வரலாற்று சிறப்புமிக்க பாரிய இரத்தினக்கற்களை காட்சிப்படுத்தும் FACETS Sri Lanka 2024

Share with your friend

FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது, ஆசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியாகும். இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபை (NGJA), ஏற்றுமதி அபிவிருத்தி சபை (EDB) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் எதிர்வரும் 2024 ஜனவரி 06 – 08 ஆம் திகதி வரை இக்கண்காட்சி இடம்பெறவுள்ளது. கொழும்பில் உள்ள சினமன் கிராண்ட் ஹோட்டலின் புகழ்பெற்ற ஏட்ரியம் லொபியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வு, இலங்கையின் ஏராளமான இரத்தினக் கற்கள் மற்றும் ஆபரணங்களின் பாரம்பரியத்தின் கொண்டாட்டமாக அமையவுள்ளதோடு, இதில் பல்வேறு விசேட அரங்குகளும் (Pavilions) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த அரங்குகளில், Masterpiece Pavilion ஆனது அனைவரையும் மிகவும் ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த அரங்கு, இலங்கையின் புகழ் பெற்ற நீலம் மற்றும் சிவப்பு மாணிக்கங்களின் நேர்த்தியான அழகை வெளிப்படுத்தும் வகையில் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிகவும் மதிப்புமிக்க, வெட்டப்படாத இரத்தினக்கற்களை ஒரே கூரையின் கீழ் காணும் அரிய வாய்ப்பு பார்வையாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Masterpiece Pavilion அரங்கின் தலைவரும், SLGJA சங்கத்தின் பணிப்பாளருமான ஷசீன் பாரூக் இது தொடர்பில் அவரது உற்சாகமான கருத்தை வெளியிடுகையில், “Sapphire Masterpiece Pavilion ஆனது, இரத்தினக்கல் மற்றம் ஆபரண அனுபவத்தை மாற்றியமைக்க உள்ளது. இலங்கையின் நீல மாணிக்கங்களின் பொக்கிஷத்தை, அவற்றின் மிகவும் அடிப்படையான நிலையிலும், நேர்த்தியான வடிவங்களிலும் உலகிற்கு பெருமையுடன் காண்பிக்கவுள்ளது.” என்றார்.

Sapphire Masterpiece Pavilion ஆனது, வசீகரிக்கும் நீல மாணிக்கங்களை காட்சிப்படுத்தும் என்பதோடு, alexandrite, மரகத பச்சை உள்ளிட்ட பல்வேறு மாணிக்கங்களை அது கொண்டிருக்கும். இலங்கை முழுவதிலும் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட, கரடுமுரடான மற்றும் நேர்த்தியாக வெட்டப்பட்டு மெருகூட்டப்பட்ட ஆகிய இரண்டு வகையான மாணிக்கக்கற்களையும் உள்ளடக்கியதே இந்த அரங்கமாகும். வரலாற்றில் முதன்முறையாக இரத்தினக்கற்கள் மற்றும் ஆபரணக் கண்காட்சியில், இரத்தினக்கற்கள் அவற்றின் அடிப்படையான, வெட்டப்படாத நிலையில் காட்சிப்படுத்தப்படுவதோடு, அதனுடன் இணைந்தவாறு இரத்தினக்கற்களை நுணுக்கமாக அமைத்து, வெட்டி, பட்டைதீட்டிய வடிவங்களுடன் காட்சிப்படுத்துவதும் வரலாற்றில் முதன்முறையாக இந்த அற்புதமான நிகழ்வில் இடம்பெறவுள்ளது.

SLGJA சங்கத்தின் பணிப்பாளர் பிரியந்த சில்வா இது தொடர்பில் குறிப்பிடுகையில், “இந்த அற்புதமான அரங்கை காட்சிப்படுத்துவதன் மூலம், FACETS Sri Lanka 2024 கண்காட்சியானது வரலாற்றில் இடம்பிடிக்கவுள்ளது. இது எமது இரத்தினக்கல் தொழில்துறையின் பிரகாசிப்பையும், அதன் பரந்துபட்ட தன்மைக்கும் ஒரு சான்றாக அமைகிறது. அந்த வகையில் இலங்கையின் நீல மாணிக்கங்களின் தனித்துவமான அழகை, உலகத்திற்கு காண்பிப்பதற்கு நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.” என்றார்.

Masterpiece Pavilion வருபவர்கள் வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் ஒரு அனுபவத்தை பெறுவார்கள். இங்குள்ள குறிப்பிடத்தக்க இரத்தினக்கற்களையும் அவற்றின் இயற்கையான மகிமையுடனும் அவை கொண்டுள்ள அமைப்புடனும், ஒளி வீசும் தன்மையுடனும் பார்க்கும் அனுபவத்தை அவர்கள் பெறுவார்கள். நீல மாணிக்கங்கள் பிரத்தியேகமான வடிவமைப்பில் காட்சிப்படுத்தப்பட்டு, அவற்றின் தோற்றத்திற்கு மேலும் கவர்ச்சியை ஏற்படுத்தும்.

SLGJA சங்கத்தின் பணிப்பாளர் புன்சிறி தென்னகோன் இது தொடர்பான தனது கருத்துகளைப் பகிர்ந்து கொள்கையில், “Sapphire Masterpiece Pavilion ஆனது, இலங்கையின் இரத்தினக்கல் பாரம்பரியத்திற்கு ஒரு சான்றாக அமையும் என்பதோடு, இங்கு கலந்துகொள்ளும் அனைவரையும் இது கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நீல மாணிக்கங்களை அவற்றின் அடிப்படையான மூலத் தோற்றத்திலிருந்து பளபளப்பான பட்டை தீட்டிய தோற்றம் வரை, அவை கொண்டுள்ள முழு நிற வேறுபாடுகளுடன் வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம்.” என்றார்.

FACETS Sri Lanka 2024 இல் உள்ள Sapphire Masterpiece Pavilion ஆனது, அனைத்து இரத்தினக்கல் ஆர்வலர்கள், சேகரிப்பாளர்கள், இரசிகர்களுக்கும் காட்சி மற்றும் கலாசார விருந்தாக அமையும் என்பதை உறுதியளிக்கிறது. Masterpiece Pavilion இல் பார்வையாளர்களுக்கு குறைந்த நேர வாய்ப்பே வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Masterpiece Pavilion இற்கான மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான நுழைவுச்சீட்டுகள், ஜனவரி 05 ஆம் திகதி முதல் FACETS Sri Lanka 2024 கண்காட்சியிலும் சினமன் கிராண்ட் ஏட்ரியம் லொப்பியிலும் கிடைக்கும்.


Share with your friend