DFCC வங்கி, ஹட்டன் நஷனல் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் சம்பத் வங்கி பிஎல்சி ஆகியவை அங்குரார்ப்பண “Bankers on Bicycles” சைக்கிள் ஓட்ட நிகழ்விற்காக சமீபத்தில் கைகோர்த்து செயல்பட்டுள்ளன. இலங்கையில் முதன்முதலாக இடம்பெற்ற “Bankers on Bicycles” நிகழ்வானது உங்கள் வாழ்க்கை நடைமுறையில் சைக்கிள் ஓட்டுதலை இணைத்து ஒரு நிலைபேற்றியல் கொண்ட வாழ்க்கை முறையை மேம்படுத்த முயல்கிறது. இது மாதாந்தம் இடம்பெறும் ஒரு நிகழ்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், இதில் பங்கேற்கின்ற ஒவ்வொரு வங்கியும் சுழற்சி அடிப்படையில் செயல்பாடுகளுக்கு பொறுப்பு வகிக்கவுள்ளது.
2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி காலை 6 மணிக்கு கொழும்பு 03 இல் உள்ள DFCC வங்கியின் தலைமை அலுவலகத்தில் அங்குரார்ப்பண சைக்கிள் சவாரி ஆரம்பமானது. இதில் பங்குபற்றிய நான்கு வங்கிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150 க்கும் மேற்பட்ட வங்கியாளர்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்றவர்களில் நான்கு வங்கிகளின் பிரதம நிறைவேற்று அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட நிர்வாகத்தினர் மற்றும் அனைத்து பணி நிலை ஊழியர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பல்வேறு வகையான சைக்கிள் ஓட்டுநர்கள் உள்ளடங்கியிருந்ததுடன், நிகழ்வு அனைத்து ஊழியர்களும் பங்கேற்கும் வகையில் அமையப்பெற்றது. இம்முறை, சைக்கிள் ஓட்டுபவர்களை தெஹிவளைக்கு அழைத்துச் சென்று திரும்பும் நகர சுற்றுவட்டத்தை “Bankers on Bicycles” நிகழ்வு ஒழுங்கமைத்திருந்தது.
இந்த முயற்சி குறித்து DFCC வங்கியின் அன்றாட வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் துறைப் பிரிவுக்கான சிரேஷ்ட துணைத் தலைமை அதிகாரியான ஆசிரி இத்தமல்கொட அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “2020 ஆம் ஆண்டு எங்களின் 65 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் போது சைக்கிள் ஓட்டுதலை ஒரு வாழ்க்கைமுறை தெரிவாக நாம் அறிமுகப்படுத்தியிருந்தோம். அதன்பிறகு, நாங்கள் எங்கள் ஊழியர்களுக்கு சைக்கிள் ஓட்டும் நாட்களை வழக்கமாக ஏற்பாடு செய்து வருகிறோம். குறிப்பாக, ஹோட்டன் பிளேஸிலுள்ள எமது Pinnacle Centre இல் வாடிக்கையாளர்களுக்கும் சைக்கிள் ஓட்டும் வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். நாட்டில், குறிப்பாக கண்டி மற்றும் குருநாகலில், எமது நிலைபேற்றியல் மூலோபாயம் மற்றும் வேலைத்திட்டத்தால் ஈர்க்கப்பட்டு, நிலைபேற்றியல் கொண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேம்படுத்த விரும்புகிறோம். சைக்கிள் ஓட்டுதல் அதற்கு பாரிய பங்களிப்பாக இருக்க முடியும். இந்த முயற்சியை விரிவுபடுத்துவதில் தொழில்துறையில் ஒருமித்த சிந்தனை கொண்டவர்களுடன் கூட்டாளராக செயற்பட முடிந்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். ஒரு சிறந்த வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை உருவாக்குவது மட்டுமல்லாமல், வங்கித் தொழில்துறையில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும் மற்றும் தோழமை உணர்வை வளர்க்கவும் வழிகோலும்,” என்று குறிப்பிட்டார்.
