கொமர்ஷல் வங்கி பாங்கசூரன்ஸ் நாளிகைக்கான 2022 ஆம் ஆண்டுக்குரிய வருடாந்த விருதுகள் வழங்கும் நிகழ்வை யூனியன் அஷ்யூரன்ஸ் அண்மையில் முன்னெடுத்திருந்தது. ‘Above and Beyond,’ எனும் தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில், கடந்த 12 வருட காலமாக தொடர்ச்சியாக வளர்ச்சியைப் பதிவு செய்திருந்த பங்காண்மையின், மற்றுமொரு சிறந்த வருடத்தின் பெறுபேறுகளை கொண்டாடும் வகையில் இந்நிகழ்வு அமைந்திருந்தது. இரு நிறுவனங்களினதும் உயரதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டதுடன், கொமர்ஷல் வங்கியின் சிறப்பாக செயலாற்றியிருந்த பிராந்தியங்கள், கிளைகள் மற்றும் ஊழியர்களுக்கு வெகுமதிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இலங்கையின் முன்னணி பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநரான யூனியன் அஷ்யூரன்ஸ் மற்றும் நாட்டின் மாபெரும் தனியார் வங்கியான கொமர்ஷல் வங்கி ஆகியவற்றுக்கிடையிலான உறுதியான பிணைப்பை குறிப்பதாக ‘Above and Beyond’ அமைந்திருந்தது. இந்நிகழ்வில் யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ், கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க, யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக மற்றும் கொமர்ஷல் வங்கியின் பிரத்தியேக வங்கியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் திலக்ஷன் ஹெட்டியாரச்சி ஆகியோருடன், இரு நிறுவனங்களினதும் நிறைவேற்றுக் குழுவைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த வெற்றிகரமான பங்காண்மை தொடர்பில், யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜுட் கோம்ஸ் கருத்துத் தெரிவிக்கையில், இலங்கையில் காப்புறுதி பரவலை விரிவாக்கம் செய்வதற்கு நீண்ட காலமாக நிலைத்திருக்கும் இந்தப் பங்காண்மை முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது. இலங்கையர்களின் கனவுகளுக்கு வலுவூட்டுவதுடன், காப்பீட்டு இடைவெளியைக் குறைப்பதற்கு பங்களிப்புச் செய்கின்றது. இலங்கையின் மாபெரும் பாங்கசூரன்ஸ் சேவை வழங்குநர் எனும் வகையில், தொடர்ச்சியான இரண்டு வருடங்களில் புதிய வியாபார கட்டுப்பணத் தொகையில் ரூ. 1 பில்லியனை நாம் கடந்துள்ளோம், இந்த வெற்றிகரமான பயணத்தில் கொமர்ஷல் வங்கி உள்ளங்கம் பெறுகின்றது.” என்றார்.
கொமர்ஷல் வங்கியின் சிறப்பாக செயலாற்றியிருந்த அனைவருக்கும் கோம்ஸ் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்ததுடன், அவர்களின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்காக விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். “எமது பங்காண்மையினூடாக, இலங்கையின் பாங்கசூரன்ஸ் துறை வலிமைப்படுத்தப்பட்டிருந்ததுடன், வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய தீர்வுகளை பெற்றுக் கொடுக்கப்பட்டிருந்தது.” என அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சனத் மனதுங்க கருத்துத் தெரிவிக்கையில், “தசாப்த காலம் நீண்ட எமது பங்காண்மைக்கு மேலும் வலுச் சேர்ப்பதாக அவர்களின் சாதனைகள் அமைந்துள்ளன. கடந்த காலங்களில் இந்தப் பங்காண்மை சிறப்பாக வளர்ச்சியடைந்திருந்தது. எமது வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளினூடாக பெருமளவு அனுகூலம் பெறுவதுடன், டிஜிட்டல் பகுதியில் எமது பங்காண்மை வலுப் பெற்றுள்ளதுடன், ஒப்பற்ற வாடிக்கையாளர் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதாக அமைந்துள்ளது.” என்றார்.
யூனியன் அஷ்யூரன்ஸ் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி செனத் ஜயதிலக கருத்துத் தெரிவிக்கையில், “சிறந்த முறையில் தமது நிபுணத்துவத்தையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியிருந்தமைக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதுடன், சவால்கள் நிறைந்த சூழலில் இவர்கள் இயங்கியிருந்தமையை நாம் மறந்துவிடக்கூடாது. இவர்களின் சாதனைகளினூடாக, சிறந்த பெறுபேறுகளை எய்துவதற்கு சேவைச் சிறப்பு என்பது பிரதான செயற்பாட்டாளராக அமைந்துள்ளமை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.” என்றார்.
கொமர்ஷல் வங்கி பிரத்தியேக வங்கியியல் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் திலக்ஷன் ஹெட்டியாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், “பாங்கசூரன்ஸ் பிரிவின் வினைத்திறன் குறிப்பிடத்தக்க வகையில் உயர்ந்ததாக அமைந்துள்ளது. இவர்களின் செயற்பாட்டினூடாக இலங்கையில் ஆயுள் காப்புறுதித் துறையில் அதிகளவு ஈடுபாடு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.” என்றார்.
‘Above and Beyond’ விருதுகள் வழங்கும் நிகழ்வில், 2022 ஆம் ஆண்டுக்கான கிளை சம்பியனாக – வவுனியா கிளை தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை நெல்லியடி கிளை பெற்றுக் கொண்டதுடன், மூன்றாமிடத்தை வெள்ளவத்தை கிளை பெற்றுக் கொண்டது. 2022 ஆம் ஆண்டுக்கான சிறந்த பிராந்திய சம்பியனாக, வட பிராந்தியம் தெரிவு செய்யப்பட்டிருந்தது. இரண்டாமிடத்தை கொழும்பு பிராந்தியமும், மூன்றாமிடத்தை ஊவா சப்ரகமுவ பிராந்தியமும் பெற்றுக் கொண்டன.
கொழும்புப் பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட இலங்கையின் மாபெரும் நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்சின் அங்கத்துவ நிறுவனமாக யூனியன் அஷ்யூரன்ஸ் திகழ்கின்றது. துறையில் மூன்று தசாப்த கால வெற்றிகரமான சேவையை யூனியன் அஷ்யூரன்ஸ் பூர்த்தி செய்துள்ளதுடன் சந்தை மூலதனவாக்கமாக ரூ. 16.4 பில்லியனைக் கொண்டுள்ளது. ஆயுள் நிதியமாக ரூ. 54.9 பில்லியனையும், 2022 டிசம்பர் மாதமளவில் கொண்டிருந்தது. இலங்கையர்களின் கனவுக்கு வலுச்சேர்க்கும் வகையில் இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு, ஓய்வூதியம் மற்றும் முதலீடு போன்ற ஆயுள் காப்புறுதியுடன் தொடர்புடைய தீர்வுகளை இலங்கையர்ளுக்கு வழங்குகின்றது. நாடளாவிய ரீதியில் பரந்த கிளை வலையமைப்பினூடாக 4,000 க்கும் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கும் யூனியன் அஷ்யூரன்ஸ், தொடர்ச்சியான தனது ஊழியர்கள், தீர்வுகள் மற்றும் செயன்முறைகள் போன்றவற்றில் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய முன்னேற்றங்களை மேற்கொள்ளும் வகையில் முதலீடுகளை மேற்கொண்ட வண்ணமுள்ளது.