அதிகம் அறியப்படாத பயிர்கள்; உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பின் அடுத்த கட்டமாகும்
இலங்கையின் முன்னோர்கள், தங்கள் சுற்றுச்சூழலுடன் இணக்கமாக வாழ்ந்தனர். நாட்டின் வரலாற்றை விபரிக்கும் வரலாற்றுக் குறிப்புகள் மற்றும் ஏடுகளில் இயற்கையுடனான அவர்களின் கூட்டுறவு பற்றித் தெளிவாக அறியலாம். இலங்கையின் கலாசாரமானது இன்னும் அந்த கடந்த காலத்தின் தொடர்ச்சியாக இருந்து வருகின்றன. அவை மங்கிச் செல்கின்ற போதிலும், பாதிக்கப்படக்கூடிய, குறைந்த வருமானம் கொண்ட விவசாய சமூகங்களுக்கு மத்தியில் கிராமிய, வளர்ச்சியடையாத பகுதிகளில் அது இன்றும் காணப்படுகின்றது.

இந்த பண்டைய கால மக்கள், நாட்டின் பலவிதமான காலநிலை வலயங்களில் காணப்படும் பரந்த காடுகள் மற்றும் வனப்பகுதிகளில் ஒரு காலத்தில் உணவு சேகரித்தனர். பின்னர் அதே தாவர வகைகளை பழக்கப்படுத்தி, சொந்தமாக பயிரிட்டு, பலன் பெற்றதோடு, அவற்றின் பயன்பாடுகள் மற்றும் நன்மைகள் பற்றிய அறிவை அடுத்த தலைமுறைகளுக்கு கொண்டு சென்றனர். இலங்கையானது, ஐக்கிய இராச்சியத்தின் (UK) பாதி அளவு கூட இல்லாத ஒரு சிறிய தீவாக இருந்த போதிலும், 700 இற்கும் மேற்பட்ட விவசாய பெறுமதி கொண்ட தாவர வகைகளின் தாயகமாக திகழ்கின்றது. இந்த அற்புதமான புள்ளிவிபரம் நாட்டின் தாவர உயிர்ப் பல்வகைமை வளத்தை காட்டுகின்றது.
இயற்கை அன்னை எமது முன்னோர்களுக்கு கருணை மிக்கதாக இருந்தாள். அவர்களின் உணவுகளில் பல்வேறுபட்ட தானியங்கள், கிழங்குகள், மரக்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள், பழங்கள் உள்ளடங்கியிருந்தன. அவர்கள் சாப்பிட்ட உணவு சேதனமான, சத்தான, பல்வகைத் தன்மை கொண்டதாக இருந்தன. குறிப்பாக அவை விநியோகச் சங்கிலிகளை நம்பியிருக்கவில்லை அல்லது உலகளாவிய சந்தையின் ஏற்ற இறக்கங்களில் தங்கியிருக்கவில்லை. பருவகால மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள், உணவுப் பாதுகாப்பு தொடர்பான பயத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக புதிய உணவுகளை கொண்டு வந்தன.
இலங்கையின் சமையல் பாரம்பரியம் எளிமையானதாகும் என்பதோடு, மனதுக்கு ஏற்றதாகவும், வீட்டுக்கு உரித்தானதாகவும் காணப்படுகின்றது. ஆயினும் இன்றும், அவ்வாறானவற்றை உண்ணக்கூடியதாக இருந்தால், அதை ஒரு சுவையான கறியாக மாற்றலாம் எனும் அம்சம் காணப்படுகின்றது. இருப்பினும், தானியங்கள், கிழங்குகள், மரக்கறிகள், பருப்பு வகைகள், கீரைகள் மற்றும் பழ வகைகளின் தெரிவுகள் குறைந்துள்ளது. அவை தனிநபரின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவையாக அமைந்தமையே இதற்கான காரணமாகும். இலாப நோக்கம், உலகளாவிய பங்குதாரர்கள், பன்னாட்டு விவசாய நிறுவனங்களின் நலன்கள், ஊடகங்கள் மற்றும் உலகளாவிய அரசியல் ஆகியன பிராந்திய மற்றும் தேசிய உணவுகளை கட்டமைப்பதில் பாரிய அளவில் பங்கு வகிக்கின்றன.
