CDB தனது நிலைபேறாண்மை செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுக்கும் வகையில் கண்டல் தாவர பாதுகாப்பு பணிகளில் கைகோர்த்துள்ளது

Share with your friend

கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பணிகளை முன்னெடுக்கும் வகையில் இரு முக்கிய பங்காண்மைகளை சிட்டிசன்ஸ் டிவலப்மன்ட் பிஸ்னஸ் ஃபினான்ஸ் பிஎல்சி (CDB) ஏற்படுத்தியுள்ளது. தனது கூட்டாண்மை நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலுச் சேர்க்கும் வகையில் இந்த பங்காண்மைகளை ஏற்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நிலைபேறாண்மை நிலையம் மற்றும் இலங்கை உயிரியல் பரம்பல் நிலையம் ஆகியவற்றுடன் இந்த இரு உடன்படிக்கைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. CDB இன் வியாபார தந்திரோபாயம் என்பது “நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரல்” மற்றும் “தொழில்நுட்ப புரட்சி” எனும் இரு பிரதான அங்கங்களில் தங்கியுள்ளது. இவற்றில், நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரலுக்கு மேலும் வலிமை சேர்க்கும் வகையில், உயிரியல் பரம்பலில் அதிகளவு கவனம் செலுத்தி, கண்டல் தாவர பாதுகாப்புக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

CDB இன் நிலைபேறாண்மை நிகழ்ச்சி நிரல் என்பது ஐக்கிய நாடுகளின் நிலைபேறாண்மை அபிவிருத்தி இலக்குகள் 17 இல் 7 உடன் பொருந்தும் வகையில் அமைந்துள்ளது. தனது நிலைபேறாண்மை அர்ப்பணிப்புகள் பாதுகாத்தல் மற்றும் உயிரியல் பரம்பல் ஆகியன முக்கியத்துவம் வாய்ந்த அங்கங்களாக நிறுவனம் கருதுகின்றது. இதில் கண்டல் தாவர பாதுகாப்பு என்பது தொடர்பில் அதிகளவு முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என்பதை இனங்கண்டு, தம்மை அர்ப்பணித்துள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வனாந்தர மற்றும் சூழல் விஞ்ஞானப் பிரிவின் நிலைபேறாண்மை நிலையத்துடன் CDB கைகோர்த்து, களுத்துறை, இத்தபன பகுதியில் “கண்டல் வள நிலையம்” ஒன்றை நிறுவ முன்வந்திருந்தது. இத்தபன-ஹொரவல தொட்டுபொல கண்டல் காடு தொகுதி என்பது நாட்டில் அதிகளவு ஆபத்தை எதிர்கொண்டுள்ள கண்டல் பகுதியாக அமைந்திருப்பதுடன், இதனைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. வெள்ள ஆபத்தை கட்டுப்படுத்துவது மற்றும் நிலக்கீழ் நீரை மீள நிரப்புவது, மீன்கள் பெரும் பகுதியாக அமைந்திருப்பது, உயிரியல் பரம்பலுக்கான நீரேந்து பகுதி, காபன் சமநிலைப்படுத்தல் மற்றும் பல அம்சங்களின் இருப்பிடமாக இந்தப் பகுதி அமைந்துள்ளது. தொடர்ச்சியான உயிர்த் தன்மையை பேணுவதனூடாக பொருளாதார அனுகூலத்தை உறுதி செய்ய முடியும் என்பதுடன், இத்தபன மற்றும் ஹொரவல ஆகிய பிரதேசங்களின் கிராமிய சனத் தொகையின் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பு வழங்கி, அதனூடாக நாட்டின் பொருளாதாரத்துக்கும் பங்களிப்பு வழங்கும்.

இலங்கையின் ஆறு ரம்சார் ஈரநிலப் பகுதிகளில் ஒன்றாக ஆனவிழுந்தாவ காப்பகப் பகுதி அமைந்துள்ளது. 1,397 ஹெக்டெயர் பரப்பில் பரந்து காணப்படுவதுடன், கண்டல்காடுகள், கரையோர உப்புநீர் சூழல்கட்டமைப்புகள் மற்றும் தூயநீர் வாவிகள் போன்ற வனாந்தர ஈரநிலங்களைக் கொண்டுள்ளதுடன், ஆபத்தை எதிர்கொண்டிருக்கும் பல இன மீன்கள், ஈரூடக உயிரினங்கள், பாலூட்டிகள், ஊர்வன மற்றும் பறவைகளின் இருப்பிடமாகவும் உள்ளது. 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 8 ஆம் திகதி “Life to our Mangroves” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கை உயிரியல் பரம்பல் அமைப்புடன் CDB கைகோர்த்து இந்த கண்டல் காட்டு சூழல் கட்டமைப்பை பேணும் வகையில் இந்தத் திட்டம் அமைந்துள்ளதுடன், மொத்தப் பகுதியில் 1 ஹெக்டெயர் பகுதியை பேணி, சூழவுள்ள சமூகங்களின் சமூக-பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்பு வழங்குவதாக அமைந்துள்ளது.

இத்தபன பகுதியில் கண்டல் தாவர வள நிலையமொன்றை நிறுவுவதற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின், நிலைபேறாண்மை நிலையத்துடன் CDB கைகோர்ப்பு

களுத்துறை, இத்தபன பகுதியில் கண்டல் தாவர வள நிலையமொன்றை நிறுவுவதற்கு ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சூழல் விஞ்ஞான பிரிவு மற்றும் வனாந்தர திணைக்களத்தின் நிலைபேறாண்மை நிலையம் ஆகியவற்றுடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் CDB கைச்சாத்திட்டிருந்தது.

இடமிருந்து – MD/CEO of CDB இன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நானயக்கார, நிறைவேற்று பணிப்பாளர்/பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி/பிரதம நிதி அதிகாரி தமித் தென்னகோ், நிலைபேறாண்மை நிலையத்தின் பணிப்பாளர் உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் சுதந்த லியனகே, பேராசிரியர் பிரியான் பெரேரா ஆகியோர் காணப்படுகின்றனர். 

BSL உடன் இணைந்து ஆனவிழுந்தாவ காப்பகத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் பணிகளுக்கு CDB தன்னை அர்ப்பணித்துள்ளது

ஆனவிழுந்தாவ காப்பகத்தில் கண்டல் தாவரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான உடன்படிக்கையில் இலங்கை உயிரியல் பரம்பல் (BSL) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை CDB ஏற்படுத்தியிருந்தது. இந்தத் திட்டம் 2022 பெப்ரவரி 8 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இடமிருந்து – CDB பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி/ பிரதம நிதி அதிகாரி, தமித் தென்னகோன், இலங்கை உயிரியல் பரம்பல் அமைப்பின் பணிப்பாளர் சபை அங்கத்தவர் தில்ஹான் சி. பெர்னான்டோவுடன் உடன்படிக்கையைக் கொண்டுள்ளார்.


Share with your friend