இலங்கையின் வருடாந்த திறந்தவெளி கலைக் கண்காட்சியான கலா பொல, 32ஆவது ஆண்டாக 2025 பெப்ரவரி 16, ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பு 07 (கிரீன் பாத்) இல் உள்ள ஆனந்த குமாரசாமி மாவத்தையில் ஆரம்பமானது. இந்நிகழ்வு ஏராளமான கலை ஆர்வலர்கள், தொழில் வல்லுநர்கள் மற்றும் மாணவர்களை ஈர்த்தது.



1993 ஆம் ஆண்டு ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையினால் கருத்தாக்கம் செய்யப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த நிகழ்வானது, 1994 முதல், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் தொடர்ச்சியான அனுசரணை மற்றும் செயற்படுத்தல் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
கொள்வனவாளர்களுடனும் கலை சமூகத்துடனும் ஓவியர்கள், சிற்பிகள் உள்ளிட்ட காட்சிக் கலை கலைஞர்கள் இணைவதற்கான நாட்டின் மிகப்பெரிய தளத்தை வழங்குகிறது. இது ஒரு சந்தையாகவும் உரையாடல்கள், அறிவு பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புக்கான இடத்தை வழங்கும் இடமாகவும் திகழ்கிறது. நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரம் மற்றும் சமூக ஒற்றுமையையும் அது மேம்படுத்துகிறது.



இவ்வருட நிகழ்வில் இலங்கையின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 390 இற்கும் மேற்பட்ட உள்ளூர் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.
இந்நிகழ்வின் உத்தியோகபூர்வ விழாவில் இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் (Andrew Patrick), பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். கலை அரங்குகளைப் பார்வையிட்ட அவர், கலைஞர்களுடனும் உரையாடினார். இந்த நிகழ்வானது, சிறுவர்களுக்கான கலைப் படைப்பு பகுதி, இளம் கலைஞர்களுக்கான பட்டறை, நேரடி ஓவிய அமர்வு, கலை பற்றிய பேச்சு மற்றும் கலாசார பொழுதுபோக்கு ஆகியவற்றால்மேலும் கலகலப்பாக அமைந்திருந்தது.
— END—
ஊடகங்களுக்கான ஏனைய முக்கிய தகவல்கள்:
- இலங்கையின் வருடாந்த திறந்தவெளி கலை கண்காட்சியான கலா பொல, 2025 பெப்ரவரி 16ஆம் திகதி அதன் 32ஆவது வருட நிறைவைக் கொண்டாடுகிறது. இது மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை காட்சி கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் கொண்டாட்டமாகும்.
- கலா பொல நிகழ்வானது, பரிஸின், மோன்ட்மார்ட்ரேயில் (Montmartre) இடம்பெறும் உலகப் புகழ்பெற்ற வெளியக கலைக் கண்காட்சிகள் மற்றும் ஒக்ஸ்போர்டில் உள்ள Turl Street கலை விழாவிலிருந்து உத்வேகம் பெற்றதாகும். இது இலங்கையின் கலை மற்றும் கலாசார நாட்காட்டியின் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட நிகழ்வாக மாறியுள்ளது.
- இந்த ஒழுங்கமைக்கப்படாத காட்சிக் கலை கொண்ட கண்காட்சியானது, பார்வையாளர் அனுபவத்தை தொடர்ச்சியாக மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, அதிகமான கலைஞர்களை இணைக்க அதன் எல்லையை விரிவுபடுத்துகிறது. உள்ளூர் மற்றும் சர்வதேச கலை ஆர்வலர்களின் பரந்த பார்வையாளர்களை இது ஈர்ப்பதால், அதிக கலைஞர்களின் பங்கேற்பையும் விற்பனை மூலம் மட்டுமல்லாமல், அதன் பின்னரான சாத்தியமான கமிஷன்கள் மூலமாகவும் அவர்களுக்கு அதிக வருமானத்தையும் உருவாக்குகிறது.
- ஒருவருடன் ஒருவர் வலையமைப்பை ஏற்படுத்துவதன் மூலமான கலந்துரையாடல் மற்றும் கற்றல் வாய்ப்புகள் ஆகியன இந்நிகழ்வின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. கலா பொல என்பது இலங்கையின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த, பல்வேறு நிலைகளில் உள்ள கலைஞர்களை ஒன்றிணைத்து, ஒத்துழைப்புக்கான சூழலை ஏற்படுத்தும் ஒரு நிகழ்வாகும்.
- இவ்வருட நிகழ்வில் பின்பரும் பல்வேறு துணை நிகழ்வுகளும் இடம்பெற்றன:
- ஜெஸ்மின் நிலானி ஜோசப் மற்றும் பிரியந்த உடகெதர ஆகியோரின் பங்குபற்றுதலுடனான‘கலா பொல கதா’
- பிரகீத் மனோஹன்ச மற்றும் நுவன் நாலக ஆகியோரைக் கொண்ட நேரடி ஓவிய அமர்வு
- கிங்ஸ்லி குணதிலக ஏற்பாடு செய்த இளம் கலைஞர்களின் பட்டறை
- கோரா ஆபிரஹாம் கலைப் பாடசாலையின் ஆசிரியர்களால் முன்னெடுக்கப்பட்டு, சகுரா கலைப் பொருள் விநியோகஸ்தரைக் கொண்ட சிலோன் கோல்ட் ஸ்டோர்ஸ் இனால் நிதியளிக்கப்பட்ட சிறுவர்களுக்கான கலைக் கூடம்
- கலா பொல நிகழ்வை நிலைநிறுத்தவும் மேம்படுத்தவும் ஜோன் கீல்ஸ் குழுமம் கடந்த மூன்று தசாப்தங்களாக நிதியளித்து இணைந்து வழங்கி வருகின்றது. கலா பொல தற்போது கொழும்பின் முக்கிய கலை நிகழ்வுகளில் ஒன்றாக நிலைநிறுத்திக் கொண்ட ஒரு முக்கிய சுற்றுலா தலமாகவும் விளங்குகின்றது. ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையால் கலைஞர்களுக்காக இலவசமாக நடத்தப்படும் டிஜிட்டல் கலைக் கூடமான Sri Lankan Art Gallery கலைக்கூடமானது, காட்சிக் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்தவும் கொள்வனவாளர்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் வருடம் முழுவதும் ஒரு தளத்தை வழங்குகிறது.
- நாட்டின் படைப்பாற்றல் பொருளாதாரத்தின் பொருளாதார மற்றும் சமூக ஒத்திசைவுத் திறனை வெளிப்படுத்தவும் அதனை ஊக்குவிக்கவும் ஜோன் கீல்ஸ் குழுமம் தன்னை அர்ப்பணித்து வரும் அதே நேரத்தில், படைப்பாற்றலை வளர்க்கின்ற மற்றும் மக்களிடையே பரந்த புரிதலை ஊக்குவிக்கின்ற ஒரு சூழல் கட்டமைப்பின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கிறது.