ஆயினும், நுண் அல்லது நனோ அளவிலான இந்த பற்றாக்குறை ஏற்படுவதற்கு, விழிப்புணர்வு இல்லாமை மற்றும் மாற்று வழிகள் குறைவாக இருப்பதே, பெரும்பாலும் காரணமாக அமைகின்றன. பொதுவாக, பல்பொருள் அங்காடிகள், சந்தைகள் மற்றும் கடைகளில் கிடைக்கும் வணிக ரீதியாக பயிரிடப்படும் பயிர்களையே கிராமிய மற்றும் நகர்ப்புற நுகர்வோர் நம்பியுள்ளனர். விவசாயிகள் மற்றும் கிராமிய விவசாய சமூகங்கள் வணிகப் பயிர்களை பயிரிடுகின்றனர். ஏனெனில் அவற்றிற்கான கேள்வி அதிகமாகும். இது ஒரு வட்ட நிகழ்வாகும். நோக்கத்துடன் கூடிய முறையான தலையீடு, மூலோபாயக் கொள்கைகள் மற்றும் நிதி முயற்சிகள் இன்றி, ‘பயன்படுத்தப்படாத’ பாரம்பரிய பயிர் வகைகள், படிப்படியாக இல்லாமலாக்கப்பட்டு, இறுதியில் முற்றாக மறக்கடிக்கப்படும் நிலைக்கு தள்ளப்படும்.
இலங்கை அதன் இயற்கை வளம் மற்றும் உயிர்ப் பல்வகைமைகளைப் பேணவும், பாதுகாப்பதற்குமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. சனத் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீற்றருக்கு 300 இற்கும் அதிகமாகவும், வனப்பகுதி 30% ஆகவும் பேணும் உலகின் மூன்று நாடுகளில் இலங்கையும் ஒன்றாகும். அதற்கமைய, இலங்கையைத் தவிர, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய இரண்டு நாடுகள் மட்டுமே இத்தகைய வன கட்டமைப்பை பேணுகின்றன (ஆதாரம்: இலங்கை வன பாதுகாப்புத் திணைக்களம்).
சனத்தொகை மற்றும் இயற்கை வளங்களுக்கான தேவை வேகமாக அதிகரிப்பதால், இலங்கையின் உயிர்ப் பல்வகைமைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்ய இந்த வழக்கமான நடைமுறைகள் மட்டும் போதுமானதா?
இதற்கான எளிமையான பதில் இல்லை என்பதாகும்.
அதனாலேயே புத்தாக்கமான தீர்வுகளின் தேவை அவசியமாகின்றது. நவீன இலங்கைக்கு பாரம்பரிய ரீதியான, பயன்படுத்தப்படாத பயிர்களை மீண்டும் அறிமுகப்படுத்துவது அத்தகைய ஒரு தீர்வாகும். இது உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பில் ஒரு புதிய அணுகுமுறையாகும். இந்த பாரம்பரிய பரம்பரைப் பயிர்கள் பல்வேறுபட்ட காலநிலைக்கு ஈடுகொடுக்கக் கூடியவையாகும் என்பதுடன் இலங்கையின் காலநிலைக்கு ஏற்றவையுமாகும். எனவே தீங்கு விளைவிக்கும் பூச்சிகொல்லிகளின் குறைந்தபட்ச பயன்பாட்டுடன் இவற்றைப் பயிரிடலாம். போசணை மற்றும் போதிய விளைச்சலைப் பெறக்கூடியதாக இருப்பினும் இவை வணிக ரீதியாக பயிரிடப்படுவதில்லை. குறிப்பாக வேகமாக அதிகரித்து வரும் காலநிலை தாக்கங்களுக்கு மத்தியில், உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் இலங்கையர்களின் போசணைத் தேவைகளை பூர்த்தி செய்வதிலும் இத்தாவரங்களால் முக்கிய பங்கு வகிக்க முடியும்.
