ஏழு வருட இடைவெளியின் பின்னர் செலான் வங்கி அண்மையில் மெர்கன்டைல் மேசைப் பந்து சங்கத்தின் (MTTA) நிறுவனங்களுக்கு இடையேயான Knockout மேசைப் பந்து சம்பியன்ஷிப்பின் ‘A’ பிரிவு பட்டத்தை மீண்டும் வென்றது. இந்த போட்டி கல்கிஸ்ஸ புனித பரிதோமாவின் ஜிம்னாசியத்தில் நடைபெற்றது. 2018ஆம் ஆண்டுக்குப் பின்னர் செலான் வங்கி முதன்முதலாக ‘A’ பிரிவில் வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. மெர்கன்டைல் மேசைப் பந்து அரங்கில் வங்கியின் திடமான நிலையை இவ்வெற்றி மீண்டும் வலுப்படுத்துகிறது.

2005ஆம் ஆண்டு முதல், செலான் மேசைப் பந்து அணி கடந்த 20 ஆண்டுகளில் இரண்டைத் தவிர மற்ற அனைத்திலும் இறுதிப் போட்டியை எட்டியுள்ளமை விளையாட்டிற்கான அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் செயல்திறனை எடுத்துக் காட்டுகிறது. அணியின் மூலோபாய ஆட்டத்தை எடுத்துக்காட்டும் வகையில் அரையிறுதியில் 99X Technologies அணியை 3-2 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்திய செலான் வங்கி, இறுதிப் போட்டியில் MAS Holdings அணியை 3-1 என்ற புள்ளி அடிப்படையில் தோற்கடித்து சிறப்பான வெற்றியை பெற்றது. வங்கியின் வெற்றிப் பயணத்திற்கு சாலித ரஞ்சனவின் பங்களிப்பு முக்கியமாக இருந்ததுடன் இறுதிப் போட்டியை வெல்வதில் அவரது திறமை பெரும் பங்காற்றியது. நான்கு முறை தேசிய சம்பியனும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்றவருமான சாலித, knockout சம்பியன்ஷிப் முழுவதும் தோற்கடிக்கப்படாத வீரராக இருந்தார். இவர் முக்கிய ஒற்றையர் போட்டியில் வெற்றியை பெற்றதுடன் இரட்டையர் பிரிவில் சசிக விஜேசூரியவுடன் இணைந்து MAS Holdings இரட்டையரை 3-2 என்ற கணக்கில் தோற்கடித்தார். MAS Holdings உடனான இறுதிப் போட்டியின் போது சாலித ரஞ்சன மற்றும் சஷிக விஜேசூரிய ஜோடி, உபசேன மற்றும் வீரசிங்கவுக்கு எதிராக 3-2 என்ற கணக்கில் இரட்டையர் பிரிவை வென்றனர். சாலித ரஞ்சனவும் 3-0 என்ற புள்ளி அடிப்படையில் ஜயம்பதி ரத்நாயக்கவை தோற்கடித்தார். சமித் டில்ஷான், ஜயம்பதி ரத்நாயக்கவிடம் 0-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மேலும், சஷிக விஜேசூரிய 3-2 என்ற புள்ளி அடிப்படையில் மிஹிந்து உபசேனவை வீழ்த்தினார்.
