யுனிசெஃப்பின் 75வது வருடப் பூர்த்தியை முன்னிட்டு சிறப்பான எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்து பேசும் இளையோர்

Share with your friend

யுனிசெஃப் தனது 75வருடப் பூர்த்தி மற்றும் சிறுவர்களின் உரிமைகளுக்கான சமவாயம் என்பவற்றைக் கொண்டாடும் நோக்கில் இலங்கையில் சிறுவர்கள் மற்றும் இளையோர் எதிர்கொள்ளும் அழுத்தமான பிரச்சினைகளை எடுத்துக்கூறல், பல ஆண்டுகளாக அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதிபலிக்கும் வகையில் ‘அனைத்து சிறுவர்களுக்காகவும் எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்யுங்கள்’ என்ற தொனிப்பொருளில் குழுக் கலந்துரையாடலை ஏற்பாடு செய்தது.

பதினாறு வயது முதல் பருவ வயதுவரை உள்ளவர்களின் கல்வித் தேவை மற்றும் அதன் மீதான அக்கறை, காலநிலை மாற்றம், மென்திறன்கள், உளநலம், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருதல், கொவிட்-19 ஏனையவர்கள் மீது ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் போன்றவை குறித்து சிறந்த புரிதலை ஏற்படுத்துவதற்காக கடந்த சில மாதங்களாக யுனிசெப் ஏறத்தாழ 3000 இளையோருடன் ஈடுபாடுகளை மேற்கொண்டிருந்தது. சிறுவர்கள் மற்றும் இளையோரின் பார்வை, யோசனைகள் புதிய மூலோபாயத் திட்டத்தில் ஒருங்கிணைக்கப்படுவதை உறுதிப்படுத்தும் யுனிசெஃப்பின் திட்டத்தின் ஒரு அங்கமாக இந்த அறிவுகோரல் நிகழ்வுகள் முன்னெக்கப்பட்டன.

இலங்கையின் தற்போதைய இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் கொவிட்-19 தொற்றுநோயினால் மோசமடைந்துள்ளன. இளைய சமுதாயத்தினர் மீது வைரஸ் மெதுவான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், அதன் விளைவுகள் அவர்களை மோசமாகப் பாதித்துள்ளன. வேலையின்மையினால் ஏற்பட்ட சுமையின் காரணமாக குடும்பங்களின் வருமானம் இழப்பு, கற்றலுக்கான இடையூறு, சுரண்டலுக்கான வெளிப்பாடு மற்றும் ஏனையவர்கள் மத்தியில் துஸ்பிரயோகம், சிறுவர் மற்றும் இளையோருக்கிடையில் சமனற்ற தன்மை என்பனவற்றுக்கு வழிவகுத்துள்ளன.

அறிவுகோரல் நிகழ்வுகளில் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தியிருந்த மூன்று இளையோர் இந்தக் குழுக் கலந்துரையாடலில் பங்கேற்றனர். இந்தப் பிரச்சினைகளில் தாம் ஈடுபட்ட சில விடயங்கள் மற்றும் அனைத்து சிறுவர்களுக்காகவும் எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்தல் என்பவற்றில் கொண்டுள்ள தமது தனிப்பட்ட அனுபவங்களை அவர்கள் இங்கு பேசியிருந்தனர்.

இரத்தினபுரியில் வசிக்கும் பாக்யா அபேரத்ன 20 வயதுடையவர். காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து உரையாற்றிய அவர் குறிப்பிடுகையில், “காலநிலை மாற்றம் என்பது இளம் சமுதாயத்தினர் எதிர்கொள்ளும் பாரியதொரு அச்சுறுத்தலாகும். ஆரோக்கியமான சுற்றாடலுக்கு முக்கியமாக விளங்கும் சுற்றுச்சூழல் கட்டமைப்பு அழிக்கப்படும் அதேநேரம், அதிகரித்த இயற்கை அனர்த்தங்கள் காலநிலை மாற்றத்தைப் பாதிப்பதுடன், சிறுவர்களின் நலன்களிலும் மோசமான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றன. மாற்றத்துக்கான முகவர்களாக நாங்கள் இருந்தாலும், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துக்கான எமது குரல்களுக்கு குறைந்தளவு இடமே காணப்படுகிறது” என்றார்.