வணிக விவசாயம், விநியோகச் சங்கிலிகள் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான விவாதத்தில் உணவு மைல்கள் (உணவு ஓரிடத்தில் பயிரிடப்பட்டு மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படும் தூரம்) ஒரு முக்கிய விடயமாகும். பண்ணையில் இருந்து உணவுத் தட்டுக்கு விளைபொருட்கள் பயணிக்க வேண்டிய தூரம் அதிகரிக்கும் போது, விளைபொருட்களின் விலை, போக்குவரத்துக்காக பயன்படுத்தப்படும் எரிபொருட்களின் அளவு, விளைபொருட்களை பாதுகாக்க பயன்படுத்தப்படும் இரசாயனங்களின் அளவு மற்றும் உணவு கெட்டுப்போதல் ஆகிய விடயங்கள் அதிகரிக்கும். பயன்படுத்தப்படாத பயிர்களை பயிரிடுவது உணவு மைல்களை குறைக்கும். ஏனெனில் இலங்கையின் வெவ்வேறு காலநிலை வலயங்களுக்கு ஏற்ற பல்வேறு தாவரங்கள் உள்ளதோடு, இவை உள்நாட்டில் பயிரிடப்படக் கூடியதாகும்.
2022 ஆம் ஆண்டின் சமூகப் பொருளாதார நெருக்கடியானது, நாட்டின் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் உள்ள பல்வேறு பாதிக்கப்படக்கூடிய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள் மற்றும் சமூகங்களின் கொள்வனவு செய்யக் கூடிய ஆற்றலில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தியது. இந்த தாவரங்களின் உணவுத் திறன் பற்றி இந்த சமூகங்களுக்குத் தெரிந்திருந்தாலும், அது வழக்கத்திலிருந்து விலகிவிட்டது என்பதால், அவற்றைப் பயன்படுத்துவது வழக்கமான விடயமாக இல்லை. நகர்ப்புறங்களில் உள்ள பாதிக்கப்படக்கூடிய சமூகங்களுக்கு, இந்த மாற்று உணவுகள் எளிதில் கிடைப்பதில்லை. இது மாற வேண்டிய விடயமாகும்.
ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) மற்றும் இலங்கையில் உள்ள உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன சுற்றாடல் அமைச்சுடன் இணைந்து, பயன்படுத்தப்படாத பயிர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அவற்றின் விளைச்சல் மற்றும் நுகர்வுகளை ஊக்குவிக்கவும் ‘இலங்கையில் குறைவாக அறியப்படும் உணவுகள்’ எனும் தலைப்பில் சமீபத்தில் ஒரு பிரசாரத்தை ஆரம்பித்திருந்தது.
இந்த நிகழ்ச்சித் திட்டமானது, Early Action Support (EAS) இன் நிதியுதவி பெற்ற Global Environment Facility (GEF) இன் நடவடிக்கையாகும். இது தேசிய கொள்கைகள் மற்றும் உத்திகளில் உயிர்ப் பல்வகைமை பாதுகாப்பை ஒருங்கிணைப்பதன் மூலம், உலகளாவிய உயிர்ப் பல்வகைமை கட்டமைப்பை இலங்கை செயற்படுத்துவதை துரிதப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்ற ஆரம்ப நடவடிக்கைக்கான ஆதரவாக ஆரம்பிக்கப்பட்டது. WFP இன் Home-Grown School Feeding (HGSF) திட்ட வலையமைப்புடன், 30,000 இற்கும் மேற்பட்ட உணவு வழங்குநர்கள் இணைந்துள்ளனர். இந்த திட்டமானது, ஏழு மாவட்டங்களில் உள்ள 200,000 இற்கும் மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு, அதிகம் அறியப்படாத உணவுகள் சென்றடைவதையும், இலங்கையில் காணப்படும் ஏராளமான உண்ணக்கூடிய தாவரங்கள் மற்றும் மாறுபட்ட உணவின் ஆரோக்கிய நன்மைகளை அடைவதற்கும் உயிர்ப் பல்வகைமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இளைஞர்களிடையே அறிமுகப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.