இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடா, டோக்கியோ சீமெந்து திருகோணமலை தொழிற்சாலைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். ஜப்பானுக்கும் இலங்கைக்குமிடையே காணப்படும் பொருளாதார உறவுகள் மற்றும் நீண்ட கால நட்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் வகையில் இந்த விஜயம் அமைந்திருந்தது.


தூதுவருடன், நிதிசார் இணைப்பாளர் யுகாகோ மிசுனுமா மற்றும் ஜப்பானிய தூதரகத்தின் இரண்டாம் செயலாளர் சச்சி டனாகா ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்திருந்தனர். டோக்கியோ சீமெந்து நிறுவனத்தின் உற்பத்திக் கொள்ளளவில் ஒரு மில்லியன் மெட்ரிக் டொன்களை மேலதிகமாக சேர்த்திருந்த, பிந்திய விரிவாக்க செயற்திட்டம் குறித்தக விளக்கங்கள் இந்த விஜயத்தின் போது வழங்கப்பட்டிருந்தது. இலங்கையின் பொருளாதார விரிவாக்கம் மற்றும் தொழிற்துறை அபிவிருத்தியில் வலுவூட்டும் மைல்கல்லாக இந்த விரிவாக்கம் அமைந்துள்ளது.
டோக்கியோ சீமெந்து சிறப்பு நிலையத்தில், டோக்கியோ சீமெந்து கம்பனி (லங்கா) பிஎல்சியின் முகாமைத்துவ பணிப்பாளர் எஸ்.ஆர். ஞானம் மற்றும் டோக்கியோ சீமெந்தின் தொழினுட்ப பங்காளர் மிட்சுபிஷி UBE சீமெந்து கூட்டுத்தாபனத்தின் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் மிச்சியோ மட்சொகா ஆகியோர் தூதுக்குழுவினரை வரவேற்றதுடன், தொழிற்சாலையினுள் விஜயமொன்றையும் மேற்கொண்டிருந்தனர். புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட சீமெந்து ஆலை, திருகோணமலை துறைமுகத்தில் அமைந்துள்ள டோக்கியோ சீமெந்து ஜெட்டி மற்றும் ஏ.வை.எஸ். ஞானம் கிராமம் இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையம் ஆகியவற்றுக்கான விஜயங்கள் இதில் அடங்கியிருந்ததுடன், சமூக-பொருளாதார அபிவிருத்தியில் நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலித்திருந்தது.
நான்கு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக, ஜப்பான் மற்றும் இலங்கை இடையிலான தொடர்ச்சியான பங்காண்மையின் அடையாளமாக டோக்கியோ சீமெந்து திகழ்வதுடன், தொழிற்துறை வளர்ச்சியை பிரதிபலிப்பது மட்டுமன்றி, நிலைபேறான அபிவிருத்திக்கான பகிரப்பட்ட நோக்கையும் வெளிப்படுத்திய வண்ணமுள்ளது.
உயர் தரம் வாய்ந்த சீமெந்து, கொங்கிறீட் மற்றும் சீமெந்து சார் புத்தாக்கமான தயாரிப்புகள் உற்பத்தியில் இலங்கையின் மாபெரும் செயற்பாட்டாளராக திகழும் டோக்கியோ சீமெந்து, நிர்மாணத் துறையில் நம்பிக்கையை வென்ற விநியோகத்தர் எனும் கீர்த்தி நாமத்தையும் பெற்றுள்ளது. உள்நாட்டு பெறுமதி உருவாக்கத்தினூடாக தேசிய பொருளாதாரத்துக்கு வலுவூட்டுவதற்கு நிறுவனம் தன்னை அர்ப்பணித்துள்ளதுடன், இலங்கையின் தொழிற்துறை முன்னேற்றத்துக்கும் வலிமை சேர்க்கிறது. தரம், புத்தாக்கம் மற்றும் நிலைபேறாண்மை போன்றவற்றுக்கு ஒப்பற்ற அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதுடன், தேசத்தைக் கட்டியெழுப்பும் செயற்பாடுகளில் முன்னோடியான பங்காளராக, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இணைந்த செயற்பாட்டாளராகவும் திகழ்கிறது.