ரிட்ஸ்பரி சேர் ஜோன் டாபர்ட் கனிஷ்ட பாடசாலை மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் 2023 நவம்பர் 5 ஆம் திகதி கொழும்பு சுகததாஸ மைதானத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. இலங்கையின் முதல் தர சொக்லட் நாமமான சிலோன் பிஸ்கட்ஸ் லிமிடெட் (CBL) நிறுவனத்தின் ரிட்ஸ்பரி இந்நிகழ்வுக்கு பெருமைக்குரிய அனுசரணையாளராக திகழ்ந்தது. பாடசாலை மட்ட விளையாட்டுப் போட்டிகளில் இந்த நிகழ்வு மற்றுமொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது.
இலங்கை பாடசாலைகள் மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் (SLSAA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த சம்பியன்ஷிப் போட்டிகளில், 2000 இளம் மெய்வல்லுநர்கள் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட பல்வேறு வயதுப் பிரிவுகளில் பங்கேற்றிருந்தனர். ஒவ்வொரு பங்குபற்றுநரும் பெலியத்த, கண்டி, பண்டாரகம மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நபரங்களில் நடைபெற்ற ஆரம்ப சுற்று போட்டிகளில் பங்கேற்று தமது திறமைகளை வெளிப்படுத்தி இந்தப் போட்டிகளில் பங்கேற்க தெரிவாகியிருந்தனர். ஆரம்ப சுற்று போட்டிகளில் 15000 க்கு மேற்பட்டவர்கள் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சம்பியன்ஷிப் வெற்றியாளர்களாக ஆண்கள் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரி அணி 44 புள்ளிகளுடன் முதலிடத்தையும், கண்டி டிரினிட்டி கல்லூரி அணி 42.5 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுக் கொண்டன. பெண்கள் பிரிவில் நீர் கொழும்பு ஆவே மரியா கன்னியர் மட அணி 83 புள்ளிகளுடன் முதலிடத்தையும், வத்தளை லைசியம் அணி 57 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றன. பரி.தோமாவின் கனிஷ்ட கல்லூரியின் எஸ். பிரிபாசித், உயரம் பாய்தலில் 1.90m பாய்ந்து 15 வயதுக்குட்பட்டவர்கள் (827 புள்ளிகள்) சிறந்த ஆண் மெய்வல்லுநராகவும், வத்தளை லைசியம் பி.ஆர். ஏ.டி. நெத்சரா நீளம் பாய்தலில் 5.64m (921 புள்ளிகள்) சிறந்த பெண் மெய்வல்லுநராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
நிகழ்வில் CBL Foods இன்டர்நஷனல் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “சுமார் ஒரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக நாம் சேர் ஜோன் டாபர்ட் பாடசாலை மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளுக்கு ஆதரவளிக்கின்றோம். பாடசாலை மட்டத்தில் மெய்வல்லுநர்களை ஊக்குவிக்க வேண்டும் எனும் நோக்கத்துக்கமைய இந்த ஆதரவு அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஆர்வம் அதிகரிப்பதையும், சிறந்த இளம் மெய்வல்லுநர்களின் திறமைகள் அதிகரித்துச் செல்வதையும் காண முடிகின்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே, SLSAA இனால் பரிந்துரைக்கப்பட்ட இளம் பாடசாலை மெய்வல்லுநர்களுக்கு, தேசிய மட்டத்தில் திறமைசாலிகளாக திகழச் செய்ய ஆதரவளிக்க முடிந்துள்ளதையிட்டும் மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.
SLSAA தலைவர் கலாநிதி. குசல பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “சேர் ஜோன் டாபட் மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டிகளின் ஏக அனுசரணையாளர் எனும் வகையில், ரிட்ஸ்பரி பாடசாலை மட்டத்தில் மெய்வல்லுநர் போட்டிகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றது. பல சவால்களுக்கு மத்தியில் ரிட்ஸ்பரியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பினூடாக, ஆயிரக் கணக்கான மெய்வல்லுநர்களுக்கு தமது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தமை உண்மையில் வரவேற்கத்தக்கதாகும். ரிட்ஸ்பரியின் ஈடுபாட்டின் காரணமாக, எம்மால் நாட்டின் வடக்கு கிழக்கு பகுதிகளிலிருந்தும் அதிகளவான பங்குபற்றலை அவதானிக்க முடிந்தது.” என்றார்.
