வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் அனுசரணையில், தேசிய அறிவுசார் சொத்து அலுவலகம் (NIPO), இலங்கையின் தனித்துவமான உள்ளூர் தயாரிப்புகளைப் பாதுகாப்பதற்கும், அவற்றின் உலகளாவிய சந்தைப்படுத்தலை மேம்படுத்துவதற்கும் ஒரு மைல்கல் முயற்சியாக, உள்ளூர் புவிசார் குறியீட்டு (GI) பதிவேட்டை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்துள்ளது.

2025 பிப்ரவரி 27 ஆம் திகதி முறையாகத் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த பதிவேடு, நாட்டில் அறிவுசார் சொத்து உரிமைகளை வலுப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக கருதப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட புவியியல் தோற்றத்துடன் இணைக்கப்பட்ட தயாரிப்புகளுக்கு உத்தியோகப்பூர்வ பாதுகாப்பை வழங்குவதன் மூலம், இந்த முயற்சி, இலங்கையின் பிரதான ஏற்றுமதிப் பொருளான இலங்கை கருவாப்பட்டை (Ceylon Cinnamon) மற்றும் இலங்கை தேயிலை (Ceylon Tea) போன்ற இலங்கையின் புகழ்பெற்ற பொருட்களின் நம்பகத்தன்மையைப் பாதுகாப்பதையும், வணிக மதிப்பை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. முன்னதாக, Ceylon Cinnamonக்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் புவிசார் அடையாளத் தகுதி போன்ற சர்வதேச அங்கீகாரம் கிடைத்திருந்தாலும், உள்ளூர் தயாரிப்புகளுக்கு உள்நாட்டு சட்டப் பாதுகாப்புகள் இல்லை.
வர்த்தக, வணிகவியல், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் கௌரவ. வசந்த சமரசிங்க அவர்கள் இந்த முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் கருத்து தெரிவிக்கையில், “உள்நாட்டு புவிசார் குறியீடு பதிவேட்டைத் ஆரம்பிப்பது, இலங்கையின் புவிசார் நன்மையைப் பாதுகாக்கவும், சந்தை அணுகலை மேம்படுத்தவும் மற்றும் உள்நாட்டு சமூகங்களின் பொருளாதார மேம்பாட்டிற்கு பங்களிக்கவும் முக்கியமான முதல் படியாகும். 2017 முதல் அமைச்சு மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து இந்த முயற்சியை முன்னெடுத்து வரும் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஐக்கிய நாடுகள் தொழில்துறை மேம்பாட்டு நிறுவனம் (UNIDO) ஆகியவற்றின் பங்களிப்பை நாங்கள் பாராட்டுகிறோம். இந்த அறிவிப்பு, இலங்கையின் பாரம்பரிய பொருட்களின் மதிப்பை உயர்த்துவதற்கும், உலகளாவிய சந்தைகளில் அவற்றின் போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கியமான முயற்சியாக கருதப்படுகிறது.” என தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் முக்கிய அரசாங்க அதிகாரிகள் கலந்து கொண்டனர். அவர்களில் வர்த்தக, வணிகவியல் மற்றும் உணவு பாதுகாப்பு பிரதி அமைச்சர் கௌரவ. ஆர்.எம். ஜயவர்தன, கூட்டுறவு மேம்பாட்டுத் பிரதி அமைச்சர் கௌரவ. ஆர்.எச். உபாலி சமரசிங்க, வணிக அமைச்சின் செயலாளர் திரு. கே.ஏ. விமலேந்திரராஜா, ஏற்றுமதி மேம்பாட்டு சபையின் தலைவர் திரு. மங்கள விஜேசிங்க, தெங்கு அபிவிருத்தி ஆணைக்குழுவின் தலைவர் திரு. சாந்த ரணதுங்க, இலங்கை தேயிலை சபையின் தலைவர் திரு. ஆர்.கே. ஒபேசேகர மற்றும் முக்கிய தனியார் துறை பங்குதாரர்களின் பிரதிநிதிகள் ஆகியோர் இதில் அடங்குவர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய வர்த்தக அமைச்சின் செயலாளர் திரு. கே.ஏ. விமலேந்திரராஜா, “உள்நாட்டு புவிசரர் குறியீடு பதிவேடு, GI – அடிப்படையிலான முயற்சிகளின் மூலம் நமது உள்நாட்டு பொருட்களின் தனித்துவமான சிறப்பம்சங்களை வலுப்படுத்துவதன் மூலம் நிலையான பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிக்கும். இப்போது, Ceylon Tea, Ceylon Cinnamon மற்றும் பிற உற்பத்திப் பொருட்களின் மேன்மையை உலகளாவிய சந்தைகளில் நிலைநாட்டுவதற்கும், ‘Ceylon’ என்ற பெயரை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த உந்துதலைப் பயன்படுத்த வேண்டும்.” என தெரிவித்தார்.
