இலங்கையிலுள்ள அடுத்த தலைமுறை கண்டுபிடிப்பாளர்களை காட்சிப்படுத்திய SLIIT SciFest 2024

Share with your friend

நாடு முழுவதிலும் உள்ள பாடசாலைகளிலிருந்து இளம் சிந்தனைகளின் புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்டாடும் வருடாந்த நிகழ்வான இரண்டாவது SciFest நிகழ்வை 2024ஆம் ஆண்டு ஒக்டோபர் 08ஆம் திகதி வெற்றிகரமாக முன்னெடுத்திருந்தது. SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் பிரயோக விஞ்ஞானத் திணைக்களத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், ருஹுனு பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பேராசிரியர் ருசிர குமாரதுங்க இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

SciFest 2024 நிகழ்வானது பாரம்பரிய வினாடிவினா போட்டிக்கு மாற்றமாக ‘இளம் கண்டுபிடிப்பாளர்கள்’ போட்டி என்ற புதிய பரபரப்பான அம்சத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. ‘நிலையான இலங்கைக்கான புதுமையான தீர்வுகள்’ என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து பலர் உற்சாகமாகப் பங்கேற்றனர்.

ஆரம்பத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 35 வீடியோக்களில்  இருந்து 24 திட்டங்கள் கடுமையான தெரிவுமுறையின் கீழ் இறுதிச் சுற்றக்கு முன்னேறியிருந்தன. கொட்டாவ ஆனந்த கல்லூரி தனது புத்திசாலித் தனமான கண்டுபிடிப்பான ‘யானை பாதுகாப்பு வழிகாட்டல் முறைமை’க்காக முதலாவது இடத்தைத் தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை கேகாலை சென் மேரிஸ் கல்லூரி தனது ‘நிவாரணகால அட்டவணை தயாரிப்பாளர்’ திட்டத்திற்காகப் பெற்றுக் கொண்டது. மூன்றாவது பரிசு இரண்டு அணிகளுக்கிடையில் பகிரப்பட்டது. ‘தானியங்கி ஓவியர்’ திட்டத்தைத் தயாரித்த குருநாகல் லக்தாஸ் டி.மேல் கல்லூரியும், கொட்டம்பிட்டிய முஸ்லிம் மத்திய கல்லூரியின் ‘ஸ்மார்ட் பாலம்’ திட்டத்திற்கும் மூன்றாவது பரிசு வழங்கப்பட்டது.

SLIIT இன் மனிதநேய மற்றும் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மலித விஜேசுந்தர குறிப்பிடுகையில், “விஞ்ஞானத்தில் ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் புதிய கண்டுபிடிப்பக்களுக்கான ஆர்வத்தைத் தூண்டுவதற்கும் வடிவமைக்கப்பட்ட ஒரு துடிப்பான தளமாக SciFest 2024 ஐ நடத்தியதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த நிகழ்வு படைப்பாற்றலை வளர்ப்பதையும், அடுத்த தலைமுறை விஞ்ஞான சிந்தனையாளர்களை வளர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது” என்றார்.

SLIIT பிரிவின் கீழ் எட்டு திட்டங்கள் இறுதிச் சுற்றை அடைந்திருந்தன. வணிகப் பிரிவு மற்றும் கணினிப் பீடம் ஆகியன இணைந்து கூட்டாகத் தயாரித்த “லங்கா லெகசி’ திட்டம் வெற்றி பெற்றது. கணினி பீடம் அவர்களின் ‘புதுமையான மரக் கிளைகளை அகற்றும் சாதனம்’ தயாரிப்பு இரண்டாவது இடத்தைப் பிடித்தது, அதே நேரத்தில் பொறியியல் பீடம் அவர்களின் ‘ஸ்மார்ட் எனர்ஜி மீட்டர்” திட்டம் மூன்றூவது இடத்தைப் பிடித்தது.

மேலும், இந்நிகழ்வில் மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கான வினாடி வினா போட்டியும் இடம்பெற்றது. ஆரம்ப சுற்றில் 25 பாடசாலைகள் பங்கேற்றிருந்தன. இந்தப் போட்டியில் பங்கேற்றவர்கள் விஞ்ஞானத்தில் பரவலான ஆர்வத்தை வெளிப்படுத்தியிருந்தனர். நான்கு பாடசாலைகள் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியிருந்தன. டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி, கொழும்பு 07, கொழும்பு 10- நாலந்த கல்லூரி, மாலபே ஹொரைசன் சர்வதேச பாடசாலை, கம்பஹா தக்ஷிலா கல்லூரி  ஆகியன இதில் அடங்குகின்றன. இறுதிச் சுற்றில் டி.எஸ்.சேனநாயக்க கல்லூரி சம்பியனாகத் தெரிவாகியதுடன், நாலந்தா கல்லூரி மற்றும் தக்ஷிலா கல்லூரி முறையே இரண்டாம் மூன்றாம் இடங்களைப் பெற்றுக்கொண்டன.

புத்தாக்கத்தின் மூலம் தேசிய சவால்களை எதிர்கொள்ளும் இலங்கை இளைஞர்களின் மகத்தான ஆற்றலை SciFest 2024 எடுத்துக்காட்டுகிறது. உயர்தர சமர்ப்பிப்புகள், குறிப்பாக இளம் கண்டுபிடிப்பாளர்களின் போட்டியில், நாட்டின் நம்பிக்கைக்குரிய தொழில்நுட்ப எதிர்காலம் வெளிப்படுத்தப்பட்டது.

மனிதநேயம் மற்றும் விஞ்ஞான பீடத்தின் பீடாதிபதி கலாநிதி மலிதா விஜேசுந்தர மற்றும் பிரயோக விஞ்ஞானப் பிரிவின் தலைவி பேராசிரியர் ஸ்ரியானி ஈ.பீரிஸ் ஆகியோரின் தலைமையில் பிரயோக விஞ்ஞானத் திணைக்களத்தினால் இந்நிகழ்வு மிக நுணுக்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


Share with your friend