பின்தங்கிய 100,000 சிறுவர்களுக்கு உதவிக் கரம் நீட்ட 90 நாட்களில் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டும் முயற்சி
இன்று இலங்கையில், பல குடும்பங்கள் தமது பிள்ளைகளின் அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்வதில் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். கல்விச்செலவுகளையும் தம்முடைய மிகவும் குறுகிய வருமானத்திலேயே ஒதுக்கும் சூழ்நிலைக்கு உள்ளாக்கப்படும் போது அதிகளவு கஷ்டங்களுக்கும் அவர்கள் முகங்கொடுக்கின்றனர். சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட தேவைகள் மதிப்பாய்வின் பிரகாரம், இலங்கையின் 50 சதவீதமான குடும்பங்கள் தமது பிள்ளைகளின் கல்விக்கு ஆதரவளிப்பதில் பல இன்னல்களை எதிர்கொண்டு வருவதாகவும், சில சிறுவர்கள் தமது பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தியுள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
உலகளாவிய ரீதியிலிருந்து பெறப்பட்ட புள்ளி விவரங்கள் மற்றும் உள்ளகத் தகவல்களினூடாக, பாடசாலை கல்வியை இடைநிறுத்துகின்றமையானது சிறுவர்களின் சமூக-பொருளாதார விருத்தியை பாதிப்பதுடன், சமூகத்தின் பொருளாதார விருத்தியையும் மந்த கதியடையச் செய்வதை அறியக்கூடியதாகவுள்ளது.
இலங்கையின் மாபெரும் உள்நாட்டு அரச சார்பற்ற அமைப்பான சர்வோதய அமைப்பினால், சமூகத்திலுள்ள பெற்றோர்களுக்கு தமது பிள்ளைகளுக்கு தொடர்ச்சியான கல்வியை அளிக்க முடியாமைக்கான காரணம், அத்தியாவசிய பாடசாலை உபகரணங்களைப் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளமையே என்பது இனங்காணப்பட்டுள்ளது.
இந்த உடனடித் தேவையை பூர்த்தி செய்வதற்கும், நீண்ட கால அடிப்படையில் இலங்கையின் எதிர்காலத்துக்கு ஏற்படக்கூடிய எதிர்மறைத் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையிலும், “எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” எனும் திட்டத்தை இலங்கையின் முன்னணி கல்வி வர்த்தக நிறுவனமான அட்லஸ் உடன் இணைந்து சர்வோதய ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்தினூடாக, பாடசாலை கல்வியை இடைநிறுத்தும் இடர் நிலையை எதிர்நோக்கியுள்ள 100,000 மாணவர்களுக்கு அவசியமான பாடசாலை உபகரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அதனூடாக அவர்களினதும், நாட்டினதும் எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டுவோம்.
தேவையுடைய இந்த 100,000 மாணவர்களின் வாழ்க்கையில் உத்வேகத்தை ஏற்படுத்தும் நோக்குடன் முன்னெடுக்கப்படும் “எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” எனும் திட்டத்தினூடாக, அடுத்த 90 நாட்களினுள் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை திரட்டுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதன்மூலம் அனைத்து 100,000 சிறுவர்களுக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலை உபகரண பொதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு உதவப்படும். இதற்கு அவசியமான நிதியைத் திரட்டிக் கொள்வதற்கும் சர்வதேச சமூகங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை அடைவதற்கும் அவர்களிடமிருந்து ஆதரவைப் பெறுவதற்கும் உதவக்கூடிய கூட்டாண்மை நிறுவனங்களின் ஆதரவு முக்கியத்துவம் பெறும்.