உளநலம் பற்றி கவனத்தை ஈர்த்த மட்டக்களப்பைச் சேர்ந்த யதுஜன் மகேந்திரன் (20வயது) தற்கொலை தொடர்பில் தனது தனிப்பட்ட அனுபவத்தைத் தொடர்புபடுத்திப் பேசினார். “மனநலத்தைச் சுற்றியுள்ள குறை, அறியாமை மற்றும் வரையறுக்கப்பட்ட விழிப்புணர்வு என்பவற்றை நாம் அகற்ற வேண்டும். கொவிட்-19 அனைத்து இடங்களிலும் உள்ள சிறுவர்களின் வாழ்க்கையை தலைகீழாக்கியிருப்பதுடன், இக்கட்டான உளநல சுகாதார சேவையை இடைநிறுத்தியுள்ளது அல்லது அதற்குத் தடையேற்படுத்தியுள்ளது. பாடசாலைகளில் உளவள ஆலோசனை உள்ளிட்ட சிகிச்சைக்கான அணுகல் வசதி குறைவாக உள்ளமை, உளநல சுகாதாரத்துக்கான ஒத்துழைப்புக் கட்டமைப்பு மற்றும் தகுதிபெற்ற நிபுணர்கள் குறைவாக உள்ளமை என்பன சிறுவர்கள் மற்றும் இளைய சமுதாயத்தினர் எவ்வளவு பாதிக்கக் கூடியவர்கள் என்பதை எடுத்துக் காட்டுகின்றன” என யதுஜன் குறிப்பிட்டார்.

பாகுபாடு மற்றும் உள்ளடக்காமை உள்ளிட்ட சமூக ஒற்றுமைக்கான பிரச்சினைகளைச் சுட்டிக்காட்டிப் பேசிய கொழும்பைச் சேர்ந்த 17 வயதுடைய யும்னா சஹீட் தெரிவிக்கையில், “வன்முறை, சுரண்டல் மற்றும் துஷ்பிரயோகத்திலிருந்து பாதுகாப்பதற்கான உரிமை எனக்கு உள்ளது. இருந்தபோதும் கூட, இளம் சமுதாயத்தைச் சேர்ந்தவள் என்ற ரீதியில் தனிப்பட்ட ரீதியில் கொடுமைப்படுத்தல் மற்றும் பாகுபாடுகளை சந்திக்கின்றேன். இன்று சமூக ஊடகங்கள் கூட கொடுமைப்படுத்தல் நிறைந்த வெளியாகக் காணப்படுகிறன. வன்முறை, சுரண்டல், சாதி மற்றும் குலம் போன்ற தேவையற்ற சமூக வேறுபாடுகள் இல்லாத பாதுகாப்பான சூழலில் நாம் வாழவேண்டும். இது நெருக்கடியான அல்லது அவசரமான  நேரத்தில் மாத்திரம்  நிறுத்தப்படக்கூடாது, விசேடமாக எமது உயர்வாழ்வு, முன்னேற்றம் மற்றும் நலனுக்காக இது மேம்படுத்தப்பட வேண்டும்” என்றார்.

இவர்களின் அவதானிப்புக்கள் மற்றும் சொந்த அனுபவங்களை அடிப்படையில், தமது சொந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்போது இளம் சமுதாயத்தினரின் குரல்கள் செவிமடுக்கப்படுவதுடன் அவர்களின் நிலைப்பாடுகள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் அதன்  முக்கிய தேவையை இந்த இளம் சமுதாயத்தினர் வெளிப்படுத்தியுள்ளனர். தேசத்தின் எதிர்காலமாக விளங்கும் இலங்கையின் இளம் சந்ததியினர் எதிர்கொள்ளும் எண்ணற்ற பிரச்சினைகளுக்கு பல்வேறு மட்டத்திலான தீர்வுகளை இந்த மூன்று பேச்சாளர்களும் அடையாளம் கண்டுள்ளனர். 

