சேதன விவசாய கட்டமைப்பு தொடர்பில் அறிவு பகிர்வு அமர்வை சுவிட்சர்லாந்து நிபுணர்கள் முன்னெடுப்பு

Share with your friend

இலங்கையில் பத்து நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டுள்ள சுவிட்சர்லாந்தின் விவசாய உர நிபுணர்களால் சேதன விவசாயம் மற்றும் சூழல் கட்டமைப்பு தொடர்பான அறிவு பகிர்வு அமர்வை முன்னெடுத்திருந்தனர். ஆகஸ்ட் 2ஆம் திகதி களனியிலுள்ள பவர் நிறுவனத்தின் உரத் தொழிற்சாலை வளாகத்தில் இந்த நிகழ்வு கடுமையான பாதுகாப்பு மற்றும் சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி, பொதுச் சுகாதார பரிசோதகர்களின் பங்கேற்புடன் இடம்பெற்றது.

இந்த அறிவு பகிர்வு அமர்வில் பவர் சிரேஷ்ட முகாமைத்துவ அங்கத்தவர்கள், ஊழியர்கள், உர மற்றும் தர பாதுகாப்பு கள அதிகாரிகள், CMW ஆய்வுகூட மற்றும் தொழிற்சாலை ஊழியர்கள், தீனி தயாரிப்பாளர்கள், விலங்கு சுகாதாரம் தொடர்பான விருந்தினர்கள், கால்நடை மற்றும் உயிரியல் பரம்பல் பிரிவுகளான INSEE Ecocycle மற்றும் விசேட விருந்தினர்களாக சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமான வட்டவளை பிளான்டேஷன்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி பினேஷ் பனன்வல ஆகிய பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டின் விவசாயக் கட்டமைப்பு தொடர்பில் புரிந்துணர்வைப் பெற்றுக் கொள்ளும் நிபுணர் குழுவின் விஜயத்தின் ஒரு அங்கமாக இந்த நிகழ்வு அமைந்திருந்தது. எ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் இந்த விஜயத்தை ஏற்பாடு செய்திருந்தது. இதற்காக சேதன விவசாயத்தில் உலகின் முன்னணி ஆய்வு மற்றும் அபிவிருத்தி அமைப்புகளாக கருதப்படும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சேதன விவசாய ஆய்வு நிறுவனம் (FiBL) மற்றும் பிரயோக விஞ்ஞானத்துக்கான பேர்ன் பல்கலைக்கழகத்தின் விவசாய, வனாந்தர மற்றும் உணவு விஞ்ஞானத்துக்கான கலாசாலை (HAFL) போன்றவற்றுடன் பவர் கைகோர்த்திருந்தது. பல்வேறு பிரதான நிறுவனங்களுடன் இந்த நிபுணர்கள் சந்திப்புகளை மேற்கொண்டு, விவசாயிகள் மற்றும் இதர அங்கத்தவர்களுடன் தொடர்புகளை பேணுவதுடன், நாட்டின் பல பகுதிகளுக்கு விஜயங்களை மேற்கொள்ளும்.

ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவ பணிப்பாளருமான ரொஃல்ப் பிளேசர் தமது வரவேற்பு உரையில், “சேதன விவசாய சவாலில் முன்னாயத்தமான நிலையை ஏற்றுள்ளதையிட்டு பெருமை கொள்கின்றோம். நான்கு மாதங்களுக்கு முன்னதாகவே இந்த உரையாடலை ஆரம்பித்து, திட்டத்தை முன்னெடுத்தோம்.” என்றார்.

“உலகத் தரம் வாய்ந்த நிபுணர்களை கொண்டு சேதன விவசாய சூழல் கட்டமைப்பு தொடர்பிலும், வளங்கள் தொடர்பிலும் ஆராய்ந்து, அறிவுப் பகிர்வை மேற்கொள்வதனூடாக நாட்டுக்கும், விவசாயத்துறைக்கும் பெருமளவு அனுகூலம் சேர்க்கக்கூடியதாக இருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம். நாம் இணைந்து எதிர்வரும் நாட்களில் பல பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதுடன், இதில் பிரதான அதிகாரிகள், கல்விமான்கள் மற்றும் நிபுணர்கள் என பலரும் அடங்கியிருப்பர்.” என்றார்.

