ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF), மொனாஷ் வர்த்தக பாடசாலை மற்றும் முகாமைத்துவ முதுகலை நிறுவனம் (PIM) ஆகியவற்றுடன் இணைந்து 2025 ஆடைத் தொழில் பற்றிய சர்வதேச மாநாட்டை கொழும்பில் அண்மையில் வெற்றிகரமாக நடத்தியது. 2018 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட முதல் மாநாட்டிற்குப் பின்னர், இது இரண்டாவது நிகழ்வாகும். இந்த நிகழ்வின் மூலம், உலகளாவிய ஆடைத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் உரையாடலை மேம்படுத்துவதற்கான JAAF இன் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

“ஆடைத் தொழிலின் நவீன சவால்கள் மற்றும் வாய்ப்புகள்” என்ற தொனிப்பொருளின் கீழ் மூன்று நாள் பயிற்சிப் பட்டறையாக நடத்தப்பட்ட இந்த மாநாட்டில், சுற்றுச்சூழல், சமூக மற்றும் ஆளுமை (ESG) நடைமுறைகள், மூடிய பொருளாதார மூலோபாயங்கள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உள்ளிட்ட ஆடைத் தொழில் எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்காக தொழில்துறை தலைவர்கள், அறிஞர்கள் மற்றும் நிலைத்தன்மை நிபுணர்கள் ஆகியோர் இதில் இணைந்து கொண்டனர்.
ஒமேகா லைன் லிமிடெட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஃபீலிக்ஸ் ஏ பிரணாந்து, MAS ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் குழு நிலைத்தன்மை வணிகப் பிரிவு பணிப்பாளர் நிமந்தி கூருகமகே, கட்டுப்பாட்டுச் சபையின் சார்பாக கயான் ரணசிங்க, நிலைத்தன்மை அபிவிருத்தி கவுன்சிலின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி சமிந்திரி சபரமாது மற்றும் KPMG இலங்கையின் சிரேஷ்ட பங்குதாரர் பியுமி சுமனசேகர போன்ற தொழில் தலைவர்கள் “ஆடைத் துறையின் தற்போதைய செயல்பாடுகள் மற்றும் ESG தொடர்பான முடிவுகளில் அவற்றின் தாக்கம்” குறித்து விவாதத்தில் பங்கேற்றனர். இலங்கையில் ESG தரநிலைகளுக்கான செயல்பாட்டு அணுகுமுறை, நிலையான உற்பத்தி முறைகளை முன்னிலைப்படுத்துதல் மற்றும் உலகளாவிய ஒழுங்குமுறை திட்டங்களை முன்வைப்பதற்காகத் தொழில்துறை நடவடிக்கை எடுப்பது போன்றவை இந்த விவாதத்தில் வலியுறுத்தப்பட்டன.

நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் மோகன் முனசிங்க அவர்களால் நடத்தப்பட்ட ஒரு முக்கிய உரையும் இந்த மாநாட்டில் இடம்பெற்றது. அதில், அவர் சீரான பசுமை வளர்ச்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, கார்பன் வெளியேற்றத்தை குறைப்பது மற்றும் வள-செயல்திறன் உற்பத்தி மாதிரிகளைப் பின்பற்றுவதற்காகத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்வில் நடத்தப்பட்ட ஒரு செயற்பாட்டுப் பயிற்சிப் பட்டறையில், தொழில்துறையின் பங்குதாரர்களை 2040 ஆம் ஆண்டில் அவர்கள் எதிர்பார்க்கும் ஆடைத் தொழிலைப் பற்றிய ஒரு தூரநோக்குப் பார்வையை உருவாக்குவதற்காக அழைக்கப்பட்டனர். நிலைத்தன்மை, AI அடிப்படையிலான தானியங்கி செயல்பாடுகள் மற்றும் விநியோக சங்கிலியில் உள்ள திறன்களை உருவாக்குவதற்கான திட்டங்களை வெளிப்படுத்த அவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். “இலங்கையின் ஆடைத் தொழிலுக்கு நமக்குத் தேவையான மூடிய எதிர்காலத்தை வடிவமைத்தல்” குறித்த விழிப்புணர்வு நிபுணர் கலந்துரையாடலும் இங்கு நடத்தப்பட்டது. இந்த நிபுணர் கலந்துரையாடலில், ஒரு மூடிய ஆடைத் தொழிலை உருவாக்குவதில் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து மேலும் ஆராயப்பட்டன.

நிகழ்வின் முக்கிய தருணங்களைச் சுருக்கமாகக் கூறும்போது, ஐக்கிய இராஜ்ஜியத்தின் Strathclyde பல்கலைக்கழகத்தின் தொழில்முனைவோர் மற்றும் தொழில்முனைவு துறையின் துணைத் தலைவர் பேராசிரியர் Jillian MacBryde கூறுகையில், “ஆடை உற்பத்தித் துறையின் பங்குதாரர்களுடன் மிகவும் விரிவான கலந்துரையாடலை நடத்த முடிந்தது. மூடிய பொருளாதாரம் மற்றும் ESG கொள்கைகள் இதன் தொனிப்பொருளாக அமைந்தமை குறிப்பிடத்தக்கது. இதில் பங்கேற்ற பல நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளில் நிலையான தன்மையை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை அறிந்துள்ளன, மேலும் வெற்றிக்கு தடையாக உள்ள வெளிப்புற சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பதில் தங்கள் கவனத்தை மையமாகக் கொண்டுள்ளன.” என தெரிவித்தார்.
புத்தாக்கமான உற்பத்தி, நெகிழ்வுத்திறன் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் ஆகியவற்றுக்கான தொழில்துறையின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி, நிலையான ஆடை உற்பத்தியில் ஒரு முன்னணி நாடாக இலங்கையின் நிலையை மேலும் வலுப்படுத்த இந்த மாநாடு உதவியமை குறிப்பபிடத்தக்கது.