இலங்கை முழுவதிலும் உள்ள இளம் விளையாட்டு வீரர்களிடையே காணப்படும் கைப்பந்து விளையாட்டின் மீதான அபாரமான திறமையையும் ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இடம்பெற்ற 22ஆவது DSI சூப்பர்ஸ்போர்ட் பாடசாலை கைப்பந்து சம்பியன்ஷிப் (DSI Supersport Schools Volleyball Championship 2024) தொடர் மாபெரும் வெற்றியை பெற்றுள்ளது. சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் இடம்பெற்ற இந்த போட்டித் தொடரானது, DSI மற்றும் பாடசாலை கைப்பந்து சங்கம், இலங்கை கைப்பந்து சம்மேளனத்தின் கூட்டு முயற்சியாகும்.



மாவட்ட மட்டத்தில் 4,000 இற்கும் மேற்பட்ட அணிகள் பங்குபற்றிய இவ்வருட போட்டித் தொடரானது, கைப்பந்தாட்டம் இலங்கையில் அடைந்து வரும் பிரபலத்தையும் இளம் வீரர்களின் அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டியது.

11 வயதுக்குட்பட்ட மற்றும் 13 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவுகளில் வெற்றிபெற்ற நாத்தாண்டிய, தம்மிஸ்ஸர தேசிய பாடசாலையானது போட்டியின் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது. பெண்கள் பிரிவில் 15 வயதுக்குட்பட்ட ஹங்கம, ஹ/விஜயபால தேசிய பாடசாலை வெற்றிபெற்ற அதே வேளையில், ஆண்கள் பிரிவில் தம்மிஸ்ஸர தேசியப் பாடசாலை பட்டத்தை வென்றது.


17 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில், கிரிஉல்ல, கிரி/விக்ரமஷீல தேசிய பாடசாலை கிண்ணத்தைக் கைப்பற்றியது, தம்மிஸ்ஸர தேசிய பாடசாலை மீண்டும் ஆண்களுக்கான பட்டத்தை வென்றது. 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை ருவன்வெல்ல, கா/தெஹி/ராஜசிங்க மத்திய கல்லூரியும், 19 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஹங்கம ஹ/விஜயபா தேசிய பாடசாலையும் வெற்றி பெற்றன.


சிறந்த வீரராக (ஆண்கள்) கா/தெஹி/ராஜசிங்க மத்திய கல்லூரியின் கே.எஸ்.எம். இதுரங்க மற்றும் சிறந்த வீராங்கனையாக (பெண்கள்) விக்ரமஷீல தேசிய பாடசாலையின் கே.எம். ஹர்ஷனி நிசன்சலா ஆகியோர் தனிப்பட்ட திறமைக்காக கௌரவிக்கப்பட்டனர்.


இலங்கையின் கைப்பந்து துறையில் இப்போட்டித் தொடரின் தாக்கம் தொடர்பில் தனது கருத்தை வெளியிட்ட, D. Samson and Sons (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் துசித ராஜபக்ஷ, “DSI Supersport Schools Volleyball Championship தொடரின் முதன்மையான நோக்கமானது, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலை விளையாட்டு வீரர்களின் திறமைகளை மேம்படுத்தி, அவர்களை தேசிய மட்டத்திற்கு உயர்த்தி, சர்வதேச அரங்கில் இலங்கை பிரதிநிதித்துவத்திற்கு வழி வகுப்பதாகும். இந்த போட்டியானது கைப்பந்தை ஊக்குவிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், பாடசாலை காலணி வர்த்தகநாமங்களில் முன்னணியில் உள்ள எமது நிலையை உறுதிப்படுத்தவும் உதவியது என்பதைக் குறிப்பிடுவதில் நாம் பெருமிதம் கொள்கிறோம்.” என்றார்.


இந்த சம்பியன்ஷிப் தொடரானது இளம் வீரர்களுக்கான ஒரு போட்டித் தளத்தை வழங்கியதோடு மட்டுமல்லாமல், இலங்கையின் தேசிய விளையாட்டை ஊக்குவிப்பதில் DSI நிறுவனத்தின் தற்போதைய அர்ப்பணிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. பல வருடங்களாக, பாடசாலை மட்டத்தில் திறமையாளர்களை வளர்ப்பதில் கொண்டுள்ள முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில், தேசிய அளவிலான பல வீரர்களை உருவாக்குவதில் இந்தப் போட்டித் தொடர் முக்கிய பங்கு வகிக்கின்றது.
இத்தொடரில் பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்கள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள், தன்னார்வத் தொண்டர்களுக்கு துசித ராஜபக்ஷ மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். அவர்களின் முயற்சிகள் இந்த சம்பியன்ஷிப் தொடரை ஒரு அற்புதமான வெற்றியாக மாற்றியதோடு, இலங்கையில் கைப்பந்து விளையாட்டின் வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும் DSI இன் அர்ப்பணிப்பையும் மீள உறுதிப்படுத்த உதவியுள்ளது.