தேசன விவசாய நகர்வுகளுக்கான சர்வதேச சம்மேளனம் (IFOAM) என்பதன் பிரகாரம், இலங்கை தற்போது சேதன விவசாயத்தில் 2.5 சதவீத பங்கைக் கொண்டுள்ளது. 

HAFL இன் இயற்கை வளங்கள் முகாமைத்துவ பேராசிரியர் கலாநிதி. கிறிஸ்டோஃவ் ஸ்டுடர், சூழல்சார் விவசாய வழிமுறையை பின்பற்ற வேண்டியதன் முக்கியத்துவம் தொடர்பில் ஒன்றுகூடியிருந்தோர் மத்தியில் உரையாற்றியிருந்தார். மண் வள நிர்வாகத்தின் முக்கியத்துவம் பற்றி பேராசிரியர் குறிப்பிட்டிருந்ததுடன், தாவரங்களுக்கு போஷாக்கை வழங்குவது என்பது மாத்திரம் இலக்காக அமைந்திராமல், உற்பத்தி மற்றும் சூழல் கட்டமைப்பு சேவைகள் போன்ற பரந்தளவு செயற்பாடுகளுக்கு மண்ணை உகந்த வகையில் வைத்திருப்பதற்கு உதவியாக உள்ளது. சேதன விவகாரங்கள், மண் வளம், வளங்களை நிலைபேறான வகையில் பயன்படுத்துவது, பரந்தளவு பயிர்ச் செய்கை முறைமைகள், போஷாக்குகள், உயிரியல் உரங்கள் போன்றன பல விடயங்கள் பற்றியும் இவர் விளக்கமளித்திருந்தார்.

FiBL இன் தாவரவியல் தொடர்பான சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி. ஜாக்ஸ் ஜி. ஃபுச்ஸ், சேதன கழிவுகளை மீள்சுழற்சிக்குட்படுத்துவதன் அடிப்படைகள் பற்றிய தகவல்களை பகிர்ந்திருந்ததுடன், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த அனைவரும் தமது வீடுகளில் சேதன மற்றும் உக்காத கழிவுகளை வேறுபடுத்தும் முறையை பின்பற்றுவதாக குறிப்பிட்டார். அங்கு பரந்தளவு கழிவுப் பிரிவுகள் காணப்படுவதாகவும் குறிப்பிட்டார். மண் வளத்தை பல்வேறு வழிமுறைகளில் கொம்போஸ்ட் உரத்தை பயன்படுத்தி மேம்படுத்துவது பற்றியும் கலாநிதி. ஃபுச்ஸ் விளக்கமளித்திருந்தார். உயிரியல் கழிவுகள், பல்வேறு கழிவுகளை கொம்போஸ்ட் உரமாக மாற்றுவது அல்லது anaerobic fermentation, anaerobic degradation process, decomposition and maturation போன்ற செயன்முறைகளைப் பின்பற்றி தயாரித்துக் கொள்வது பற்றிய விளக்கங்களை வழங்கியிருந்தார்.

சூழலுக்கு நட்பான கழிவுகளை சேகரித்து அதன் நிர்வகித்தல் செயன்முறை வரையான பல விடயங்களைப் பற்றியும் கலாநிதி. ஃபுச்ஸ் தகவல்களைப் பகிர்ந்திருந்தார். இதில், சேதன கழிவு சேகரிப்பு, கொம்போஸ்ட் உரம், anaerobic fermentation கட்டமைப்புகள், மூலப் பொருட்கள் கலவை, செயன்முறை முகாமைத்துவம், இறுதித் தயாரிப்புகளை களஞ்சியப்படுத்தல் போன்றன அடங்குகின்றன.

இந்த நிகழ்வின் போது நிபுணர்கள் குழுவின் நான்கு அங்கத்தவர்களுடனான கேள்வி பதில் அமர்வொன்றும் இடம்பெற்றது. இதில் HAFL இன் tropical agroecosystems தொடர்பான சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி. குர்பிர் எஸ். புல்லர், FiBL இன் சிரேஷ்ட ஆலோசகர் போல் வன் டென் பேர்க் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் விவசாய பணிகளுக்கான பிரதி முகாமைத்துவ பணிப்பாளரும் பணிப்பாளருமான ஜனக குணசேகர நன்றி உரை நிகழ்த்தியிருந்தார்.


Share with your friend