தேசத்தின் சேதன உரப் பயன்பாடு முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் சுவிஸ் நிபுணர்களை மீள அழைத்துவருவதற்கு பவர் ஆதரவு

Share with your friend

பாரம்பரிய முறைமையிலிருந்து சேதன விவசாய முறைக்கு வெற்றிகரமாக மாறிக் கொள்வதற்கு விஞ்ஞான ரீதியாக மற்றும் பிரயோக ரீதியாக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் தொடர்ச்சியான முயற்சிகளின் மற்றுமொரு அங்கமாக, ஏ. பவர் அன்ட் கம்பனி (பிரைவட்) லிமிடெட் நிறுவனத்தினால், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த சேதன விவசாய நிபுணர்கள் அணியினரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்திருந்தது. ஏற்கனவே இந்த நிபுணர்கள் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நிலையில், பெப்ரவரி மாதத்தின் முற்பகுதியில் இவர்களை மீண்டும் அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை பவர் மேற்கொண்டிருந்தது.

கம்பஹா உயிரியல் பூங்காவின் கேட்போர் கூடத்தில் நிலைபேறான விவசாயத்துக்காக கொம்போஸ்ட் உரத்தை பயன்படுத்துவதன் அனுகூலம் பற்றிய பயிற்சிப் பட்டறையை நிபுணர்கள் முன்னெடுக்கின்றனர்.

இந்த அணியில் School of Agricultural, Forest and Food Sciences (HAFL)இன் இயற்கை வளங்கள் முகாமைத்துவ பேராசிரியர். கிறிஸ்டோஃப் ஸ்டுடர், Plant Pathology and Soil Quality தொடர்பான சிரேஷ்ட விஞ்ஞானி கலாநிதி. ஜாக்ஸ் ஜி ஃபுக்ஸ் மற்றும் Research Institute of Organic Agriculture (FiBL) இன் சிரேஷ்ட ஆலோசகர் போல் வன் டென் பேர்க் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்த இரண்டாம் கட்ட விஜயத்தின் போது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10 நாட்கள் விஜயமொன்றை மேற்கொண்டிருந்த போது முன்னெடுத்திருந்த பரந்தளவு பங்காளர்களுடனான ஆரம்ப கட்ட சந்திப்புகளுடனான, ஆழமான பகுப்பாய்வுகள் மற்றும் மதிப்பீடுகளைத் தொடர்ந்து, பரிபூரண ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டிருந்தது. ஆரம்ப கண்டறிதல்களின் பிரகாரம் தந்திரோபாய ரீதியில் இனங்காணப்பட்ட பகுதிகள் தொடர்பில் மேலும் ஆய்வுகளை முன்னெடுப்பது இம்முறை விஜயத்தின் நோக்கமாக அமைந்திருந்தது.

பவர் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரொலஃவ் பிளாசர் மற்றும் பிரதி முகாமைத்துவ பணிப்பாளரும் விவசாய பணிப்பாளருமான ஜனக குணசேகர ஆகியோர் விவசாய அமைச்சில் நிபுணத்துவ அணியினருடன் காணப்படுகின்றனர்.

9 நாட்கள் விஜயத்தின் போது, அரசாங்கத்தின் நிலைபேறான விவசாய கொள்கை தொடர்பான தற்போதைய நிலைப்பாடு பற்றி அறிந்து கொள்வதற்காக, விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் இந்த நிபுணர்கள் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்ததுடன், அரிசி ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (RRDI), கள விளைச்சல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம் (FCRDI), பண்ணை பொறிமுறைப்படுத்தல் ஆய்வு நிலையம் (FMRC), பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் மஹாஇலுப்பள்ளமவிலுள்ள உப கம்பஸ் வளாகம்  மற்றும் தேயிலை ஆராய்ச்சி நிறுவனம் (TRI) ஆகியவற்றுக்கு விஜயம் செய்து அவற்றின் ஈடுபாடு மற்றும் எதிர்காலத்திட்டங்கள் பற்றி அறிந்து கொண்டது.

