ஹேமாஸ் அதன் 60 ஆவது “பியவர” ஆரம்ப பாடசாலையை தேசிய வலையமைப்பில் இணைத்துள்ளது

Share with your friend

ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன் தனது 60 ஆவது பியவர ஆரம்ப பாடசாலையை அம்பாறை, வடினாகலை  பகுதியில் நிறுவியிருந்தது. இதனூடாக இலங்கையில் ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் விருத்தியை (ECCD) கட்டியெழுப்புவதில் தனது பங்களிப்பை மேலும் உறுதி செய்துள்ளது.

2002 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட பியவர திட்டம், பெண்கள் மற்றும் சிறுவர் விருத்தி, முன்பள்ளிகள் மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் சிறுவர் செயலகத்துடன் இணைந்து நிறுவப்பட்டது. பியவர ஊடாக, ECCD இன் உள்ளம்சங்களுக்கமைய, இலங்கையின் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்படுகின்றது. கடந்த இரு தசாப்த காலப்பகுதியில், இலங்கையின் மிகவும் வெற்றிகரமான தனியார்-அரச பங்காண்மையாக வளர்ச்சியடைவதில் தாக்கத்தை செலுத்தியிருந்ததுடன், நாட்டில் காணப்படும் 60 முன்பள்ளிகளின் 200 க்கும் அதிகமான ஆசிரியர்கள் மற்றும் 4000க்கும் அதிகமான சிறுவர்களின் வாழ்க்கையில் தினசரி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் திட்டம் தொடர்பாக ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி கஸ்தூரி செல்லராஜா வில்சன் கருத்துத் தெரிவிக்கையில், “சிறுவர்களின் ஆரம்பக் கல்வி விருத்தியில் முதலீடுகளை மேற்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை ஹேமாஸ் உணர்ந்துள்ளது. பியவர திட்டத்தினூடாக, சிறுவர்களின் எதிர்காலத்தை வளமாக்கிக் கொள்ள பங்களிப்பு வழங்குவதுடன், குறிப்பாக குறைந்த வசதிகள் படைத்த சமூகங்களைச் சேர்ந்த சிறுவர்களுக்கு இந்த வசதிகளை வழங்குகின்றோம். இருபது வருட காலப்பகுதியில், சிறுவர்கள் செயலகத்துடனான எமது பங்காண்மை உறுதியாக வளர்ச்சியடைந்துள்ளது. அரச-தனியார் இணைந்த செயற்பாட்டுக்கு சிறந்த உதாரணமாக அமைந்திருப்பதுடன், தேசிய பிரச்சனைகளை தீர்ப்பதில் பங்களிப்பு வழங்க முடிந்துள்ளது. உறுதியான மற்றும் சமத்துவமாக சமூகங்களை கட்டியெழுப்பும் நோக்கில் ஏனைய குறைந்த வசதிகள் படைத்த சமூகங்களுக்கும் எமது சேவைகளை சென்றடையச் செய்வதற்கு நாம் எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

ஹேமாஸ் அவுட்ரீச் மையத்தினால் நிலைபேறான வகையில் முன்னெடுக்கப்படும் திட்டமாக பியவர அமைந்துள்ளதுடன், தேசிய பிரச்சனைகளை தீர்த்து, உறுதியான சமூகங்களைக் கட்டியெழுப்பும் வகையில் அரச-தனியார் துறையின் கைகோர்ப்பில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படும் திட்டமாகவும் அமைந்துள்ளது. அம்பாறை, வடினாகலை  பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், குறைந்த வசதிகளுடனான தற்காலிக பகுதியில் தமது ஆரம்பக் கல்வியை தொடர்ந்ததுடன், மழை காலங்களில் இது பெரும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தது. 60 ஆவது பியவர முன்பள்ளியை நிறுவியுள்ளதனூடாக சிறுவர்களுக்கு தமது ஆரம்பக் கல்வியை தொடர்வதற்கு பொருத்தமான சூழலை குழுமம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.

ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன் மற்றும் இலங்கை AYATI நிதியம் ஆகியவற்றின் நிறைவேற்றுப் பணிப்பாளரான ஷிரோமி மசகோரல கருத்துத் தெரிவிக்கையில், “ECCD இல் முதலீடு செய்வது என்பது இலங்கையின் மனித மூலதனத்தை கட்டியெழுப்பும் ஆரோக்கியமான வழிமுறையாக அமைந்துள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த விருத்திக் கட்டத்தில் ஆரம்ப சிறுவர் கல்வி என்பது மிகவும் முக்கியமானதாகும். குழந்தை பிறந்ததன் பின்னர், பெற்றோருக்கு அப்பால் குழந்தையின் வாழ்க்கைக்கு முக்கியமான அடித்தளம் முன்பள்ளியில் ஏற்படுத்தப்படுகின்றது. பியவர ஊடாக 3 – 5 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் மத்தியில் ஆரம்பக் கல்வியை பெற்றுக் கொடுப்பதில் பங்களிப்பு வழங்கப்படுகின்றது. அதனூடாக அவர்களுக்கு வாழ்நாள் முழுவதிலும் உறுதியான பயணத்தை மேற்கொள்வதற்கான சிறந்த பராமரிப்பு சேர்க்கப்படுகின்றது. பியவர முன்பள்ளிகள் பெற்றோரின் எதிர்பார்ப்புகளை விஞ்சும் வகையில் அமைந்திருக்கும் என்பதில் நாம் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், அவர்களின் பிள்ளைகளுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான உள்ளக மற்றும் வெளியக பயிலல் சூழலை வழங்குவதில் கவனம் செலுத்துகின்றோம்.” என்றார். 

கூட்டாண்மை சமூகப் பொறுப்புணர்வுச் செயற்பாடுகளினூடாக ஆரோக்கியமான வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதை ஊக்குவிக்கும் வகையில் ஹேமாஸ் குழுமத்தின் முன்னணி திட்டமாக ஹேமாஸ் அவுட்ரீச் பவுன்டேஷன் அமைந்துள்ளது. இந்த அமைப்பினூடாக, ஆரம்ப சிறுவர் பராமரிப்பு மற்றும் விருத்தி (ECCD) மூலம் இலங்கையின் குறைந்த வசதிகள் படைத்த சிறுவர்களின் வாழ்க்கைக்கு வளமூட்டுவது எதிர்பார்க்கப்படுகின்றது. நம்பிக்கை நிதியமாக இந்த அமைப்பு இயங்குவதுடன், இதனை புகழ்பெற்ற காப்பாளர்கள் நிர்வகிக்கின்றனர்.


Share with your friend