DFCC வங்கி இலங்கையின் ஏற்றுமதித் தொழிற்துறையின் வளர்ச்சியை முன்னெடுப்பதற்காக தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது

Share with your friend

இலங்கையில் முதன்மையான வணிக வங்கியான DFCC வங்கி, தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்துடன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலமாக இப்போது சம்மேளனத்தின் முக்கிய மூலோபாய கூட்டாளர்களுள் ஒருவராக வங்கி செயல்படும். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் மூலம், DFCC வங்கியானது, தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவான நிதியியல் தீர்வுகளை நீட்டித்துள்ளதுடன், வணிகத்தை பெரிதாகவும், சிறப்பாகவும் முன்னெடுக்க அவர்களுக்கு இடமளிக்கும் வகையில், பிரத்தியேகமயமான ஏற்றுமதிக் கடன் தீர்வுகளை வழங்குகின்றது.

இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம், பரந்தளவிலான சேவைகளுடன் ஏற்றுமதித் தொழில் துறைக்கு சேவை செய்வதற்கு பிரத்தியேகமாகப் பொறுப்பேற்றுள்ள முன்னணி சம்மேளனமாகும். பெரியது முதல் சிறிய ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் வரை இலங்கையில் உள்ள அனைத்து தயாரிப்பு மற்றும் சேவைத் துறைகளிலும் உள்ள முன்னணி ஏற்றுமதியாளர்களை சம்மேளனத்தின் அங்கத்துவம் பிரதிநிதித்துவப்படுத்துகிறது.

இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை ஒரு வருட காலத்திற்கு செல்லுபடியாகும் என்பதுடன் மற்றும் DFCC வங்கி வழங்கும் பல நன்மைகளைப் பெறுவதற்கு ஏற்றுமதி தொடர்பான அனைத்து வணிகங்களுக்கும் உதவுகிறது. எனவே, தனியார் மற்றும் பொது வகையில் ஏற்றுமதி செய்யக்கூடிய பொருட்கள் மற்றும் சேவைகளின் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள அனைத்து தனிநபர்கள் மற்றும் வணிகங்களுக்கு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்தது. ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் அந்நியச் செலாவணி வருமானம் தற்போது நாடு நிதியியல் ஸ்திரத்தன்மையைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு முக்கியமான தேவையாக உள்ளது. அந்த வகையில், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் மீண்டு எழும் திறன் ஆகியவற்றைப் பாதுகாக்கும் அதே வேளையில், ஒட்டுமொத்தமாக வளர்ந்து வரும் ஏற்றுமதியில் குறிப்பிடத்தக்க மதிப்பை இக்கூட்டாண்மை சேர்க்க வல்லது.

தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்துடனான புதிய கூட்டாண்மையின் முக்கியத்துவம் குறித்து DFCC வங்கியின் பிரதி தலைமை நிர்வாக அதிகாரியான திரு. திமல் பெரேரா கருத்துத் தெரிவிக்கையில், “DFCC வங்கியானது தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அதன் விரிவான ஏற்றுமதி நிதி தீர்வுகளை தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்துடன் இணைந்து வழங்குவதில் பெருமிதம் கொள்கிறது. இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு ஆதரவளிப்பதற்கும், இக்கூட்டாண்மையின் மூலம் ஏற்றுமதிச் சந்தையை அதிக உயரத்திற்கு கொண்டு செல்வதற்கும், அதன் மூலம் தேசத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார மதிப்பை உருவாக்குவதற்கும் நாங்கள் ஆவலாக உள்ளோம். இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது எம்முடன் தொடர்புபட்ட தரப்பினர், குறிப்பாக எமது வாடிக்கையாளர்களின் வளர்ச்சி மற்றும் சுபீட்சத்தில் கைகோர்ப்பதில் DFCC வங்கியின் நீண்ட கால பயணத்தின் மற்றுமொரு படியாகும்,” என்று குறிப்பிட்டார்.  

“இந்த மூலோபாய கூட்டாண்மை மூலம், ஏற்றுமதியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரத்தியேக சம்மேளனம் என்ற வகையில் தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் தனது உறுப்பினர்கள் வங்கியுடன் தொடர்புகொள்வதற்கான ஒரு தளத்தை உருவாக்குவதன் மூலம் எப்போதும் போல் தனது உறுப்பினர்களுக்கு ஆதரவளிக்க முடியும். இலங்கையின் ஏற்றுமதியை அபிவிருத்தி செய்து பேணுவதன் மூலம் இந்நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு பெறுமதி சேர்ப்பதே எமது நோக்கமாகும். எங்களால் நடத்தப்படும் பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் மூலம் DFCC வங்கி மற்றும் சம்மேளனத்தின் உறுப்பினர்களாக உள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வசதிகளை வழங்குவதை சம்மேளனம் தனது நோக்கமாகக் கொண்டுள்ளது,” என்று தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனத்தின் செயலாளர் நாயகமும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு. ஷிஹாம் மரிக்கார் கருத்து தெரிவித்தார்.

ஆறு தசாப்தங்கள் நீண்ட அதன் வளமான வரலாறு முழுவதும், DFCC வங்கியானது இலங்கையின் புகழ்பெற்ற தொழில்முனைவோர் மற்றும் நிறுவனங்களுக்கு நிதிச் சேவைகளை வழங்கியுள்ளதுடன், அவர்களில் பெரும்பாலானவர்கள் சர்வதேச சந்தைக்கு முன்னணி ஏற்றுமதியாளர்களாகவும் சேவைகளை வழங்குபவர்களாகவும் மாறியுள்ளனர்.

DFCC வங்கி தொடர்பான விபரங்கள்  

           

DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.   

NCE

இலங்கையில் ஏற்றுமதி தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்வதற்காக கைகோர்த்தல்  

(இடமிருந்து வலமாக திருமதி நில்மினி குணரத்ன – துணைத் தலைமை அதிகாரி, சந்தைப்படுத்தல் மற்றும் நிலைபேண்தகைமை DFCC வங்கி, திரு. அன்டன் ஆறுமுகம் – துணைத் தலைமை அதிகாரி, வெளிநாட்டு வங்கிச்சேவை, வர்த்தகம் மற்றும் நிறுவன வர்த்தக அபிவிருத்தி, DFCC வங்கி, திரு. திமல் பெரேரா, பிரதி தலைமை நிர்வாக அதிகாரி, DFCC வங்கி, திரு. ஷிஹான் மரிக்கார் செயலாளர் நாயகம்/தலைமை நிர்வாக அதிகாரி, தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம் மற்றும் திருமதி மேனகா வன்னியாராச்சி – செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் – தேசிய ஏற்றுமதியாளர்கள் சம்மேளனம்)


Share with your friend