சாலித அண்மையில் 70ஆவது திறந்த மெர்கன்டைல் மேசைப்பந்து சம்பியன்ஷிப்பில் மூன்று பட்டங்களை கைப்பற்றினார். இதில் அவரது 10ஆவது மெர்கன்டைல் ஆடவர் சம்பியன்ஷிப் வெற்றியான திறந்த ஆடவர் ஒற்றையர் பட்டம் மற்றும் மாஸ்டர்ஸ் ஒற்றையர் மற்றும் திறந்த ஆடவர் இரட்டையர் பட்டங்கள் என்பன அடங்கும். அவரது சர்வதேச சாதனைகளில் 2004ஆம் ஆண்டு பொதுநலவாய சம்பியன்ஷிப்பில் வெண்கலப் பதக்கத்தை வென்று சிறந்து விளங்கியமை ஒரு இலங்கை வீரரின் மிக உயர்ந்த சாதனையாகும். மேலும் 1999, 2003 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும் திறமையை வெளிப்படுத்தி இருந்தார். 2017, 2018 மற்றும் 2019 நியூசிலாந்து ஓபனில் பெற்ற வெற்றிகளுடன் 2019ஆம் ஆண்டு மெர்க்கன்டைல் விளையாட்டுப் போட்டிகளிலும், 2007 மற்றும் 2008ஆம் ஆண்டு தேசிய விளையாட்டுப் போட்டிகளிலும் சிறந்த மேசைப்பந்து வீரராக சாலித கௌரவிக்கப்பட்டமை ஒரு வலிமையான தடகள வீரராக அவரது வலுவான நற்பெயரை மேலும் உறுதிப்படுத்துகின்றன. மேலும், சாலித நான்கு முறை தேசிய சம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளதுடன் அவர் 1999 முதல் 2004 வரையிலும், மீண்டும் 2008 முதல் 2010 வரையிலும் இலங்கையின் நம்பர் 1 தேசிய மேசைப்பந்து சம்பியன் என்ற மதிப்புமிக்க பட்டத்தை தன் வசப்படுத்தினார்.
போட்டியின் ‘A’ பிரிவில் சாலிதவும் அவரது குழுவினரும் ஒற்றுமையாக செயற்பட்டு குறிப்பிடத்தக்க திறமையை வெளிப்படுத்தினர். சாலிதவின் தலைமைத்துவத்திற்கு மேலதிகமாக, சஷிக விஜேசூரிய, உதித களுவாராச்சி மற்றும் சமித் டில்ஷான் ஆகியோர் குழுவிற்கு தமது பங்களிப்பை வழங்கியிருந்தனர். சஷிக விஜேசூரிய மீண்டும் ஒருமுறை தனது திறமையால் அணியை வலுவூட்டியதுடன் இறுதிப் போட்டியை வெல்வதற்கான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்கி வரும் சஷிக, செலான் வங்கியின் மேசைப்பந்து வரலாற்றில் தனக்கென ஒரு தனியிடத்தை உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2003 முதல் 2005 வரை செலான் வங்கியின் மேசைப்பந்து அணியின் தலைவராக பணியாற்றிய உதித களுவாரச்சியின் முயற்சிகள் செலான் மேசைப்பந்து அணியின் ஒவ்வொரு சாதனையிலும் முக்கிய பங்காற்றியுள்ளன. வீரர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பதவிகளை வகித்த உதித, அணி தொடங்கப்பட்டதிலிருந்து 25 ஆண்டுகளாக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி வரும் மிகவும் அனுபவம் வாய்ந்த உறுப்பினராக உள்ளார். அந்த வகையில், செலான் வங்கிக்குள் மேசைப்பந்தை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்வதில் அவரது அர்ப்பணிப்பு முக்கிய பங்கு வகித்துள்ளது.அணியின் வளர்ந்து வரும் வீரரும், இதுவரையான இளைய உறுப்பினருமான சமித் டில்ஷான், அவரது விடாமுயற்சி மற்றும் ஆற்றலால் அனைவரையும் கவர்ந்ததுடன் இவ்விளையாட்டில் ஒரு நம்பிக்கையான எதிர்காலத்தை குறிக்கின்றது. செலான் அணியின் ஒருங்கிணைந்த வெற்றிகள், திறமை, விளையாட்டு மீதான அர்ப்பணிப்பு மற்றும் ஆரோக்கியமான வேலை-வாழ்க்கை சமநிலையைப் பேணுவதற்கு வங்கி வழங்கும் முன்னுரிமை ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.