“ஆஷரா முபாரகா 2024” பிரசங்க நிகழ்வுகளுக்கானஒளிபரப்பு மையமாக கொழும்பு தெரிவு

Share with your friend

தாவூதி போரா சமூகத்தின் 2024ஆம் ஆண்டுக்கான ஆஷரா முபாரகா நிகழ்வுகள் பாகிஸ்தானின் கராச்சியில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த நிகழ்வின் ஒளிபரப்பு மத்திய நிலையமாக கொழும்பில் அமைந்துள்ள போரா நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக 10 நாட்களுக்கு பல்வேறு தொனிப்பொருளின் கீழ் நடைபெறவுள்ள இந்த ஆன்மீக பிரசங்க நிகழ்வுக்கு உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு போரா சமூக நிலையங்களும் தங்களது ஆன்மீக பிரசங்க நிகழ்வுகளுடன் இணைந்து கொண்டாடுகின்றனர். இதில் மிகப் பெரிய ஆன்மீக பிரசங்க நிகழ்வு உலகளாவிய தாவூதி போரா சமூகத்தின் தலைவரான புனித சையத்னா முஃபத்தல் சைபுதீன் (Holiness Syedna Mufaddal Saifuddin) அவர்களது தலைமையில் நடைபெறவுள்ளது. தாவூதி போரா சமூக முன்னோர்களின் வழிகாட்டலைப் பின்பற்றி, சையத்னா சைஃபுதீன் அவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆஷரா முபாரகா நிகழ்வை நடத்துவதற்கான இடத்தை தெரிவு செய்வார். 

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆஷரா முபாரகா ஆன்மீக பிரசங்க நிகழ்வுகளை நடத்துவதற்கான இடமாக பாகிஸ்தானின் கராச்சியைத் தேர்ந்தெடுத்துள்ளார். அதேநேரம், போரா சமூகத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான உறுப்பினர்கள், கொழும்பில் வசிப்பவர்கள் மற்றும் விருந்தினர்களுக்கு இந்த நிகழ்வுகளை கராச்சியில் இருந்து நேரலையாக பார்ப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்த நிலையில், கொழும்பில் நடைபெறுகின்ற போரா ஆன்மீக மாநாடு தொடர்பில் அதன் திட்ட முகாமைத்துவக் குழு உறுப்பினர் Mufaddal Zainuddin கருத்து தெரிவிக்கையில், 

“ஆஷரா முபாரகா சொற்பொழிவுகளில் கலந்துகொள்ள உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் எங்கள் நாட்டுக்கு வருகை தந்துள்ள அனைத்து தாவூதி போரா விருந்தினர்களையும் நாங்கள் முழு மனதுடன் வரவேற்கிறோம். இந்த ஆண்டுக்கான ஆஷரா முபாரகா சபைகளை நடத்துவதற்கான வரவேற்பு நகரமாக பாகிஸ்தானின் கராச்சியை தாவூதி போரா சமூகத்தின் தலைவரான சையித் முஃபத்தல் சைபுதீன் தேர்வு செய்துள்ளார். எவ்வாறாயினும், ஆஷரா முபாரகா பிரசங்க நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புக்கான மத்திய நிலையமாக கொழும்பு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எங்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்.

அத்துடன், இந்த நிகழ்விற்காக 15,000க்கும் மேற்பட்ட தாவூதி போரா விருந்தினர்களை வரவேற்க மிகப் பெரிய ஆதரவும் அனுமதியும் வழங்கிய அரசாங்க அதிகாரிகள் மற்றும் உள்ளூர் அமைப்புகளுக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கின்றோம்,” என அவர் மேலும் கூறினார்.

ஆஷரா முபாரகா பிரசங்க நிகழ்வுகளில் பங்கேற்பது எங்கள் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த ஆன்மீகத்தையும், வளமான அனுபவத்தைக் கொடுக்கின்றது. இது சிந்தனை, கற்றல் மற்றும் ஒற்றுமையுடன் ஒன்றிணைவதற்கான நேரம் என்று தனது குடும்பத்துடன் பஹ்ரைனிலிருந்து கொழும்பிற்கு வந்த தாவூதி போரா விருந்தினர்களில் ஒருவரான கதீஜா அலியாஸ்கர் கூறினார்.

தாவூதி போரா விருந்தினர்களின் வருகைக்கு முன்னதாக, கொழும்பிலுள்ள போரா சமூகத்தினர் அவர்களின் வசதி மற்றும் நலனை கருத்தில் கொண்டு பிரமாண்டமானன ஏற்பாடுகளை செய்துள்ளனர். அதுமாத்திரமின்றி, அனைத்து விருந்தினர்களுக்கும் சிறந்த அனுபவத்தை உறுதிப்படுத்துவதற்காக, போக்குவரத்து, உணவு, தங்குமிடம் மற்றும் மருத்துவ வசதிகளை பொருள் முகாமைத்துவ குழு ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

‘ஆஷரா முபாரகா’ தொடர்பில்

ஆஷரா முபாரகா என்பது இஸ்லாமிய புத்தாண்டின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் முதல் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விசேட நிகழ்வாகும். இது மொஹமட் நபி (ஸல்), அவர்களது பேரன் இமாம் ஹுசைன், அவரது குடும்பத்தினர் மற்றும் தோழர்களது தியாகத்தை நினைவுகூறுவதாகும். எனவே, இதற்காக பல்வேறு தலைப்புகளில் ஆன்மீக பிரசங்க நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. இதில் சமகாலப் பிரச்சினைகள்; மற்றும் தனிப்பட்ட வளர்ச்சிக்கான வழிகாட்டுதலை வழங்குவதுடன், தேசபக்தி, இரக்கம் மற்றும் மனிதகுலத்திற்கான சேவையின் மதிப்புகளை வலியுறுத்துகின்றன.


Share with your friend