அலியான்ஸ் லைஃப் லங்கா நிறுவனம் கார்கில்ஸ் வங்கியுடன் கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது

Share with your friend

உலகளாவிய காப்புறுதி குழு  நிறுவனமான  Allianz SE இன் உறுப்பு நிறுவனமான அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட், இலங்கையின் மிகப் பழமையான மற்றும் மிகப்பெரிய பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான கார்கில்ஸ் குழுமத்தின் வங்கிச் சேவைப் பிரிவான கார்கில்ஸ் வங்கியுடன் அண்மையில் ஒரு முக்கிய கூட்டாண்மையில் கைச்சாத்திட்டுள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம், அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆனது கார்கில்ஸ் வங்கி வாடிக்கையாளர்களுக்கு சௌகரியமான மற்றும் விரிவான குறைவடையும் தவணைக் காப்புறுதி (Decreasing Term Insurance – DTA) தீர்வுகளை வழங்கும். இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கார்கில்ஸ் வங்கியின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விசேட வைபவத்தில் இந்த கூட்டாண்மை முறைப்படி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இரு நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர். அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் சார்பாக அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெயலால் ஹேவாவசம் இதில் கைச்சாத்திட்டுள்ளதுடன், கார்கில்ஸ் வங்கியின் சார்பாக சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான வங்கிச் சேவை ஆகியவற்றின் உதவிப் பொது முகாமையாளரான லசந்த மகேந்திரராஜா அவர்கள் கைச்சாத்திட்டார்.

புதிய கூட்டாண்மை தொடர்பில் கருத்து வெளியிட்ட அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான ஜயலால் ஹேவாவசம் அவர்கள், “இலங்கையின் காப்புறுதித் துறையில் முக்கியத்துவம் மற்றும் செல்வாக்கு அதிகரிப்புடனான ஒரு பங்குதாரராக, நாம் தொடர்ந்து புதிய கூட்டாண்மைகள் மற்றும் கூட்டணிகளை உருவாக்கி, கூட்டு மூலோபாயத்துடனான முயற்சிகள் மற்றும் வாய்ப்புகளை வெளிக்கொணர விரும்புகிறோம். இதன் மூலமாக எங்கள் கூட்டாளர்களும் நாமும் பரஸ்பரம் பயன்பெற முடியும், மிக முக்கியமாக, எங்கள் கூட்டு வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் பெறுமதியை வழங்குகிறோம். உலகளாவிய காப்புறுதி குழு நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமாக இருப்பதால், தொழில்துறையில் சில சிறந்த காப்புறுதித் திட்ட ஏற்பாடுகளுடன், அதிசிறந்த மதிப்பு, சௌகரியம் மற்றும் சேவையை வழங்கும் ஸ்தானத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே, அனைத்து இலங்கை மக்களுக்கும் தலைசிறந்த நிதிச் சேவைகளை வழங்குவதற்கு நாங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதால், இலங்கையின் மிகவும் முற்போக்கான வங்கிகளில் ஒன்றுடன் இந்த கூட்டாண்மையில் காலடியெடுத்து வைப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என்று குறிப்பிட்டார்.  

அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆரம்பத்தில் கார்கில்ஸ் வங்கியுடன் இணைந்து வழங்கும் முக்கிய காப்புறுதித் தயாரிப்புகளில் குறைவடையும் தவணைக் காப்புறுதியும் (Decreasing Term Insurance) உள்ளடங்கும். இது காப்புறுதித் திட்டத்தின் காலம் முடிவடையும் வரையில் செலுத்தக்கூடிய சாத்தியக்கூறுகள் அவ்வப்போது குறையும் மற்றும் கடன் பாதுகாப்புக் கொள்கைகளைக் கொண்டுள்ளவாறு காப்புறுதியின் ஒரு வடிவமாகும். செலுத்த வேண்டிய கடன்களைக் கொண்டுள்ள ஒரு நபரின் அகால மரணம் காரணமாக அவரது அன்புக்குரியவர்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சுமையை குறைக்க இது உதவுகிறது. இவை ஒன்றுசேர, இந்தத் தயாரிப்புகள் கடன் வாங்குவதை ஒழுங்குபடுத்தவும், கடன் வாங்குபவர்கள் மற்றும் கடன் வழங்குபவர்கள் இருவரையும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அபாயத்திலிருந்து காப்புறுதியைப் பெற்றிடவும் உதவும். இக்கூட்டாண்மை தொடர்ந்து மேற்கொண்டு செல்லப்படும் போது, அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் கார்கில்ஸ் வங்கி ஆகியன இணைந்து சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் சார்ந்த நவீன இலங்கையர்களுக்கு ஏற்ற புதிய தயாரிப்புகள் மற்றும் சேவைகளை அறிமுகப்படுத்தும்.

