தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான SLT-MOBITEL, சிங்கள விளையாட்டுக் கழகத்துடன் (SSC) ஐந்தாண்டு கால பிரத்தியேக உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நாட்டில் காணப்படும் முன்னணி விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாக SSC திகழ்கின்றது. இந்த உடன்படிக்கையின் பிரகாரம், SSC இன் முழுத் தொடர்பாடல் வலையமைப்பும், ஃபைபர் கட்டமைப்புக்கு மாற்றம் செய்யப்பட்டு, அதனூடாக அதிவேக குரல், இணைய மற்றும் PEOTV சேவைகள் கழகத்துக்கும் அதனைப் பயன்படுத்துவோருக்கும் வழங்கப்படும்.
இந்த உடன்படிக்கையில் SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக ஆர் அபேசிங்க மற்றும் SSC தலைவர் ஐ.எஸ். டி சில்வா ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தனர். இந்நிகழ்வில் SLT மற்றும் SSC ஆகியவற்றின் சிரேஷ்ட அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர்.
SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக ஆர் அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “இரு முன்னணி நிறுவனங்களின் பரஸ்பர அனுகூலம் நிறைந்த வியாபார உறவின் ஆரம்பமாக இது அமைந்திருப்பதுடன், SSC இல் சகல செயற்பாடுகளிலும் டிஜிட்டல் தீர்வுகளை அறிமுகம் செய்ய நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.
SLT-MOBITEL ஃபைபர் சேவைகளினூடாக, SSC அங்கத்தவர்களுக்கும், விருந்தினர்களுக்கும் சிறந்த இணைப்புத்திறன் மற்றும் அதியுயர் இணைய வேகங்கள் போன்றன வழங்கப்படும்.
SSC கழகத்தின் தலைவர் ஐ.எஸ்.டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “எமது தொடர்பாடல் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, SLT-MOBITEL போன்ற தொலைத்தொடர்பாடல் ஜாம்பவானுடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் பெருமை கொள்வதுடன், மகிழ்ச்சியடைகின்றோம். எமது அங்கத்தவர்களுக்கு SLT-MOBITEL இன் உயர் தொழில்நுட்பங்களினூடாக சிறந்த அனுபவத்தைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக இருக்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளோம்.” என்றார்.
SLT-MOBITEL இன் ஃபைபர் இணைப்புகளை துரித கதியில் பெற்றுக் கொடுப்பது மற்றும் 2 மில்லியனுக்கும் அதிகமான இல்லங்களுக்கு ஃபைபர் புரோட்பான்ட் தொழில்நுட்பத்தை வழங்குவது ஆகியவற்றின் பிரகாரம் இந்த உடன்படிக்கை அமைந்துள்ளது.
1899 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட சிங்கள விளையாட்டுக் கழகம் (SSC), 120 வருடங்களுக்கு மேலாக இயங்குவதுடன், நாட்டிலுள்ள மிகவும் பெருமைக்குரிய விளையாட்டுக் கழகங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கொழும்பின், கறுவாத் தோட்டப்பகுதியில் அமைந்துள்ளதுடன், 6000 க்கு அதிகமான அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. சர்வதேச கிரிக்கட் கழகங்களுடன் பரஸ்பர அங்கத்துவங்களையும் பேணி வருகின்றது.