இந்த பதிவேட்டை நிறுவுவது, 2017–2021 காலகட்டத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தால் நிதியளிக்கப்பட்ட வணிகம் தொடர்பான உதவித் திட்டத்தின் (EU-TRA) கீழ் UNIDO வழங்கிய தொழில்நுட்ப உதவியின் தொடர்ச்சியாகும். அறிவுசார் சொத்துச் சட்டத்தை திருத்துவதற்கும், புவிசார் குறியீடு (GI) பதிவுக்கான விதிமுறைகளை உருவாக்குவதற்கும் NIPO-க்கு UNIDO நிபுணத்துவ உதவியை வழங்கியது. இந்த ஆதரவு, BESPA-FOOD திட்டத்தின் மூலம் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது, இது இலங்கையின் உணவுத் துறையில் வணிகம் தொடர்பான நிறுவன திறனை மேம்படுத்துகிறது. இந்த முயற்சிகள், இலங்கையின் பாரம்பரிய பொருட்களின் பாதுகாப்பு மற்றும் உலகளாவிய சந்தைகளில் அவற்றின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த முன்முயற்சியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, NIPO-வின் பணிப்பாளர் நாயகம், திருமதி கீதாஞ்சலி ஆர். ரணவக்க கூறியதாவது: ‘புவிசார் குறியீடுகள் (GI) நமது உள்ளூர் தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நற்பெயரைப் பாதுகாப்பதில் ஒரு சக்திவாய்ந்த கருவியாக செயல்படுகின்றன, அவை உலகளாவிய சந்தைகளில் தங்களது தனித்துவமான அடையாளத்தை பராமரிப்பதை உறுதி செய்கின்றன. இந்த முன்முயற்சியுடன், இலங்கை உற்பத்தியாளர்கள் தவறான பயன்பாடு மற்றும் தவறான பிரதிநிதித்துவத்திற்கு எதிராக வலுவான சட்டப் பாதுகாப்பைப் பெறுவார்கள., இது அவர்களுக்கு சமநிலையில் போட்டியிட அனுமதிக்கிறது. புவிசார் குறியீடுகளை பாதுகாப்பதன் மூலம், நாங்கள் தரம் மற்றும் பாரம்பரியத்தை நிலைநிறுத்துவதோடு மட்டுமல்லாமல், பொருளாதார வளர்ச்சி மற்றும் நியாயமான வர்த்தகத்திற்கான புதிய வழிகளையும் திறக்கிறோம்.’ என தெரிவித்தார்.
உள்நாட்டு புவிசார் குறியீடு (GI) பதிவேட்டைத் ஆரம்பிப்பது, இலங்கையின் வணிகத் திறனை மேம்படுத்துவதிலும், உலகளாவிய சந்தைகளில் அதன் போட்டித்தன்மையை அதிகரிப்பதிலும் ஒரு முக்கியமான பங்கை வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முயற்சி, சந்தை வாய்ப்புக்களை மேம்படுத்துவதிலும், பொருட்களின் அங்கீகாரத்தை அதிகரிப்பதிலும் மற்றும் கிராமப்புற பொருளாதார மேம்பாட்டை ஊக்குவிப்பதிலும் புவிசார் குறியீடுகளின் (GI) முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும். மேலும், இது இலங்கையின் வணிகத் திறனை மேம்படுத்துவதிலும், உலகளாவிய சந்தையில் அதன் இடத்தை உறுதிப்படுத்துவதிலும் சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய பங்கினை எடுத்துக்காட்டுகிறது.