ஐரோப்பிய ஒன்றியம் நிதியுதவி வழங்கும் பயனுறுதிமிக்க வகையில் பிணக்கைத் தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) திட்டமானது, நாட்டில் மாற்றுவழி பிணக்குத் தீர்வு (ADR) பொறிமுறைகளை வலுப்படுத்த ‘நியாயமான மாற்றுவழியை வலுப்படுத்தல்’ என்ற தலைப்பிலான கொள்கை விளக்கத்தை வெளியிட்டது.
கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற இந்த வெளியீட்டு நிகழ்வில், கௌரவ. நீதியமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அபிவிருத்தி ஒத்துழைப்புக்கான (இடைக்கால) தலைவர் பியட்ரிஸ் புஸ்ஸி, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் பிரியநாத் பெரேரா, மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் தலைவர் கௌரவ. நீதியரசர் யாப்பா, மற்றும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்கள், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வில் உரையாற்றிய பியட்ரிஸ் புஸ்ஸி, “இலங்கையில் மத்தியஸ்தத்தின் முக்கியத்துவம் இரண்டு வகைப்படும், ஏனெனில் இது குடிமக்களுக்கு நீதிக்கான எளிதான மற்றும் சிக்கனமான அணுகலை உறுதிசெய்கிறது, அதே நேரத்தில் இது இலங்கை நீதிமன்ற அமைப்பின் சுமையை குறைக்கும் வாய்ப்பையும் வழங்குகிறது. இலங்கையின் சனசமூக மத்தியஸ்த சபைகளின் மாதிரியை, அதன் செயல்திறன் மற்றும் உள்ளூர் பிணக்குகளை அதிகரிப்பதைத் தடுக்கும் வகையில் சமூகங்களுக்கு வழங்கும் மதிப்பிற்காக, நான் பாராட்ட விரும்புகிறேன்.” என்று கூறினார்.
சபையில் கருத்து தெரிவித்த கௌரவ. கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ இவ்வாறு கூறினார், “பிணக்குகளை வினைத்திறனாக தீர்ப்பதற்கு தேவையான சட்ட, கொள்கை மற்றும் நிறுவன கட்டமைப்பை உருவாக்குவதை உறுதிப்படுத்துவது அமைச்சின் முக்கிய பணிகளில் ஒன்றாகும். மத்தியஸ்தம் உட்பட மாற்றுவழி பிணக்குத் தீர்வும் இதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறைகளின் செயல்திறன் குறித்து, குறிப்பாக மத்தியஸ்தம் பற்றி, சமூகம் மற்றும் பங்குதாரர்களிடையே பல்வேறு கருத்துக்கள் உள்ளன. இதற்கிடையில், இலங்கையில் பிணக்குத் தீர்வு செயல்முறைகளை மேம்படுத்த அமைச்சகம் பல சீர்திருத்தங்களைத் தொடங்கியுள்ளது. அதன்படி, மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறைகள் தொடர்பான ஆதார அடிப்படையிலான முடிவுகள் ஏடுப்பதை எளிதாக்குவதற்கு இது போன்ற ஆய்வுகளின் முக்கியத்துவத்தை அமைச்சகம் எடுத்துக்காட்டுகிறது. இந்த வெற்றிகரமான முன்முயற்சிக்கு அமைச்சகம் SEDR திட்டத்திற்கு வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புகிறது.”
கொள்கை விளக்கமானது 2022 ஆம் ஆண்டில் SEDR ஆல் நியமிக்கப்பட்டு ஆராய்ச்சி நிலையத்தால் (CEPA) நடத்தப்பட்ட அறிவு, மனப்பாங்கு மற்றும் நடைமுறைகள் (Knowledge, Attitudes and Practices – KAP) கருத்தாய்வின் கண்டுபிடிப்புகளை அடிப்படையாகக் கொண்டது. இந்தக் கருத்தாய்வு, மத்தியஸ்த சபைகள் உட்பட பல்வேறு சமூக-அடிப்படையிலான மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறைகளின் அறிவு, மனப்பாங்கு மற்றும் நடைமுறைகளை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டது. இது நாட்டில் உள்ள ஆறு மாவட்டங்களை உள்ளடக்கியது, மேலும் மூன்று முக்கிய இனக்குழுக்களின் 1,712 குடும்பங்களை இலக்காகக் கொண்டது.
வெளியீட்டு நிகழ்வில் ஒரு நிபுணர் குழு கலந்துரையாடல் நடத்தப்பட்டது. இதன் போது நிபுணர்கள் KAP கருத்தாய்வின் கண்டுபிடிப்புகள் மற்றும் நாட்டில் ADR முன்முயற்சிகளை வலுப்படுத்த கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பேசினர். மத்தியஸ்த சேவைகள் பற்றிய பொது விழிப்புணர்வை எவ்வாறு அதிகரிப்பது, சமூக ஈடுபாடு மற்றும் பங்கேற்பின் முக்கியத்துவம், மத்தியஸ்தத்தில் பெண்களின் பங்கு மற்றும் மிகவும் பயனுள்ள ADR தகவல்தொடர்பு உத்திகளின் அவசியம் குறித்து கலந்துரையாடல் கவனம் செலுத்தியது.
மத்தியஸ்த பயிற்சி மற்றும் மத்தியஸ்தர்களுக்கான திறனை வளர்ப்பதில் முதலீடு செய்வது, மத்தியஸ்தம் மற்றும் ADR பற்றிய பொது விழிப்புணர்வை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையில் மத்தியஸ்தத்திற்கான சட்ட மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை கொள்கை விளக்கம் எடுத்துக்காட்டுகிறது. சில முக்கிய ஆய்வு முடிவுகள் பின்வருமாறு:
- சனசமூக மத்தியஸ்த சபைகளை அணுகியவர்களில் 89% பேர், தங்கள் பிணக்குகள் தீர்க்கப்பட்ட விதத்தில் திருப்தி அடைவதாகக் கூறினர்.
- சனசமூக மத்தியஸ்த சபைகளைப் பயன்படுத்திய 80% பேர் எதிர்காலத்தில் அவற்றை மீண்டும் பயன்படுத்த வாய்ப்புள்ளது.
- பெரும்பாலான பதிலளித்தவர்கள், பாரம்பரிய முறையான நீதி முறையைப் பயன்படுத்துவதை விட, தங்கள் பிணக்குகளைத் தீர்க்க சனசமூக மத்தியஸ்த சபைகளை பயன்படுத்துவது அல்லது மதத் தலைவர்களை அணுகுவது மலிவானது மற்றும் விரைவானது என்பதை உறுதிப்படுத்தினர்.
- பதிலளித்தவர்களில் 73%, குறிப்பாக இளைய சமுதாயம், சனசமூக மத்தியஸ்த சபை செயல்முறைகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாகக் குறிப்பிடுகின்றனர்.
- பதிலளித்தவர்களில் 67% எந்த ADR மன்றத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான பிரதிநிதித்துவம் வகிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
கொள்கைச் விளக்கத்தை ஆங்கிலம், சிங்களம் மற்றும் தமிழில் SEDR இன் https://www.sedrsrilanka.org/resources இணையதளத்தில் அணுகலாம்
SEDR பற்றி
பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) என்பது ஆசியா நிலையத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படும் நான்கு வருட நீதிக்கான அணுகல் திட்டமாகும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து பகுதியினரையும் உள்வாங்கிய ஜனநாயகப் பங்கேற்பு (STRIDE) எனும் அதன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.