இலங்கையின் முன்னணி தொலைக்காட்சி அலைவரிசையான சிரச தொலைக்காட்சியுடன் சமூக ஊடக தளமான TikTok அதிகாரப்பூர்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம், பெரும் எதிர்பார்ப்புடன் திரும்பவுள்ள ‘சிரச டான்சிங் ஸ்டார் 2025’ (Sirasa Dancing Stars) நிகழ்ச்சிக்கான அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு பங்காளராக TikTok கைகோர்த்துள்ளது.

இலங்கையில் உள்ள உள்ளூர் ஊடக வலையமைப்புடன் TikTok நிறுவனம் இணைந்து செயல்படுவது இதுவே முதல்முறையாகும். இலங்கையின் இரண்டு முன்னணி பொழுதுபோக்கு நிறுவனங்கள் ஒரே மேடையில் இணைவதால், இது இலங்கை வரலாற்றில் மிகப்பெரிய பொழுதுபோக்கு கூட்டணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது தொடர்பில் TikTok இன் தெற்காசிய உள்ளடக்க செயல்பாட்டுத் தலைவரான உமைஸ் நவீத் கருத்து தெரிவிக்கையில், “சிரச டான்சிங் ஸ்டார் 2025 இன் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு பங்காளியாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். படைப்பாற்றல், சுய வெளிப்பாடு மற்றும் உள்ளூர் திறமைகளை கொண்டாடும் ஒரு தளத்தில் சிரச தொலைக்காட்சியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். படைப்பாற்றலும் சுய வெளிப்பாடும்தான் TikTok இன் தனித்துவத்தின் உயிர்நாடி. இந்தக் கூட்டணி இலங்கை திறமைகளை உலகிற்கு வெளிக்காட்டவும், கலாச்சாரத்தை கொண்டாடவும், நாடு முழுவதும் உள்ள படைப்பாளிகள் தங்கள் திறமைகளை உலகுடன் பகிர்ந்துகொள்ள ஊக்குவிக்கவும் ஒரு அற்புதமான வாய்ப்பை எங்களுக்கு வழங்குகிறது. இந்த மறக்கமுடியாத பருவத்தையும், சிரச டான்சிங் ஸ்டார் 2025 சமூகம் TikTok இல் உயிர்பெறுவதையும் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என அவர் தெரிவித்தார்.
சிரச தொலைக்காட்சிக்கும், TikTok இற்கும் இடையேயான இந்த கூட்டாண்மை தொடர்பில் கேபிடல் மகராஜா குழுமத்தின் குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல் கருத்து வெளியிடுகையில், “இந்த கூட்டாண்மை இலங்கையின் பொழுதுபோக்கு துறையில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது. சிரச டான்சிங் ஸ்டார் எப்போதும் மறைந்திருக்கும் திறமைகளை கண்டறிந்து அதற்கு தேசிய அளவிலான ஒரு மேடையை வழங்குவதாக இருந்து வந்துள்ளது. தற்போது, TikTok உடன், அந்த மேடை உலகளாவியதாக மாறியுள்ளது. உள்ளூர் பொழுதுபோக்கின் எதிர்காலத்தை உருவாக்குவதிலும், புதிய தலைமுறை படைப்பாளிகளுக்கு அதிகாரம் அளிப்பதிலும் முன்னோடியாக இருப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம்.” என்று அவர் கூறினார்.
சிரச டான்சிங் ஸ்டாரின் மீள்வருகை, TikTok இன் ஆற்றல்மிக்க அணுகல் மற்றும் புத்தாக்க உள்ளடக்கத்தை, சிரச தொலைக்காட்சியின் நீண்டகால புகழ் மற்றும் தயாரிப்பு திறனுடன் இணைந்து கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணியின் மூலம், போட்டியாளர்களும் பார்வையாளர்களும் புதிய வடிவங்கள், திரைக்குப் பின்னால் உள்ள காட்சிகள், மற்றும் உள்ளூர் திறமைகளை உலகளவில் அறியச்செய்யும் ஒரு தளத்தையும் பெறுவார்கள்.சமூக மற்றும் பாரம்பரிய ஊடகங்கள் முழுவதும் ஆர்வம் அதிகரித்து வருவதால், திரையிலும் இணையத்திலும் நடனம், படைப்பாற்றல் மற்றும் தொடர்பை கொண்டாடும் ஒரு விறுவிறுப்பான பொழுதுபோக்கு பருவத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராகிவிட்டன.