இலங்கையின் மிகப் பெரிய பிளாஸ்டிக் மறுசுழற்சி நிறுவனமான Eco Spindles (Private) Limited, 8வது முறையாக கதிர்காமம் கழிவு நிர்வகிப்பு திட்டத்தை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. கதிர்காமம் புனிதத் தலங்கள், ருஹுணு கதிர்காமம் கோயில், செல்ல கதிர்காமம், மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீசப்படும் 43,590 PET (polyethylene terepthalate) பிளாஸ்டிக் போத்தல்களை இத்திட்டத்தின் மூலம் சேகரிக்க முடிந்துள்ளது.
கதிர்காமம் என்பது மானிக்க கங்கை, யால தேசிய பூங்கா மற்றும் லுனுகம்வெஹெர தேசிய பூங்கா போன்ற நாட்டின் சுற்றுச்சூழல் ரீதியாக மிகவும் முக்கியமான சுற்றுச்சூழல் அமைப்புகளைக் கொண்ட ஒரு பகுதியாகும். அத்துடன் இலங்கை மற்றும் இந்திய யாத்ரீகர்கள் பார்வையிடும் புனிதமான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. பண்டிகைக் காலங்களில் கதிர்காமத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வருகை தருவதுடன், இக்காலப்பகுதியில் அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் சுற்றுச்சூழலில் சேர்வது மிகவும் துர்ப்பாக்கிய நிலையாகும். இந்த பிளாஸ்டிக்குகளை முறையாக அகற்றாததால், நீர்நிலைகளில் குப்பைகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டு, விலங்குகள் வசிக்கும் இடங்கள் பாதிக்கப்படும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த கழிவு நிர்வகிப்புத் திட்டம் ஜூலை 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு ஆகஸ்ட் 12ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவடைந்தது. அந்த பிரதேசத்திலுள்ள இளைஞர் சங்கமான சோபா சுற்றுச்சூழல் நட்பு சங்கத்தின் 60 தன்னார்வலர்கள், 20 Eco Spindles தன்னார்வலர்கள் மற்றும் அதன் திட்ட பங்காளிகள் குழு இதில் கலந்துகொண்டனர்.
2014ஆம் ஆண்டு கதிர்காமம் கழிவு நிர்வகிப்புத் திட்டத்தை ஆரம்பித்தது முதல், Eco Spindles, 555,990 PET பிளாஸ்டிக் போத்தல்களை சேகரித்துள்ளது, அதாவது 18,533 கிலோ ஆகும். திருவிழாவின் போது கதிர்காமத்திற்கு வருகை தரும் பக்தர்கள் உட்பட இலங்கையர்களுக்கு பொறுப்பான மறுசுழற்சி பற்றிய விழிப்புணர்வூட்டுவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். Eco Spindles கதிர்காமம் பகுதியில் சேகரிப்பாளர்களின் வலுவான வலையமைப்பையும் செயற்படுத்தி வருகின்றது. கழிவாக வீசப்படும் பிளாஸ்டிக்கை சேகரிப்பதில் அவர்கள் முக்கியப் பங்காற்றுகிறார்கள், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி, பிளாஸ்டிக்கைச் சேகரிப்பதன் மூலம் தங்கள் வாழ்வாதாரமாக இருக்கும் இந்தத் தொழில்முனைவோருக்கு நிறுவனம் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது.
“நாட்டில் தொற்றுநோய் மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகள் எதிர்கொள்ளும் சவால்கள் இருந்தபோதிலும், கதிர்காமம் கழிவு நிர்வகிப்புத் திட்டம் போன்ற திட்டங்களை நாம் மறக்க முடியாது, ஏனெனில் அது நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நாளொன்றுக்கு 360,000 பிளாஸ்டிக் போத்தல்களை மறுசுழற்சி செய்யும் நிறுவனம் என்ற வகையில், பசுமையான இலங்கைக்கு பங்களிப்பதில் பெருமை கொள்கிறோம். முறைசாரா மற்றும் பொறுப்பற்ற முறையில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறோம். அந்த பிளாஸ்டிக் கழிவுகளை பொலியஸ்டர் நூல் மற்றும் மோனோஃபிலமென்ட் போன்ற மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களாக மாற்ற நாங்கள் பணியாற்றி வருகிறோம்.” என BPPL ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான கலாநிதி அனுஷ் அமரசிங்க தெரிவித்தார்.