#ஓர்எண்மட்டுமே சிறுவர் பாதுகாப்பு மாதத்தை’ வெற்றிகரமாகப் பூர்த்திசெய்த Stop Child Cruelty Trust அமைப்பு

Share with your friend

Stop Child Cruelty Trust (SCC) அமைப்பின் ‘#ஓர்எண்மட்டுமே சிறுவர் பாதுகாப்பு மாதத்தின் இறுதி நிகழ்வு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் (SLBC) குமாரதுங்க முனிதாச ஸ்டுடியோவின் நேரடி நிகழ்ச்சிகளுடன் கலந்த மெய்நிகர் நிகழ்வாக நவம்பர் 18, 2021 அன்று வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்தது. 2021 சிறுவர் தினத்தை முன்னிட்டு மாத தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய பேச்சு மற்றும் கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களும் இந்நிகழ்வில் பரிசளிக்கப்பட்டனர்.

இலங்கையில் சிறுவர் பாதுகாப்பு சட்ட மூலத்தை நிறைவேற்றுவதில் முக்கிய பங்காற்றிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். அவர் தமது கருத்துகளைக் குறிப்பிடுகையில், சிறுவர் பாதுகாப்பின்றி தேசிய பாதுகாப்பை உறுதி செய்வது என்பது எந்தளவு சாத்தியமானது என்பது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார். Stop Child Cruelty Trust (SCC) நிதியத்தின் காப்பாளரும் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான சிதத் வெத்திமுனி பிரதான உரையை ஆற்றியிருந்தார். அன்றிலிருந்து இன்றுவரை குழந்தைப் பருவத்தின் பரிணாம வளர்ச்சி தொடர்பில்  அவருடைய அறிவொளியான எண்ணங்கள் பிரதிபலித்தன.

இந்தத் திட்டம் தொடர்பில் Stop Child Cruelty Trust (SCC) இன் தலைமை அதிகாரி வைத்தியர் துஷ் விக்ரமநாயக்க கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த பதின்நான்கு மாத காலப்பகுதியினுள், ஏழு சிறுவர்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாப்பதற்கு எந்தவொரு அதிகாரத் தரப்பினராலும் இயலவில்லை. இருபது அரச சார்பற்ற நிறுவனங்களை உள்வாங்கி, இலங்கையின் முதலாவது சிறுவர் பாதுகாப்பு கைகோர்ப்பை நிறுவியிருந்தமைக்கு மேலதிகமாக, ‘#ஓர்எண்மட்டுமே சிறுவர் பாதுகாப்பு மாதம் என்பது சிறுவர் பாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தது. சம்பந்தப்பட்ட அதிகார தரப்பினரை பொறுப்புக்கூறச் செய்யும் வகையிலான விழிப்புணர்வூட்டும் பணிகளையும் நிதியம் முன்னெடுத்திருந்தது. இதில், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையை (NCPA) சுயாதீனமானதாகவும், அரசியல் தலையீடுகள் எதுவுமின்றி திகழச் செய்வதையும் வலியுறுத்தி ஜனாதிபதிக்கு கோரிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.” என்றார். 

இந்தத் திட்டத்தின் பிரதான உள்ளடக்கமாக, தேசிய பேச்சுப் போட்டி அமைந்திருந்தது. “நான் ஜனாதிபதியின் ஆலோசகராக இருந்தால், சிறுவர் பாதுகாப்பு நெருக்கடியை எவ்வாறு கையாள்வேன்?” எனும் தலைப்பில் இந்தப் போட்டி இடம்பெற்றது. நாடு முழுவதையும் சேர்ந்த சிறுவர்களுக்கு அறிவூட்டி, வலுவூட்டும் வகையில் இது அமைந்திருந்தது. பேச்சுப் போட்டியின் வெற்றியாளர்களாக ரனுஜா பஹலவெல (சிங்களம்), எம் ரி எம் அர்மாஸ் (தமிழ்), பெசந்தி கருணாரட்ன (ஆங்கிலம்) மற்றும் தினெத் சமரகோன் (மிகவும் புகழ்பெற்றவர்) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர். தனுமினி டி சில்வா ஓவியப் போட்டியின் முதலாமிடத்தைப் பெற்றுக் கொண்டார். சதினி வீரசிங்க மற்றும் ஆர். பாதிமா ஆகியோர் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களைப் பெற்றுக் கொண்டனர்.

“இந்தத் திட்டத்தின் மற்றுமொரு பிரதான நோக்கம், இலங்கையில் நிலவும் சிறுவர் பாதுகாப்பு நெருக்கடி நிலை தொடர்பில், 6 வயது நிரம்பிய சிறுவர்கள் முதல் 18 வயது வரையானோரை, தமது சொந்த, பிரத்தியேகமான கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளச் செய்திருந்தமையாகும். நாடு முழுவதிலுமிருந்து பேச்சு மற்றும் ஓவியப் போட்டிகளுக்கு பெருமளவு வரவேற்புக் கிடைத்திருந்தது. இந்தத் திட்டம் தொடர்பில் சிறுவர்கள் காண்பித்திருந்த வரவேற்பு உண்மையில் திருப்திகரமானதாக அமைந்திருந்தது. இலங்கையின் புதிய தலைமுறைக்காக சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்திருந்தமைக்காக சகல வெற்றியாளர்கள் மற்றும் பங்குபற்றுநர்களுக்கு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.” என வைத்தியர் விக்ரமநாயக்க மேலும் தெரிவித்தார்.திரண்ட சமூக பொறுப்புணர்வு நடவடிக்கையாக சிறுவர் பாதுகாப்பு அமைந்திருப்பதுடன், Stop Child Cruelty Trust (SCC) ‘#ஓர்எண்மட்டுமே அமைப்பினால், சிறுவர் துஷ்பிரயோகத்துக்குட்பட்டவர்களின் உரிமைகளை பாதுகாத்து பேணுவதற்கான சுய-ஆளுகை ஒழுக்கக் கோவை ஒன்றை கட்டியெழுப்புவதை இணைந்து முன்னெடுத்த வண்ணமுள்ளது. அதனூடாக, சமூகத்தில் அவர்கள் மீண்டும் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுவதை தவிர்ப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் இணைந்து கொள்ள விரும்புவோர், www.stopchildcruelty.com இணைத்தளத்தையும், Facebook பக்கமான www.facebook.com/stopchildcruelty என்பதை பார்வையிட முடியும் அல்லது info@stopchildcruelty.com எனும் மின்னஞ்சல் முகவரியூடாக தொடர்பு கொள்ள முடியும்.


Share with your friend