இலங்கையின் விவசாயத் துறையின் பன்முக புத்தாக்க வியாபாரக் குழுமமான ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட், நாட்டின் விவசாயத் துறைக்கு பாரம்பரிய இரசாயன உரப் பயன்பாட்டிலிருந்து சேதன உரப் பயன்பாட்டுக்கு மாறிக் கொள்வதற்கு அவசியமான விஞ்ஞான ரீதியான மற்றும் பிரயோக ரீதியான தீர்வுகளை நிபுணத்துவ மற்றும் பிரயோக அனுபவங்களிலிருந்து வழங்குவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அறிவித்துள்ளது.
Research Institute of Organic Agriculture (FiBL) மற்றும் School of Agricultural, Forest and Food Sciences (HAFL) ஆகியவற்றைச் சேர்ந்த சிரேஷ்ட விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்களைக் கொண்ட நிபுணர் அணியினர் இலங்கைக்கு 10 நாள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்ததுடன், இக்காலப்பகுதியில் இலங்கையில் ஆழமான பகுப்பாய்வுகள் மற்றும் மதிப்பாய்வுகளை முன்னெடுத்திருந்தனர். இந்த விஜயத்தின் நோக்கம், இலங்கையின் நோக்கமும் எதிர்பார்ப்புமான தற்போதைய 2.5 சதவீதமாக அமைந்துள்ள சேதன விவசாய நடவடிக்கைகளை விரிவாக்கம் செய்து, ஆரோக்கியமான சேதன விவசாய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் தேசமாக தரமுயர்த்துவதாக அமைந்துள்ளது.
ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொல்ஃவ் பிளாசர், இந்தத் திட்டத்தின் பிரதான காரணகர்த்தாவாக அமைந்திருப்பதுடன், இவர் கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் விவசாய உர சவால்களில் நேர்த்தியான படிமுறைகளை மேற்கொண்டிருந்ததையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம். சேதன விவசாயத்துக்கான பெருமைக்குரிய ஆய்வுகளின் இருப்பிடமாகக் கருதப்படும் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவினரை நாம் இதற்காக அழைத்து வந்து, நாடு முழுவதிலும் பரந்துபட்ட ஆய்வை மேற்கொண்டிருந்தோம்.” என்றார்.
“இந்த நிபுணர்கள் தற்போது தமது ஒழுங்கமைப்பு பணிகளை ஏனைய நிறுவனங்களுடன் மேற்கொள்வதுடன், உள்நாட்டில் பெற்றுக் கொண்ட கல்விசார் மற்றும் பிரயோக அனுபவங்கள் அடங்கலாக, விடயம் தொடர்பான பரந்த அறிவைக் கொண்டு பணியாற்றுகின்றோம். பவர் நிறுவனத்தைச் சேர்ந்த நாம், நிபுணர்களுடன் தொடர்ச்சியான ஈடுபாட்டைப் பேணி, அடுத்த சில வாரங்களில் நாட்டுக்கும் துறைக்கும் அவசியமான முறையான வடிவமைக்கப்பட்ட திட்டமொன்றை தயாரிப்போம்.” என்றார்.
விவசாயத் திணைக்களம், பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடம், NIFS, RRISL, CRI, CEOA, பெருந்தோட்டத் துறை அமைச்சு, MoSTR, சேதன விவசாய அரச செயலகங்கள், IFOAM, GIZ ஸ்ரீ லங்கா, SLCARP மற்றும் உள்நாட்டு ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நிபுணர்கள் கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தது.
சேதன விவசாயத்தில் பங்களிப்பு வழங்கக்கூடிய பகுதிகள் மற்றும் வசதிகளான கெரவலபிட்டிய கழிவு முகாமைத்துவ பூங்கா, சேதன உர பதப்படுத்தல்கள், தம்புளை மரக்கறி சந்தை, மெனிங் சந்தை மற்றும் மீன் சந்தை, HTS Hidellana தேயிலைத் தொழிற்சாலை, கிரான்ட் ஹோட்டலில் ஹோட்டல் கழிவு முகாமைத்துவ கட்டமைப்பு, லேக் செரெனிட்டி சேதன தேயிலை பெருந்தோட்டம், கனேமுல்லயிலுள்ள கோழிப் பண்ணை, புத்தளம், அனுராதபுரம், கம்பஹா மற்றும் இரத்தினபுரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த சேதன மற்றும் பாரம்பரிய விவசாய சமூகங்களுடனான சந்திப்புகள் போன்றவற்றை அவர்கள் மேற்கொண்டிருந்தன.
இவர்களின் விஜயத்தின் போதான ஒவ்வொரு கண்டறிதல்களும் நாட்டின் தற்போதைய விவசாய கட்டமைப்பு பற்றிய புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்ள உதவியாக அமைந்திருந்ததுடன், ஒட்டு மொத்த சூழல் கட்டமைப்புடன் தொடர்புடைய இதர காரணிகளைப் பற்றி அறிந்து கொள்ளவும் உதவியாக இருந்தது. நிபுணர்கள் குழுவினரால் தமது கண்டறிதல்களின் போது பெருவாரியான விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தரவுகளை திரட்ட முடிந்தது. பரந்தளவு பங்காளர்களுடனான பல்வேறு கலந்துரையாடல்கள், தொடர்பாடல்கள் மற்றும் அறிவு பகிர்வு அமர்வுகள் போன்ற அனைத்தும் இந்த மாற்றத்தை எய்துவதற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்ததுடன், சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் உதவியாக அமைந்திருந்தன.
இலங்கையில் தங்கியிருந்த காலப்பகுதியில், களனியிலுள்ள பவர் உரத் தொழிற்சாலையில் (CMW) இடம்பெற்ற அறிவு பகிர்வு அமர்வின் போது நிபுணர்கள் குழுவினரால் அர்த்தமுள்ள கருத்துப்பகிர்வுகள் இடம்பெற்றதுடன், அதனைத் தொடர்ந்து அனுராதபுரத்திலுள்ள பவர் வளாகத்துக்கான விஜயத்தின் போது கொம்போஸ்ட் மற்றும் சேதன பயிர்ச் செய்கை தொடர்பான பயிற்சிகளும் வழங்கப்பட்டிருந்தன.
இந்த குழுவில் HAFL இன் இயற்கை வளங்கள் முகாமைத்துவ பேராசிரியர். கலாநிதி. கிறிஸ்டோப் ஸ்டுடர், FiBL இன் பயிர்கள் மற்றும் மண் தரம் தொடர்பான சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி. ஜாக்ஸ் ஜி ஃபுக்ஸ், HAFL இன் விவசாய கட்டமைப்பு தொடர்பான சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி. குர்பிர் எஸ் புல்லார் மற்றும் FiBL இன் சிரேஷ்ட ஆலோசகர் போல் வன் டென் பேர்ஜ் ஆகியோர் அடங்கியிருந்தனர்.