“முதலில் இலங்கையை தேசிய முன்னுரிமை வழங்கும் நிகழ்ச்சி நிரலைக் கொண்ட நாடாக மாற்றுங்கள்”
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என்றும், அனைத்துக் கட்சிகளின் பங்களிப்புடன் கூடிய சர்வகட்சி அரசாங்கத்தை விரைவில் உருவாக்குவதற்கும் தேர்தலை நடத்துவதற்கும் வழி செய்ய வேண்டுமெனவும் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகளை அனைத்துக் கட்சித் தலைவர்களும் அமுல்படுத்துமாறும் கூட்டு ஆடைகள் சங்க மன்றம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்யும் அரசியல் முறைமை சீர்திருத்தம் குறித்த வேண்டுகோள் தொடர்பிலும் JAAF மீண்டும் இதன்போது கவனம் செலுத்தியுள்ளது.
“இலங்கையின் வரலாற்றில் மிகவும் சவாலான மற்றும் நெருக்கடியான இந்த சூழ்நிலையிலல், நமது நாடு எதிர்கொண்டுள்ள இந்த துயரமான நெருக்கடியைத் தீர்ப்பதற்கும், இலங்கையை கட்டியெழுப்புவதற்கும் நிகழ்ச்சி நிரலை உருவாக்குவதற்கும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
“இந்த நேரத்தில் மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டமான சூழ்நிலையை நாங்கள் முழுமையாக புரிந்துகொள்வதுடன், தங்கள் போராட்டங்களை வன்முறையின்றி நடத்தவும், பொறுமையுடனும் உறுதியுடனும் செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் சட்டம் ஒழுங்கை பேணி பாதுகாப்பதுடன் மிகுந்த கட்டுப்பாட்டுடன் செயற்படுமாறு பாதுகாப்புப் படையினரைக் கேட்டுக் கொள்கின்றோம்.” என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் தொடர்பில்
கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் என்பது இலங்கையின் ஆடைகளை உலகின் முதல் தர ஆடை விநியோக இடமாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி உந்தப்பட்ட ஒரு முன்னணி அமைப்பாகும். JAAF ஆனது விநியோக சங்கிலி பங்குதாரர்கள், ஏற்றுமதி சார்ந்த ஆடை உற்பத்தியாளர்கள், கொள்வனவு நிலையங்கள் மற்றும் இலங்கையில் உள்ள சர்வதேச வர்த்தகநாமங்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய 5 சங்கங்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.