பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) திட்டம், ஆசியா நிலையத்தின் (TAF) தொழில்நுட்பத் தலைமை மற்றும் ஒருங்கிணைப்புடன், மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஊடாக நீதி அமைச்சுடன் இணைந்த 20 மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்களுக்கான ஐந்து நாள் மேம்பட்ட மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்பங்கள் பயிற்சி நிகழ்ச்சியை சமீபத்தில் நிறைவுசெய்தது.இந்த நிகழ்ச்சியானது, மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்களை மேம்பட்ட மத்தியஸ்த திறன்களுடன் ஆயத்தபடுத்தி, அது மூலம் இலங்கையில் உள்ள மத்தியஸ்த சபைகளுக்கு கொண்டுவரப்படும் பிணக்குகளை திறம்பட தீர்க்க தன்னார்வ மத்தியஸ்தர்களுக்கு பயிற்சி அளிக்க அவர்களுக்கு உதவுவதை இலக்காகக் கொண்டது.
பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) திட்டம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதியுதவியுடன் ஆசியா நிலையத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படும் நான்கு வருட நீதிக்கான அணுகல் திட்டமாகும். இத்திட்டம் இலங்கையில் நீதிக்கான அணுகலை மேம்படுத்துவதையும் மத்தியஸ்த சேவைகள் உட்பட மாற்றுவழி பிணக்குத் தீர்வு பொறிமுறைகளின் பயன்பாட்டை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த ஐந்து நாள் பயிற்சி அமர்வு, இலங்கையில் மத்தியஸ்த முயற்சிகளை வெற்றிகரமாக அமுல்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்களின் ஆற்றல்கள் மற்றும் கொள்திறனை மேம்படுத்துவதற்கான ஆசியா நிலையத்தின் பணியின், முக்கிய அம்சமாக அமைந்துள்ளது. அனைத்து தரப்பினருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு முடிவை எட்டுவதன் மூலம் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக நாட்டு மக்களுக்கு தங்கள் சேவைகளை தற்போது வழங்கிக்கொண்டு இருக்கும், 8500க்கும் மேற்பட்ட தன்னார்வ மத்தியஸ்தர்களை பயிற்றுவிப்பதற்கும் அவர்களின் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கும் மத்தியஸ்த பயிற்சி உத்தியோகத்தர்கள் பணிபுரிகின்றனர்.
இந்த மேம்பட்ட மத்தியஸ்த திறன்கள் மற்றும் நுட்பங்கள் பயிற்சியானது, இலங்கையில் நடைமுறையில் உள்ள மத்தியஸ்தத்திற்கான ஆர்வ-அடிப்படையிலான அணுகுமுறையின் கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்துவதை மையமாகக் கொண்டது, மேலும் தற்போதைய முறைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படும் போது, நாடு முழுவதும் உயர்தர மற்றும் திறமையான மத்தியஸ்த சேவைகளை உறுதிப்படுத்தக்கூடிய, மத்தியஸ்தத்தின் புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட கருத்தாக்கங்களை முன்வைத்தது.
இந்த இலக்கை அடைய, ஐந்து நாள் பயிற்சியானது மத்தியஸ்த செயல்முறை மற்றும் இலங்கையில் அதன் கோட்பாடு மற்றும் நடைமுறைகள், நிதி பிணக்குகள், வீடு, காணி மற்றும் சொத்து சம்பந்தப்பட்ட பிணக்குகள், நலமீட்பு நீதி மற்றும் பல தரப்பு மத்தியஸ்தம் உட்பட பல தலைப்புகளை உள்ளடக்கியது. இது பங்கேற்பாளர்களுக்கு நடைமுறையில் தங்கள் திறன்களை பிரயோகிக்கவும் மேம்படுத்தவும் வாய்ப்பு வழங்கிய உருவகப்படுத்தப்பட்ட மத்தியஸ்த அமர்வுகளையும் உள்ளடக்கியது.
இந்தப் பயிற்சியானது , மத்தியஸ்த துறையில் இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளரான, சர்வதேச நிபுணர் ஜொனதன் பார்ட்ச் என்பவரால் நடத்தப்பட்டது. அவர், 1980 களின் பிற்பகுதியில் இருந்து இலங்கையில் மத்தியஸ்தத்தை மேம்படுத்துவதில் ஆசியா நிலையத்தின் நீண்டகால பங்காளியாக இருக்கும், அமெரிக்காவை தளமாகக் கொண்ட Collaborative Decision Resources Associates (CDR Associates) இன் தலைவர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆவார்.
SEDR பற்றி
பயனுறுதிமிக்கவகையில் பிணக்கை தீர்ப்பதற்கு ஆதரவளித்தல் (SEDR) என்பது ஆசியா நிலையத்துடன் இணைந்து பிரிட்டிஷ் கவுன்சிலால் செயல்படுத்தப்படும் நான்கு வருட நீதிக்கான அணுகல் திட்டமாகும். இலங்கையில் மேற்கொள்ளப்படும் நிலைமாற்றம், நல்லிணக்கம் மற்றும் அனைத்து பகுதியினரையும் உள்வாங்கிய ஜனநாயகப் பங்கேற்பு (STRIDE) எனும் அதன் முன்முயற்சியின் ஒரு பகுதியாக ஐரோப்பிய ஒன்றியத்தால் இத்திட்டத்திற்கு நிதியளிக்கப்படுகின்றது.