சந்திப்பை மேற்கொண்ட போது எடுத்துக் கொண்ட படம். அருகாமையில், இலங்கையின் அமெரிக்க தூதரகத்தின் பொருளாதார அதிகாரி லுயிஸ் ஜி. சலஸ் (வலமிருந்து 2ஆம் நபர்), ஸ்ரீ லங்கா ரெலிகொம் பணிப்பாளர் மொஹான் வீரகோன் (இடமிருந்து 2ஆம் நபர்), ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக ஆர். அபேசிங்க (வலம்) மற்றும் மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாாரென (இடம்) ஆகியோர் காணப்படுகின்றனர்.

இந்த கலந்துரையாடலில் SLT-MOBITEL இன் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன மற்றும் SLT-MOBITEL இன் இதர சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் போது, அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலீடுகளை மேற்கொள்ளக்கூடிய முக்கியமான பகுதிகளில் ஒன்றாக தொலைத்தொடர்பாடல் துறை திகழ்கின்றமை இனங்காணப்பட்டது. பிரதானமாக கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற எதிர்பாராத தேசிய சவால்கள் நிறைந்த சூழ்நிலைகளில், இந்தத் துறையினூடாக பல முக்கியமான தொழிற்துறைகள் மற்றும் சேவைகளை இணைப்பில் வைத்திருக்க முடியும் என்பதால் இது பற்றி அதிகளவு கவனம் செலுத்தப்பட்டிருந்தது. அத்துடன், தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திலும் அதிகளவு முதலீட்டு வாய்ப்புகள் நிலவுகின்றமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

இந்த சந்திப்பு தொடர்பில் ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையின் முன்னேற்றத்தில் பங்களிப்பு வழங்கும் தேசிய நிறுவனம் எனும் வகையில், எம்மைப் போன்ற சிந்தனையுடையவர்களை நாடுவது எமது இலக்காகும். இலங்கையில் பெருமளவு அமெரிக்க வியாபாரங்களை முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிக்கும் முதலாவது படிமுறையாக இந்த சந்திப்பு அமைந்துள்ளது. பரந்தளவு, பன்முகப்படுத்தப்பட்ட முதலீட்டாளர் சமூகத்தை நாட்டினுள் கட்டியெழுப்புவது மிகவும் முக்கியமானதாகும். எமது உயர் இணைப்புத் தீர்வுகள், தயார்நிலையிலுள்ள தொழில்நுட்ப கட்டமைப்புகள், மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு ஆற்றல்களுடன், உலகின் எந்தவொரு நிறுவனசார் முதலீட்டாளருக்குமான சிறந்த தெரிவுப் பங்காளராக திகழக்கூடியதாக இருக்கும்.” என்றார்.


Share with your friend