இதன் போது கள விளைச்சல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனத்தின் (FCRDI) அதிகாரிகள் மற்றும் கல்விமான்களுடன் கலந்துரையாடல்கள் இதில் அடங்கியிருந்தன. இரு பிரதான நெற் போகங்களுக்கிடையே மாற்றுப் பயிர்ச் செய்கை ஒன்றை மேற்கொள்ளக்கூடிய வாய்ப்புகள் பற்றி கண்டறியும் வகையில் இந்த உரையாடல்கள் அமைந்திருந்தன. நுவரெலியா நகர சபைக்குட்பட்ட பகுதிகளுக்கு இந்த நிபுணர் குழு விஜயம் செய்து, வெளி நகரங்களில் காணப்படும் கழிவு முகாமைத்துவ செயன்முறை பற்றி கவனம் செலுத்தியிருந்தது. நுவரெலியா நகரில் கழிவு முகாமைத்துவம் தொடர்பில் பின்பற்றப்படும் செயன்முறைகள் பற்றி தமது செயன்முறைகள் மற்றும் அனுபவங்கள் பற்றி மேயர் அடங்கலாக சபை அங்கத்தவர்கள் விளக்கமளித்திருந்தனர். தம்புளையிலுள்ள மாபெரும் மரக்கறி மற்றும் பழங்கள் மொத்த வியாபார நிலையத்துக்கும், முன்னணி பால் பண்ணைப் பகுதி, தனியார் கோழிப் பண்ணை மற்றும் சிலாபத்திலுள்ள கொம்போஸ்ட் தயாரிப்புப் பகுதி போன்றவற்றுக்கும் அவர்கள் விஜயம் செய்து சேதன பயிர்ச் செய்கைக்கு தேவையான மூலப்பொருட்களைப் பெற்றுக் கொள்வது பற்றி கவனம் செலுத்தியிருந்தனர்.

FiBL மற்றும் HAFL உடன் பவர் கொண்டுள்ள பங்காண்மையின் அங்கமாக,  Bern University of Applied Sciences இன் பட்டதாரியான ஜாக்ஸ் கோலி, பவர் நிறுவனத்தில் இடைக்கால பயிற்சி பெறுநராக பணியாற்றுகின்றார். இதன் போது, சேதன உரத் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருட்களின் கிடைப்பனவு மற்றும் அவற்றின் பயன்பாடுகள் பற்றிய விவரமான ஆய்வொன்றை மேற்கொள்கின்றார். 

இலங்கை நனோதொழில்நுட்பவியல் கல்வியகம் (SLINTEC), தொழில்துறை தொழில்நுட்ப கல்வியகம் (ITI) மற்றும் உயிரியல் உர உற்பத்தியாளர் ஆகிய அதிகாரிகளுடனும் இவர்கள் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தனர். இதன் போது அரசாங்கத்தின் வழிகாட்டல் தொடர்பான அவர்களின் நிலைப்பாடு மற்றும் அவர்களுடன் கைகோர்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புகள், இலங்கை தரக்கட்டளைகள் நிறுவனம் (SLSI) மற்றும் தேசிய தாவர தனிமைப்படுத்தல் சேவை போன்ற கொள்கை வடிவமைப்பாளர்களுடன் கலந்துரையாடல்களும் இதில் அடங்கியிருந்தன.

மேலும், குருநாகல் உமந்தாவ சர்வதேச பௌத்த கிராமத்துக்கும் தம்புளை மற்றும் நுவரெலியாவைச் சேர்ந்த பண்ணைப் பகுதிகளுக்கும் மற்றும் இதல்கஸ்ஹின்ன சேதன தேயிலைத் தோட்டம் ஆகியவற்றுக்கு அவர்கள் விஜயம் செய்து அங்கு பின்பற்றப்படும் பயிலல் மற்றும் விவசாய செயன்முறைகள் மற்றும் பொறிமுறைகள் பற்றி ஆராய்ந்திருந்தனர். ஆரம்ப விஜயத்தின் போது இந்த நிபுணர்கள் முன்னெடுத்திருந்த பயிற்சிகளின் தொடர்ச்சியாக சேதன விவசாயிகளினால் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்வது தொடர்பில் விவசாயிகளுக்கான பயிற்சிகளை இந்த நிபுணர்கள் முன்னெடுத்திருந்தனர். பவர் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் மற்றும் சந்தைப்படுத்தல் அணியினருடன் அறிவுப் பகிர்வு அமர்வை முன்னெடுப்பதையும் ஆரம்பித்தனர்.


Share with your friend