ஆரோக்கியமான சூழலுக்கும் நிலைபேறான எதிர்காலத்துக்கும் நாடளாவிய ரீதியில் மர நடுகை திட்டத்தை SLT-MOBITEL ஆரம்பித்துள்ளது

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப மற்றும் தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குநரான SLT-MOBITEL, நாடளாவிய ரீதியில் “நாடு முழுவதிலும் சுவாசமும் உரமும் பயிரிடுவோம்” எனும் மர நடுகைத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. காற்றின் தரத்தை மேம்படுத்தவும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தை குறைப்பதில் பங்களிப்பு வழங்கும் வகையிலும் நிலைபேறான எதிர்காலத்தை கட்டியெழுப்புவதற்கான உறுதியான அர்ப்பணிப்பாக இந்தத் திட்டத்தை ஆரம்பித்துள்ளது. மொனராகலை, மீயாகல ஸ்ரீ மெத்தாராம விகாரையில் இந்தத் திட்டம் அண்மையில் SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ, SLT குழும பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன, SLT-MOBITEL இன் சிரேஷ்ட முகாமைத்துவத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பிராந்தியத்தைச் சேர்ந்த அரசாங்க அதிகாரிகளின் பங்கேற்புடன் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கையின் நாட்டிலுப்பை (Madhuca Longifolia) மரத்தை இந்தத் திட்டத்துக்காக SLT-MOBITEL தெரிவு செய்திருந்தது. இயற்கை பீடை கட்டுப்படுத்தியாக அமைந்திருப்பதுடன், சேதன உர தயாரிப்புக்கு பங்களிப்பு வழங்குவது, வளியை தூய்மையாக்குவது மற்றும் மூலிகை மருந்து வகைகள் தயாரிப்பில் பங்களிப்பு வழங்குவது போன்றவற்றைக் கொண்டுள்ளது. நிகழ்ச்சியின் முதல் அங்கமாக, மீயாகல ஆரம்ப பாடசாலையில் நாட்டிலுப்பை தாவரக் கன்றுகள் நடப்பட்டன. மீயாகல கிராமத்தைச் சேர்ந்தவர்களுக்கு 500 கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் தொடர்பாக SLT குழும தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “பொறுப்பு வாய்ந்த கூட்டாண்மை நிறுவனம் எனும் வகையில், நாம் சுவாசிக்கும் காற்றின் தரத்தை மேம்படுத்துவது, காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயற்பாடுகள் மற்றும் எமது பொதுவான சுகாதாரம் மற்றும் நலனை மேம்படுத்துவது போன்றவற்றில் பங்களிப்பு வழங்குவதற்கு எம்மை உறுதியாக அர்ப்பணித்துள்ளோம். பசுமையான சூழலுக்காக நாம் எமது நாடளாவிய ரீதியிலான திட்டத்தை ஆரம்பித்துள்ளதுடன், சூழலை பாதுகாப்பதற்கான எமது அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளோம். எம் ஒவ்வொருவராலும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.

SLT-MOBITEL இன் சூழல், சமூக மற்றும் ஆளுகை நிகழ்ச்சிகளின் ஒரு அங்கமாக அமைந்துள்ள மர நடுகைத் திட்டத்தினூடாக, வனாந்தரங்களை ஊக்குவித்தல், இயற்கை காபன் சமநிலையை பேணி, பச்சை இல்ல வாயுக்களை குறைத்தல், வளி சுத்திகரிப்புக்கு பங்களிப்பு வழங்கல், உயிரியல் பரம்பலை பாதுகாத்தல், சேதன உரத்தை தயாரித்தல் மற்றும் பொது மக்கள் மத்தியில் நாட்டிலுப்பை மரங்களை பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துதல் போன்றவற்றை இலக்காகக் கொண்டுள்ளது. மேலும், SLT-MOBITEL இனால் மர நடுகைத் திட்டங்களை ‘Thuru’ App ஊடாக கண்காணிப்பதுடன், ஒவ்வொரு மரத்தின் வளர்ச்சியையும் கண்காணிக்கக்கூடிய டிஜிட்டல் தீர்வாக அமைந்துள்ளது. அதனூடாக, மர நடுகைத் திட்டத்தின் வினைத்திறனை கண்காணித்துக் கொள்ள முடியும்.

சமூகத் தாக்கத்துக்கான தனது அர்ப்பணிப்பை உறுதி செய்யும் வகையில் SLT-MOBITEL இனால் மீயாகல ஆரம்ப பாடசாலை நூலகத்துக்கு புத்தகங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டிருந்தன. கிராமிய பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் அமைந்த, “மனமிருந்தால் புத்தகமொன்றை வழங்குங்கள்” எனும் நிகழ்ச்சியின் அங்கமாக இது அமைந்திருந்தது. 

சூழல் சவால்கள் தொடர்பில் கவனம் செலுத்தும் SLT-MOBITEL, நிலைபேறான சூழல் பாதுகாப்பு திட்டத்தை ஸ்ரீ லங்கா ப்ரீமியர் லீக் 2020 இடம்பெற்ற காலப்பகுதியில், ‘SLT – Mobitel Green Premier League’ (GPL) என்பதை ஆரம்பித்திருந்தது. ஒவ்வொரு போட்டியின் போதும் வெற்றியீட்டும் அணியினால் குவிக்கப்படும் ஓட்ட எண்ணிக்கைக்கு நிகரான மரக் கன்றுகளை நடும் வகையில் இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டிருந்தது. அதனூடாக வனாந்தரச் செய்கைக்கு பெருமளவு பங்களிப்பு வழங்க எதிர்பார்க்கப்பட்டது.


Share with your friend