பிரதான அனுசரணையாளர் எனும் வகையில், 2500 சிறுவர்களுக்கு அவசியமான உதவிகளை வழங்க அட்லஸ் முன்வந்துள்ளதுடன், “எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” எனும் திட்டத்துக்காக சலுகை விலையில் உபகரணங்களையும் வழங்குவதற்கும் முன்வந்துள்ளனர். இதற்காக நிறுவனம் தன்னார்வ அடிப்படையில் செயலாற்றும் அட்லஸ் ஊழியர்களையும் நிறுவியுள்ளது. இவர்கள் 10,000 க்கும் மேற்பட்ட மணித்தியாலத்தை பணியாற்றும் நேரத்திலிருந்து இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளனர். இவ்வகையான அர்ப்பணிப்பான அணியுடன், திட்டத்துக்கான உட்கட்டமைப்பை நிறுவுவதற்கான அவசியமான நிதி வசதியையும் நிறுவனம் வழங்குகின்றது (SOPகள், சட்ட வசதிகள், டிஜிட்டல் சொத்துகள் போன்றன அடங்கலாக). இந்தத் திட்டம் வெற்றிகரமாக அமைவதற்கு 3 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மக்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை சென்றடைவதற்காகவும் பணியாற்றும்.
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற Ernst & Young (EY), திட்டத்தின் கணக்காய்வு பங்காளராக இணைந்துள்ளதுடன், திட்டத்தின் ஒவ்வொரு செயன்முறைகளையும் மீளாய்வு செய்து, பொறுப்புக்கூரல் மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும். “எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” இணையத்தளத்தினூடாக தமது பங்களிப்பு தொடர்பான உடனுக்குடனான தகவல்களையும், திட்டத்தின் நிலைப்பாடுகளையும் நன்கொடையாளர்கள் பார்வையிட்டு தெரிந்து கொள்ள முடியும்.
“எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” திட்டத்தினூடாக மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள சிறுவர்கள் அனுகூலம் பெறுவதை உறுதி செய்வதற்காக, சர்வோதய அமைப்பினால், வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் குடும்பங்களுக்காக வகுக்கப்பட்ட விசேட விதிமுறைகளினூடாக, அனுகூலம் பெறுவோர் தெரிவு செய்யப்படுவார்கள். வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், பெண் தலைமைத்துவத்தில் இயங்கும் குடும்பங்கள், மாற்றுத்திறன் படைத்த குடும்பங்கள், சமுர்த்தி அனுகூலம் பெறுவோர், தினசரி கூலி அடிப்படையில் பணியாற்றுவோர், பாதிக்கப்பட்ட சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மை குடும்பங்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் காப்பகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இந்தத் திட்டத்தினூடாக உதவிகள் வழங்கப்படும்.
சகல நன்கொடைகளும் சர்வோதய அமைப்புக்கு பாதுகாப்பான கொடுப்பனவு முறைமையினூடாக வழங்கப்பட்டு, 1000 தொகுதிகளின் அடிப்படையில் கல்வி உபகரணங்களை சர்வோதய கொள்முதல் செய்யும். முன்பள்ளி, ஆரம்ப மற்றும் இடைநிலை ஆகிய வகுப்புகளின் அடிப்படையில் மூன்று பிரிவுகளாக இந்த உபகரணங்கள் வகைப்படுத்தப்படும். இந்த உபகரணங்களில் கொப்பிகள், பென்சில்கள், பேனைகள், வர்ணப் பென்சில்கள், பஸ்டல்கள், ஷார்ப்னர்கள், அழி இறப்பர்கள், கம், கத்தரிக்கோல், நீர் போத்தல், உணவுப் பெட்டி மற்றும் கணித அளவு கோல்கள் அடங்கிய பெட்டி போன்றவை உள்ளடங்கப்படும்.
இந்தத் திட்டத்தில் நன்கொடை வழங்குநராக மாத்திரமன்றி, பங்காளர்களாகவும் பங்கேற்குமாறு “எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” திட்டம், இலங்கையின் சகல கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களை அழைக்கின்றது. இந்தத் திட்டத்தை சர்வதேச சமூகங்களுடன் இணைக்கும் ஆற்றல் படைத்தவர்களுடனும் கைகோர்க்க இந்தத் திட்டம் எதிர்பார்ப்பதுடன், அதனூடாக பெருமளவு தரப்பினரிடமிருந்து இந்தத் திட்டத்துக்கு பங்களிப்புகளைத் திரட்டிக் கொள்ளவும் எதிர்பார்க்கின்றது.
மேலதிக தகவல்களுக்கு “எதிர்காலத்துக்கு ஒளியூட்டுங்கள்” இணையத்தளத்தைப் பார்க்கவும் www.lightafuture.com