- ஜோன் கீல்ஸ் குழுமம் மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை பற்றி – John Keells Holdings PLC (JKH) இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் ‘சமூக சுகாதாரம் மற்றும் ஒற்றுமை’ எனும் பிரிவின் கீழ் கலை மற்றும் கலாசாரம் இணைகிறது. ஜோன் கீல்ஸ் நிறுவனம் கொழும்பு பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய கூட்டு நிறுவனமாகும். இது 7 வேறுபட்ட தொழில் துறைகளில் 80 இற்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்டு இயங்கி வருகிறது. 150 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட ஜோன் கீல்ஸ் குழுமம் 15,000 இற்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதோடு, கடந்த 19 ஆண்டுகளாக LMD சஞ்சிகையால் இலங்கையின் ‘மிகவும் மதிக்கப்படும் நிறுவனம்’ என தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் ‘பெருநிறுவன அறிக்கை மதிப்பீட்டில் வெளிப்படைத்தன்மை’ எனும் தரப்படுத்தலில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி நிறுவனம் தொடர்ச்சியாக நான்காவது வருடமாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உலகப் பொருளாதார மன்றத்தின் முழுமையான அங்கத்துவம் கொண்ட உறுப்பினராகவும், UN Global Compact இல் பங்கேற்பாளராகவும் இருக்கும் அதே வேளையில், ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசுபாட்டைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு முக்கிய செயற்பாட்டாளராக உள்ள ‘Plasticcycle’ எனும் சமூக தொழில்முனைவோர் முயற்சியின் மூலமாகவும் “நாளைய தேசத்தை ஊக்குவித்தல்” எனும் அதன் சமூகப் பொறுப்புணர்வு தொடர்பான தூரநோக்கை JKH முன்னெடுத்து வருகிறது.



- 1980 கள் முதல் கலை மற்றும் கலாசாரத்தை மேம்படுத்துவதற்கும் அதன் மறுமலர்ச்சிக்காகவும் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை முக்கிய பங்களிப்பை வழங்கி வருவதோடு, கண்காட்சிகள் மற்றும் விளக்கக்காட்சிகளை ஏற்பாடு செய்வதன் மூலம் அதனை முன்னெடுத்து வருகிறது. வளர்ந்து வரும் கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பரந்த பார்வையாளர்களுக்கு வழங்கவும், அதனை அவர்கள் கண்டறியவும் வாய்ப்பளிக்கிறது. இந்த அறக்கட்டளையானது, 1991 முதல் நாற்பது வயதுக்குட்பட்ட கலைஞர்களுக்கான Young Contemporaries போன்ற பல முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. சிற்பம் மற்றும் ஓவியம், தற்போது Sri Lankan Art எனப் பெயரிடப்பட்டுள்ள சிரேஷ்ட கலைஞர்களை உள்ளடக்கிய இந்நிகழ்வு 1991 முதல் வருடாந்தம் நடத்தப்பட்டு வருகிறது. கலா பொல என்பது 1993 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஒரு திறந்தவெளி கலைக் கண்காட்சியாகும். அதன் பின்னர் 2001 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளைத் தவிர வருடாந்தம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. 1994 இல் ஆரம்பிக்கப்பட்ட நவ கலாகருவோ நிகழ்வு, பெயர்பெற்ற மற்றும் வளர்ந்து வரும் கலைஞர்களின் புதிய மற்றும் வளர்ந்து வரும் கலைகளுக்கு இடமளிக்கும் ஒரு வருடாந்த கண்காட்சியாகும். ஜோர்ஜ் கீத் அறக்கட்டளையானது, நூற்றுக்கணக்கான விளக்கக்காட்சிகள், இலங்கை ஓவியம் மற்றும் சிற்பக் கண்காட்சிகள், கலைஞர்களின் குழுக்களின் கண்காட்சிகள், விவேட ஓவியர்களின் ஒரு மாத கால கண்காட்சிகள், இலங்கை மற்றும் வெளிநாட்டு ஓவியர்களின் தனிப்பட்ட கண்காட்சிகள் மற்றும் சார்க் ஓவியர்களின் கண்காட்சிகளையும் ஜோர்ஜ் கீத் அறக்கட்டளை ஏற்பாடு செய்துள்ளது.