Earthfoam நிறுவனம் புதிய இறப்பர் பால் சேகரிப்பு நிலையத்தை திறந்து வைத்து 1,700 இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு காப்புறுதி திட்டத்தை வழங்குகிறது

Share with your friend

இயற்கை இறப்பரில் மெத்தைகள், உறைகள் மற்றும் தலையணைகளை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்து வரும் Earthfoam தனியார் நிறுவனத்தின் புதிய இறப்பர் பால் சேகரிப்பு நிலையம் மொனராகலயில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இறப்பர் பால் சேகரிக்கும் நடவடிக்கையை மேலும் இலகுவாக்குவதையும் வினைத்திறன்மிக்கதாக்குவதையும் நோக்கமாக கொண்டு நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த நிலையம் அதி நவீன வசதிகளை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. அநேகமான இறப்பர் உற்பத்தியாளர்களுக்கு இறப்பர் பாலின் சரியான சந்தை விலையை அறிந்துகொள்வதற்கு வாய்ப்பில்லாத காரணத்தினால், குறைந்த விலைக்கு இறப்பர் பாலை விற்க வேண்டியுள்ளது. இறப்பர் பால் கொள்வனவு செய்யும் சில நிறுவனங்களும் உரிய விலையை வழங்குவதில்லை. இறப்பர் செய்கை பிரபல்யமடைந்து வரும் வறண்ட வலயத்தில் இப் பிரச்சனை அதிகமாக காணப்படுகின்றது. மொனராகல மாவட்டத்தில் இயற்கை இறப்பர் செய்கையை விரிவுபடுத்துவதற்கு Earthfoam பெருமளவில் பங்களிப்பு செய்துள்ளது. மேற்படி இறப்பர் பால் சேகரிப்பு நிலையம் நிறுவப்பட்டதன் மூலம் இறப்பர் உற்பத்தியாளர்களின் உழைப்புக்கு நியாயமான விலை கிடைக்கின்றது.

Earthfoam நிறுவனம் Ceylinco Life Insurance நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தியுள்ள காப்புறுதித் திட்டத்தின் மூலம் சுமார் 1700 இறப்பர் உற்பத்தியாளர்களுக்கும் மேற்படி இறப்பர் தோட்டங்களில் தொழில் புரிகின்றவர்களுக்கும் அனுகூலங்கள் கிடைக்கின்றன.  ‘Fair Trade’ எண்ணக்கருவின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மேற்படி திட்டத்தில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறல், கடுமையான நோய்கள், இயற்கை மற்றும் திடீர் மரணங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. 800 பேருக்கு காப்புறுதி அளித்ததன் மூலம் தொடங்கப்பட்ட மேற்படி திட்டத்தின் மூலம் பயனடைவோரின் எண்ணிக்கையை 2025 ஆம் ஆண்டளவில் 3000 வரை உயர்த்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இறப்பர் பால் சேகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கருத்து தெரிவித்த Earthfoam தலைமை நிறைவேற்று அதிகாரி ஜானுக்க கருணாசேன தமது நிறுவனம் எப்பொழுதும் இறப்பர் பால் உற்பத்தியாளர்களினதும் தொழிலாளர்களினதும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்குமென குறிப்பிட்டார். இறப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு காலணிகள், மழைக் கவசங்கள் மற்றும் மின்சார கைப்பந்தங்களை உள்ளடக்கிய உபகரணத் தொகுதியொன்றை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இறப்பர் பால் உற்பத்தியாளர்களினதும் தொழிலாளர்களினதும் குழந்தைகளுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு, சுகாதாரம், காப்புறுதி, மருத்துவக் கிளினிக்குகளை நடாத்துதல், பாதுகாப்பு கருவிகளை வழங்குதல் Earthfoam நிறுவனம் ஏற்பாடு செய்து வரும் நலன்புரி திட்டங்களில் முக்கியமானவை ஆகும். Earthfoam நிறுவனம் உயர் தரத்திலான 100% இயற்கை இறப்பரிலான ஏராளமான உற்பத்திகளை ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. நீண்ட கால உழைப்பு, சௌகரியம் மற்றும் பாதுகாப்பை அடிப்படையாக கொண்ட மேற்படி உற்பத்திகளுக்கு தேவையான இறப்பர் 1,700 இற்கும் அதிகமான உள்நாட்டு இறப்பர் உற்பத்தியாளர்களிடமிருந்தே பெறப்படுகின்றது. ‘Fair for Life’ சான்றிதழை பெற்ற முதலாவது மெத்தை உற்பத்தி நிறுவனமான Earthfoam நிறுவனம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விருதுகள் மற்றும் தரச் சான்றிதழ்கள் பலவற்றை வென்றுள்ளது. மேற்படி உற்பத்திகள் செயற்கை அல்லது கலப்பு இறப்பர் அல்லாத 100% இயற்கை இறப்பரை கொண்டு உற்பத்தி செய்யப்படுகின்றன.


Share with your friend