“கார்கில்ஸ் வங்கியில், ஒவ்வொரு இலங்கையரின் முன்னேற்ற உணர்வை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்,” என்று கார்கில்ஸ் வங்கியின் சில்லறை வங்கிச்சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கான வங்கிச் சேவை ஆகியவற்றின் உதவிப் பொது முகாமையாளரான லசந்த மகேந்திரராஜா அவர்கள் இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டார். அவர் இக்கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை விளக்குகையில், “வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பாகச் சேவை செய்யவும், ஒன்றாக வளரவும் எங்கள் இரு நிறுவனங்களும் இணைந்து பணியாற்றுவதற்கான வாய்ப்பை இது வழங்கும். இலங்கையின் மிகவும் முற்போக்கான வங்கியாகவும், அடிமட்டத்தில் விவசாய வணிகங்கள் மற்றும் நுண், சிறிய, நடுத்தர அளவிலான தொழில்ட முயற்சிகளுக்கு கடன் வழங்குவதில் பெரிதும் ஈடுபாடு கொண்டுள்ள வங்கி என்ற வகையில், உலகளாவிய காப்புறுதி வழங்குனருடன் கூட்டுசேர்வதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு விரைவான, திறமையான, நம்பகமான மற்றும் புத்தாக்கமான நிதி தீர்வுகளை இதன் மூலமாக வழங்க முடியும். நாங்கள் முன்னோடிகளாக விளங்கும் ஒரு தொழில்துறையில், அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் நிறுவனத்தின் டிஜிட்டல் சேவையை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். அவர்களுடன் இணைந்து, புதிய தீர்வுகளை புத்தாக்கத்தின் மூலமாக வெளிக்கொண்டு வந்து, வடிவமைப்பதற்கு ஆவலாக உள்ளோம்,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார்.  

கார்கில்ஸ் வங்கி தொடர்பான விபரங்கள்  

இலங்கையில் அனைவரையும் அரவணைக்கும் வங்கியாகத் திகழ வேண்டும் என்ற இலட்சியத்துடன், கார்கில்ஸ் குழுமத்தின் உறுப்பு நிறுவனமான கார்கில்ஸ் வங்கி, வாடிக்கையாளர்களுக்கு சேமிப்புக் கணக்குகள், முதலீட்டுத் திட்டமிடல் கணக்குகள், கடன் மற்றும் டெபிட் அட்டைகள், நுகர்வோர் கடன்கள், விவசாயம் மற்றும் நுண்கடன் சேவை, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மற்றும் வணிக வங்கிச் சேவைகள், வாணிப வசதிகள் உட்பட முழு அளவிலான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்குகிறது. 24 மணி நேர அணுகல் மற்றும் முழுமையான சௌகரியத்தை உறுதி செய்யும் வகையில், நெகிழ்வான மற்றும் சௌகரியமான டிஜிட்டல் வங்கிச் சேவைகளை இவ்வங்கி வழங்குகிறது.

அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா நிறுவனம் தொடர்பான விபரங்கள்

அலியான்ஸ் லங்கா என கூட்டாக அறியப்படுகின்ற அலியான்ஸ் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் மற்றும் அலியான்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் லங்கா லிமிட்டெட் ஆகியன காப்புறுதி மற்றும் சொத்து முகாமைத்துவ வணிகத்தில் பிரதானமான சேவைகளை வழங்கி வருகின்ற ஜேர்மனியின் மூனிச் மாநகரைத் தலைமையிடமாகக் கொண்ட உலகளாவிய நிதியியல் சேவை வழங்குநரான Allianz SE இன் முழுமையான உரிமையாண்மையின் கீழான துணை நிறுவனங்களாகும். அலியான்ஸ் குழுமத்தின் உலகளாவிய பலம் மற்றும் உறுதியான மூலதனமயமாக்கல், உள்ளூர் நிபுணத்துவம் மற்றும் வணிக அறிவு ஆகியவற்றுடன் இணைந்து, அலியான்ஸ் லங்காவின் வெற்றிக்கான சக்திவாய்ந்த சூத்திரமாக உள்ளது.


Share with your friend