அந்நிய செலாவணி பரிவர்த்தனைகள் மற்றும் வெளியேற்றங்களைக் கண்காணிப்பதில் இலங்கை மத்திய வங்கி எடுத்த நடவடிக்கைகளை வரவேற்பதாக இலங்கையின் ஆடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி தொழில்துறையின் உச்ச அமைப்பான கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது.
இது குறித்து தனது கருத்துக்கள வெளியிட்ட JAAF, “நமது நாடு தற்போது எதிர்கொள்ளும் மோசமான நெருக்கடியை எங்கள் உறுப்பினர்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள். எங்கள் உறுப்பு நிறுவனங்கள் சட்டத்திற்கு இணங்கி, ஏற்றுமதி வருமானத்தை திரும்பவும் நாட்டிற்குள் கொண்டுவருவதை உறுதி செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் மூலம் மக்கள் எதிர்நோக்கும் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படவுள்ளோம்.”
“எங்கள் உறுப்பு நிறுவனங்கள் தற்போதுள்ள விதிமுறைகளுக்கு அமைய நடவடிக்கைகள முன்னெடுத்து வருவதுடன் இந்த சவாலான சூழ்நிலையின் கீழ் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களிக்கும் அனைத்து தரப்பினருக்கும் தேவையான ஒத்துழைப்புக்கள வழங்குவதற்காக இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் முன்னெடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் தொடர்ச்சியான ஆதரவை வழங்க நடவடிக்கை எடுப்போம்.” என JAAF தமது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் மிக அதிகமான அந்நியச் செலாவணியை ஈட்டித்தரும் துறையான ஆடைத் தொழிற்துறை, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6% பங்களிப்பை வழங்குகிறது. இத்துறையானது சுமார் 350,000 தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலை வாய்ப்புகளை உருவாக்கி மேலும் 700,000 பேரின் வாழ்வாதாரத்திற்கு உருதுணையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் தொடர்பில்
கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் என்பது இலங்கையின் ஆடைகளை உலகின் முதல் தர ஆடை விநியோக இடமாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி உந்தப்பட்ட ஒரு முன்னணி அமைப்பாகும். JAAF ஆனது விநியோக சங்கிலி பங்குதாரர்கள், ஏற்றுமதி சார்ந்த ஆடை உற்பத்தியாளர்கள், கொள்வனவு நிலையங்கள் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச வர்த்தகநாமங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 5 சங்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.