அவர்களால் எழுப்பப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குத் துணிவான மற்றும் அவசரமாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகளை ஒவ்வொரு பேச்சாளரும் சுருக்காக முன்வைத்தனர்:

  • பாக்யா – காலநிலை மாற்றத்தின் பேரழிவான தாக்கம், விசேட சூழலியல்; மற்றும் உயிரியல் பல்வகைமை கட்டமைப்பை அழிப்பது தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தி சூழல் மாசுபடுவதைக் குறைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு பொறுப்புவாய்ந்த நபர்கள் மற்றும் சமூகங்களைக் கொண்ட தேசமாக இருக்க வேண்டியதன் அசியத்தையும் அவர் ஊக்குவித்தார். 
  • யதுஜன் – மனஅதிர்ச்சியால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு அதிர்ச்சியை சமாளிக்கவும், அதனைத் தாங்கும் திறனைக் கட்டியெழுப்புவதற்கும் உதவும் வகையில் பிரச்சினையைத் தீர்ப்பது, பேச்சுவார்த்தை நடத்தல் மற்றும் உணர்ச்சிகளை அடக்குதல் உள்ளிட்ட ‘வாழ்க்கைத் திறன்களை’ அல்லது ‘சமூக உணர்ச்சி திறன்களை’ மேம்படுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். சுகாதாரத் துறைக்கான அரசாங்கத்தின் செலவீனங்களை அதிகரித்து தரத்தை உயர்த்துவதன் ஊடாக உள சுகாதார சேவையை அணுகுவதற்கான வழியை அதிகரிக்க வேண்டும் என அவர் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.
  • யும்னா – மாறுபட்ட இனங்கள், கலாசாரங்கள், வகுப்புக்கள், பாலினங்கள், திறன்கள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட, வெவ்வேறு மொழியியல் திறன்கொண்டவர்கள் தொடர்பான பன்முகத் தன்மையைத் தழுவுவது பற்றி சிறுவர்கள் மற்றும் இளையோர் மத்தியில் புரிதலை ஏற்படுத்துவது ஊக்குவிக்கப்பட வேண்டியதன் அவசியம் எதிரெலித்தது. பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் சிறுவர்கள் மற்றும் இளையோருக்கு எதிரான எந்த விதமான வன்முறைகள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமரசமற்ற கொள்கைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார்.

இந்த மூன்று பேச்சாளர்கள் பகிர்ந்துகொண்டவற்றுக்கும் அப்பால், தேசிய பரீட்சைகளில் செயல்திறன் குறித்த கல்வி ரீதியான அழுத்தங்கள், தமது கல்விக்கான டிஜிட்டல் கருவிகள் மற்றும் தொழில்நுட்பத்துக்குப் போதிய அணுகல் இல்லாமையால் தனித்து விடப்படல் மற்றும் ஓரங்கட்டப்படல், கொவிட்-19 கொடுத்துள்ள மன உழைச்சல், போதிய வருமான மற்றும் வளப் பற்றாக்குறையால் உணவுப் பற்றாக்குறைக்கு முகங்கொடுத்தல், தொழிற் பயிற்சிக்குச் செல்லும்போது போதிய சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் இல்லாமை போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்த கவலைகளும் அவற்றுக்கு எதிராக உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளும் அறிவுகோரல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட இளம் சமுதாயத்தினரால் முன்வைக்கப்பட்டன.

யுனிசெஃப் தலைமையிலான #IMAGINE முயற்சியின் ஒரு பகுதியாக சில வருடங்களுக்கு முன்னர் ஜோன் லினோனின் நம்பிக்கை மற்றும் சமாதானத்துக்கான ‘இமாஜின்’ பாடல் அனைத்து சிறுவர்களுக்கும் சிறந்த எதிர்காலத்தை நோக்கிய உலக இயக்கத்தை ஊக்குவிக்க உதவியது. இன்று ‘அனைத்து சிறுவர்களுக்காகவும் எதிர்காலத்தை மீண்டும் கற்பனை செய்யுங்கள்’ என்ற தொனிப்பொருளை நினைவுபடுத்தவும், ஊக்குவிக்கவும் 13 வயதுடைய மனித்ரீ வல்பொல என்ற கலைஞர் அனைத்துக் குழந்தைகளுக்கான நம்பிக்கையின் அடையாளமாக பாடலைத் தனது சொந்த மொழியாக்கத்தில் வழங்கியுள்ளார்.


Share with your friend