இம்முயற்சி குறித்து, ஹட்டன் நஷனல் வங்கியின் துணைப் பொது முகாமையாளரும், தலைமை மனித வள அதிகாரியும், தலைமை வளர்ச்சி மாற்ற அதிகாரியுமான சிராந்தி குரே அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ஆகஸ்ட் 26 ஆம் திகதியன்று DFCC, நேஷன்ஸ் டிரஸ்ட், சம்பத் மற்றும் HNB ஆகிய வங்கிகளால் ஏற்பாடு செய்யப்பட்ட சிநேகபூர்வமான சைக்கிள் சவாரிக்காக, HNB சைக்கிள் ஓட்டுநர்கள் ‘Bankers on Bicycles’ பெரும் எண்ணிக்கையில் இணைந்து கொண்டனர். சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். எமது ஊழியர்களிடையே நிலைபேற்றியல் கொண்ட வாழ்க்கை முறை, ஆரோக்கியம் மற்றும் உடற்தகுதி ஆகியவற்றை மேம்படுத்துவதிலும், நட்புணர்வு மற்றும் தோழமையில் பொதுவான நற்காரணங்களுக்காக ஒன்றிணைவதிலும் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
சம்பத் வங்கியின் பிரதம மனித வள அதிகாரியான லலித் வெரகொட அவர்கள் மேலும் தெரிவிக்கையில், “இது ஒரு உற்சாகமான அனுபவமாக இருந்தது,” என்று குறிப்பிட்டார். “சைக்கிள் ஓட்டுதல் என்பது தனியாக ரசிக்கக்கூடிய செயல்பாடுகளில் ஒன்றாகும். ஆனால் ஒரு குழுவாக இச்செயல்பாட்டை முன்னெடுக்கும் போது அதனை மற்றொரு மட்டத்துக்கு கொண்டு செல்ல முடியும். இம்முயற்சியானது சுற்றுச்சூழலுக்கு அளப்பரிய நன்மைகளை அளிக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இந்த செயல்திட்டத்தில் பங்குதாரராக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த முயற்சி ஒட்டுமொத்த வங்கித்துறைக்கும் உத்வேகம் அளிக்க உதவும் என்றும், விரைவில் மேலும் பல வங்கிகள் இதில் பங்கேற்கும் என்றும் நம்புகிறேன். அதிக எண்ணிக்கையில் மக்கள் சைக்கிளில் வேலைக்குச் செல்வதால், வீதியில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவடையும். இதனால் வாகன நெரிசல் குறைவடைதால், வீதிப்போக்குவரத்தின் பாதுகாப்பு அதிகரிக்கும். மற்ற வங்கியாளர்களுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டுவது ஒரு சிறந்த அனுபவம்,” என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை விளக்கிய நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கியின் பிரதான இடர் முகாமைத்துவ அதிகாரியான சமிலா சுமதிரத்ன அவர்கள், “எமது பங்குதாரர்கள் அனைவரின் நலனுக்கும் அதிக மதிப்பு அளிக்கும் ஒரு நிறுவனமாக, ஆரோக்கியமான போக்குவரத்து முறையாக சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் தக்க தருணத்தில் முன்னெடுக்கப்படும் இந்த முயற்சிக்காக எங்களுடைய சக வங்கிகளுடன் கூட்டுச் சேர்வதில் நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி பெருமை கொள்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள் சுற்றுச்சூழலை பாதிக்கின்றன. நமது காபன் அடிச்சுவட்டை ஒன்றிணைந்து குறைத்து, சிறந்த பூமியை உருவாக்கி, அதன் பலனாக எமது ஒட்டுமொத்த வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தவும், பங்களிக்க அனைவரையும் இந்த நல்ல நோக்கத்தில் ஒன்றுசேர அழைக்க விரும்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.
ஹட்டன் நஷனல் வங்கி, சம்பத் வங்கி, நேஷன்ஸ் ட்ரஸ்ட் வங்கி மற்றும் DFCC வங்கி ஆகியன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான சைக்கிள் ஓட்ட வசதிகளுக்காக குறிப்பிடத்தக்க அளவில் முதலீடு செய்துள்ளன. இதில் பங்குபற்றிய வங்கிகள் இந்த வசதிகளை “Bankers on Bicycles” சைக்கிள் ஓட்டுதல் நிகழ்வுகளுக்கும் மேற்குறிப்பிட்ட வசதிகளை ஏற்படுத்தித் தருவதாக உறுதியளித்துள்ளன. சைக்கிளோட்டி அலுவலகத்திற்கு வந்த பின்னர் குளிப்பதற்கான வசதி, சைக்கிள் தரிப்பிட வசதி, ஓய்வெடுக்கும் வசதிகள், சைக்கிள் வாங்குவதற்கான இலகு கொடுப்பனவுத் திட்டங்கள் மற்றும் பல வசதிகள் இதில் அடங்கியுள்ளன. ஒன்றாக இணைந்து செயல்படுவதால், நிலைபேற்றியலில் கவனம் செலுத்தும் வங்கிகளின் இந்தக் கூட்டமைப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் வங்கிகளுக்கிடையேயான ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது. சவால்களை சமாளிக்க மக்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு. எதிர்காலத்தில், “Bankers on Bicycles” முயற்சியில் பங்குபெறும் வங்கிகள் இந்த முயற்சியில் இன்னும் கூடுதலான வங்கிகள் இணையும் என்று நம்புகின்றன. இது இலங்கையின் வங்கித்துறையில் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை மேம்படுத்துதல் மற்றும் நாடளாவிய ஒத்துழைப்பை மேம்படுத்தல் ஆகியவற்றை இறுதி இலக்காகக் கொண்டுள்ளது.