- ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டக்கூடிய துறையாக மாற்றத் தயாராகும் அமைச்சர் பத்திரண
- கண்காட்சியின் சந்தைப்படுத்தல் மற்றும் ஊக்குவித்தலில் மையப்புள்ளியாக ஊநலடழn ளுயிphசைந இரத்தினக்கல்
- இலங்கை திறந்தபடியும், வணிகத்திற்கு தயாராகவும் உள்ளதை கோடிட்டுக் காட்டும் கண்காட்சி
2023 ஜனவரி 07, கொழும்பு இலங்கை: உலக அளவில் இரத்தினக்கற்களை வாங்கவும், விற்கவும் நடைபெறும் சர்வதேச நிகழ்ச்சிகளின் நாளேட்டில் மிகவும் விரும்பப்படும் கண்காட்சிகளுள் ஒன்றான, FACETS Sri Lanka கண்காட்சியை கைத்தொழில் மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண அங்குரார்ப்பணம் செய்தார். தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை மற்றும் இலங்கை இரத்தினக்கல் ஆபரண சங்கத்தால் (SLGJA) ஏற்பாடு செய்யப்பட்டு, சினமன் கிரான்ட் ஹோட்டலில் நடத்தப்படும் FACETS Sri Lanka கண்காட்சியானது, இலங்கை வணிகத்திற்குத் திறந்து, தயாராக இருப்பதை சமிக்ஞை காட்டி நிற்கிறது. பல நாடுகளில் இருந்து கண்காட்சிக்கு வருகை தரும் வணிகர்கள் மூலம் இது உறுதியாகிறது. அத்துடன், தனித்துவமான அழகால் 2500 வருடங்களுக்கு மேல் உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற Ceylon Sapphire கண்காட்சியின் நடுநாயகமாக மாறியிருப்பது மனதை வசீகரிக்கச் செய்வதாகும்.
பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் ரமேஷ் பத்திரண, இரத்தினக்கல் ஆபரணத்துறைக்கான அரசாங்கத்தின் திட்டங்களை விபரித்தார். ‘இந்தத் துறை சார்ந்த ஏற்றுமதிகள் ஊடாக 2023ஆம் ஆண்டில் ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம் எமது இரத்தினக்கற்களுக்கு பெறுமதி சேர்க்க வசதிகளை ஏற்படுத்துவோம். இதற்காக, பெறுமதி சேர்த்தலுக்கான சகல தொழில்நுட்பங்களுக்கும், கருவிகளுக்கும் இறக்குமதித் தீர்வு அளிக்கப்படும். இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபடுவோர், இதனுடன் தொடர்புடைய தொழில்களை செய்வோருக்காக ஓய்வூதியத் திட்டத்தை உருவாக்க வழிவகுப்பதற்காக குழுவொன்று நியமிக்கப்படும்,’ என்று அவர் கூறினார்.
வரவேற்புரை நிகழத்திய SLGJA யின் தலைவர் அஜ்வார்ட் தீன், ‘இந்தத் துறையானது வளர்ச்சியைப் பாதிக்கக்கூடிய அதிகார ஆட்சியினம் சார்ந்த பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது. எனவே, இந்தத் துறை எதிர்காலத்தில் நீடித்து நிலைக்க அரசாங்கம் வசதியளிக்க வேண்டும். சமீபத்தில் இல்லாமல் செய்யப்பட்ட நிவாரணங்களை மீளவும் அளிப்பது பற்றி மீளவும் பரிசீலிப்பது அவசியம். இவ்வாண்டுக்குரிய கண்காட்சயில் அரச-தனியார்த்துறை பங்களிப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்று, ஒத்துழைப்புடன் கூடிய பங்காளித்துவம் இந்தத் துறைக்கு மாத்திரமன்றி ஒட்டுமொத்த தேசத்திற்கும் பயனைத் தரக்கூடியது என்பதற்கு சான்றாக விளங்குகிறது,’ என்று தெரிவித்தார்.
FACETS Sri Lanka இன் தவிசாளர் அல்தாவ் இக்பால் கண்காட்சியின் இரு அம்சங்களை வலியுறுத்தினார். இந்தக் கண்காட்சி, இலங்கை வணிகத்திற்குத் தயாராகவும், திறந்தபடியும் இருக்கின்றது என்ற சமிக்ஞையைக் காட்டுகிறது. அரச-தனியார் பங்காளித்துவம் திடமாக திகழ்வதற்கும், பயனுள்ளது என்பதற்கும் முதலாவது உதாரணமாக இருக்கிறது என்பது அவ்விரு விடயங்களாகும். ‘அரசாங்கம் வசதியளிக்கும் பாத்திரத்தை நிறைவேற்றுகையில், தனியார்த்துறை வழிநடத்திச் செல்லும் வகிபாகத்தைக் கொண்டிருக்கக்கூடிய மிகவும் அபூர்வமான சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இந்த முன்னுதாரணத்தை ஏனைய துறைகளுக்கும் விஸ்தரிக்கலாம்,’ என்று அவர் கூறினார். இரத்தினக்கற்களை விலை கொடுத்து வாங்குவோரை பாராட்டிப் பேசியபோது, ‘இந்தத் துறையானது விலைகொடுத்து வாங்குகையில் தரத்தில் எதுவித சமரசத்தையும் மேற்கொள்ள விரும்பாத வணிகர்கள் மூலம் ஆண்டாண்டு காலமாக கட்டியெழுப்பப்பட்டது. இப்போது, எமது நாட்டை மீண்டும் சரியான தடத்தில் இட்டு, எமது தலையாய தேவையாக உள்ள அந்நிய செலாவணியைப் பெற நீங்கள் வழிவகுக்க வேண்டும்’ என்று கூறி, அவர் இரத்தினக்கற்களை கொள்வனவு செய்பவர்களையும் வரவேற்றுப் பேசினார்.
இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) என்பது சுரங்க அகழ்வு முதற்கொண்டு தயாரிப்பு ஈறாக மொத்த மற்றும் சில்லறை விற்பனை வரையிலான சகல உப-துறைகளினது நலன்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து பிரதிபலிக்கும் தனியார்த்துறை அமைப்பாகும். இந்த அமைப்பானது, தேசிய இரத்தினக்கல் ஆபரண அதிகாரசபை மற்றும் இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையுடன் கரம் கோர்த்து FACETS Sri Lanka கண்காட்சியை ஏற்பாடு செய்கிறது.