கடந்த மாதம் யாழ்ப்பாணம், துரையப்பா மைதானத்தில் ஆரம்ப சுற்று போட்டிகளை ஏற்பாடு செய்திருந்தது. வலுவூட்டல், பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றை இலங்கை முழுவதிலும் மேற்கொள்ளும் அடிப்படையில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களைச் சேர்ந்த 1000 க்கும் அதிகமான மாணவர்கள் இந்தப் போட்டிகளில் பங்கேற்றனர். அதனூடாக, நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் விளையாட்டுப் போட்டிகளில் குறைந்தளவு பங்குபற்றலை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இப்பிராந்தியத்தின் விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதில் ரிட்ஸ்பரி காண்பிக்கும் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது.
சிறப்பாக தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்த மெய்வல்லுநர் வீர, வீராங்கனைகளுக்கு விளையாட்டு புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தமை விசேட இந்த ஆண்டின் நிகழ்வின் விசேட அம்சமாக அமைந்திருந்தது. வருடா வருடம் ரிட்ஸ்பரி 15 சிறந்த வீர, வீராங்கனைகளை தெரிவு செய்து, சர்வதேச மட்டத்தில் தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடியவர்களாக தயார்ப்படுத்துவதற்காக புலமைப்பரிசிலை வழங்குகின்றது. அதன் பிரகாரம், கே.எல். அயோமல் அகலங்க (அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயம்), ஜி.எல். அர்த்தவிது (டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம்), ஆர்.பி.நிலுபுள் பெஹேசர (விஜித மத்திய மகா வித்தியாலயம்), எம்.கே.என். விக்ரமசிங்க (விக்ரமபாகு தேசிய பாடசாலை, கம்பளை), எஸ். ஹன்ஷிக முனசிங்க (அம்பகமுவ மத்திய மகா வித்தியாலயம்), துஷேன் மஹிந்தரத்ன (மாரிஸ் ஸ்டெலா கல்லூரி), ஜி.டபிள்யு. ஜாதிய கிருளு (மஹிந்த கல்லூரி), டி. பிரதீபானி விக்ரமசிங்க (விக்ரமபாகு தேசிய பாடசாலை, கம்பளை), டி. சந்தில் (பம்பலப்பிட்டி புனித பேதுரு கல்லூரி), கே.டி. நுஹன்ஷ (மாத்தறை மத்திய மகா வித்தியாலயம்), ஓ. கொடிகார (சென்.லோரன்ஸ் கல்லூரி) மற்றும் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலையின் ஆறு மாணவர்களான எஸ். ஹன்ஷக, ஜே. விஜேதுங்க, எஸ். குலரட்ன, எஸ். சாதித்ய ஆகியோர் இந்தப் புலமைப்பரிசிலைப் பெற்றுக் கொண்டனர்.
Image 01: ரிட்ஸ்பரி – பிரிவு முகாமையாளர், அருண லியனபத்திரன, ஆண்டின் சிறந்த பெண் மெய்வல்லுநருக்கான விருதை வத்தளை லைசியம் கல்லூரியின் பி.ஆர். ஏ.டி. நெத்சராவுக்கு வழங்குகின்றார்.
Image 02: ரிட்ஸ்பரி – பிரிவு முகாமையாளர், அருண லியனபத்திரன, ஆண்டின் சிறந்த ஆண் மெய்வல்லுநருக்கான விருதை பரி.தோமாவின் கனிஷ்ட கல்லூரியின் எஸ். பிரிபாசித்துக்கு வழங்குகின்றார்.
Image 03: ரிட்ஸ்பரி – பிரிவு முகாமையாளர், அருண லியனபத்திரன, ஒட்டுமொத்த பெண்கள் சம்பியன்ஷிப் கிண்ணத்தை நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர் மட அணிக்கு கையளிக்கின்றார்.
Image 04: ரிட்ஸ்பரி – பிரிவு முகாமையாளர், அருண லியனபத்திரன, ஒட்டுமொத்த ஆண்கள் சம்பியன்ஷிப் கிண்ணத்தை கொழும்பு றோயல் கல்லூரி அணிக்கு கையளிக்கின்றார்.