அன்று நடைபெற்ற உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் (S4IG) நிகழ்ச்சித் திட்ட பங்குதாரர்களின் நிலைத்தன்மை மாநாடு, பொது மற்றும் தனியார் துறைகளைச் சேர்ந்த முக்கிய பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இந்நிகழ்வு இவ்வாண்டில் நிறைவடையவுள்ள S4IG நிகழ்ச்சித் திட்டத்திற்கும் அதன் பங்குதாரர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறித்தது.
அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முன்முயற்சியான S4IG, இலங்கையின் கல்வி அமைச்சுடன் இணைந்து திறன் மேம்பாட்டின் மூலம் புறக்கணிக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய நபர்களுக்கு நிலையான வேலை உருவாக்கம், அதிகரித்த வருமானம் மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதார மீட்சி மற்றும் உள்வாங்கப்பட்ட சமூகப் பொருளாதார அபிவிருத்தியில் அவுஸ்திரேலிய ஆதரவின் முக்கிய பங்காக இது விளங்குகிறது. சுற்றுலா மதிப்பு சங்கிலி முழுவதும் உள்வாங்கப்பட்ட திறன் மேம்பாட்டை உறுதிசெய்து, பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.
இத்திட்டம் 2024இல் நிறைவுறும் நிலையில் அதற்கு அப்பாலும் S4IGஇன் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு தமது அர்ப்பணிப்பை எமது பங்குதாரர்கள் இம் மாநாட்டின் போது மீள் உறுதி செய்தனர். சுற்றுலாத் துறையில் தனிநபர்கள் மற்றும் சமூகங்களை மேம்படுத்திய புதுமையான மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளை அவர்கள் பாராட்டினர். இலங்கையின் பொருளாதார வளர்ச்சியில் சுற்றுலா ஒரு முக்கிய அங்கமாக இருப்பதால், S4IGஇன் தாக்கம் தனிநபர் திறன் மேம்பாட்டிற்கு அப்பால் பரந்த பொருளாதாரத்திற்கு பயனளிக்கும் வகையில் விரிவடைந்துள்ளது.
இலங்கையில் இத்திட்டத்தின் முன்முயற்சிகளின் கருவாக கொள்கை அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளின் உள்வாங்கலும் வலுப்படுத்தலும் அமைந்துள்ளது. பொது மற்றும் தனியார் துறைகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழில்முறை சமையல் பாடநெறி, அதனை நடத்தும் நிறுவனங்களுக்கு நிதி ரீதியாக வெற்றிகரமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும், வணிக பயிற்சிக்கான புதுமையான அணுகுமுறை நாடு முழுவதும் 170 சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (MSMEs) வளர்ச்சிக்கு பங்களிக்கிறது. உரிமம் பெற்ற பயிற்சியாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன் MSMEகள் தனிப்பயனாக்கப்பட்ட பயிற்சி சேவைகளால் பயனடைகின்றன. மேலும் உள்ளூர் சமூகங்களை மேம்படுத்தும் மற்றும் சுற்றுலாத்தல வளர்ச்சியை ஊக்குவிக்கும் e-tourism மாதிரியானது, இலங்கையின் முன்னணி விருந்தோம்பல் பயிற்சி நிறுவனமான இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் மேலாண்மை நிறுவனம் (SLITHM) ஊடாக கட்டணம் செலுத்தப்படும் பாடத்திட்டமாக தொடங்கப்படவுள்ளது. இறுதியாக, ‘The Hotel Operations Multitasker Course’ நாடு முழுவதும் உள்ள MSME வணிக உரிமையாளர்கள் மற்றும் பயிற்சி வழங்குநர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று வருகிறது.
தொழிற்பயிற்சி அதிகாரசபையின் (VTA) உப தலைவர் திரு.லக்ஷ்மன் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில், “S4IG உடனான எங்கள் கூட்டாண்மை குறிப்பிடத்தக்க பெறுபேறுகளை அளித்துள்ளது. மேலும் இந்த நேர்மறையான பாதையில் எமது பயணத்தை தொடர நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.” என்றார். அவ்வாறே, மற்றொரு முக்கிய பங்குதாரரான மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவின் (TVEC) பிரதிப் பணிப்பாளர் நாயகம் திரு. ஜனக ஜயலத் தமது ஆதரவு தொடர்பாக கூறுகையில், “உலகளாவிய சிறந்த நடைமுறைகளை இணைத்துக் கொள்ள ஏற்புடைய சீரமைப்பு சுற்றறிக்கைகளை தக்க நேரத்தில் புதுப்பிப்போம்” என்றார்.
Gamma PizzaKraft Lanka (Pvt) Ltdஇன் மக்கள் மற்றும் கலாச்சாரப் பணிப்பாளர் திரு.நுவன் ஜயவீர, தமது நிறுவனம் தற்போது 160 மாற்றுத்திறனாளிகளை பணியமர்த்தியுள்ளதாகவும் 2026ஆம் ஆண்டளவில் இந்த எண்ணிக்கையை இரட்டிப்பாக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
குழுத் தலைவர் ஸ்டீபன் லொட்சியாக் S4IGஇன் வெற்றிக்கு கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். அவர் கூறுகையில் “எங்கள் திறன் மாதிரிகள் உருவாக்கப்படுவது மட்டுமல்லாமல், இலங்கை முழுவதும் உள்ள எங்கள் அர்ப்பணிப்புள்ள பொது மற்றும் தனியார் பங்குதாரர்களால் உள்வாங்கப்பட்டு செயற்படுத்தப்படுகின்றன. இவ்வாண்டு நவம்பரில் S4IG நிறைவடைவதற்கு அப்பால் தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் மீதான அவர்களின் நேர்மறையான தாக்கத்தை அங்கீகரித்து, இந்த தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளை இலங்கைக்கு கொண்டு வருவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” என்றார்.
S4IG பற்றி:
அவுஸ்திரேலிய ஆதரவுடன் கூடிய உள்வாங்கப்பட்ட வளர்ச்சிக்கான திறன்கள் நிகழ்ச்சித் திட்டம் (S4IG, 2017-2024) திறன் இடைவெளிகளைக் குறைத்து, புதுமைகளை வளர்த்து இலங்கையின் சுற்றுலாத் துறையில் உள்வாங்கிய தன்மையை ஊக்குவிக்கும் முன்னோடித் திட்டமாகும். பின்பற்றக்கூடிய மாதிரிகளை காட்சிப்படுத்துவதன் மூலமும் புறக்கணிக்கப்பட்ட தனிநபர்களை ஊக்கப்படுத்துவதன் மூலமும் S4IG நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கிறது.