Ex-Pack முதலீட்டாளர் அமர்வு பாரிய வெற்றியுடன் நிறைவுற்றுள்ளது

Share with your friend

இலங்கையில் பொதி செய்வதற்கான அட்டைப் பெட்டிகளின் உற்பத்தியில் சந்தையில் முன்னிலை வகித்து வருகின்ற Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம், பொது பங்கு வழங்கல் நடவடிக்கைக்கு தயாராகி வருகின்ற சமயத்தில் தனது மெய்நிகர் முதலீட்டாளர் அமர்வு மற்றும் ஆய்வாளர்களுக்கான நிகழ்வை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.  Ex-Pack நிறுவனம் தனது பங்குகளின் ஆரம்ப பொது வழங்கல் நடவடிக்கையை மேற்கொள்ளவுள்ளதுடன், இது 2021 ஒக்டோபர் 22 ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்நிறுவனம் கொழும்பு பங்குச்சந்தையில் நிரற்படுத்தப்படும். இலங்கையில் உள்ள முதலீட்டாளர்கள் சமூகம், நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் சந்தை ஆய்வாளர்கள் உட்பட பல வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து Ex-Pack நிறுவனத்தில் முக்கிய தீர்மானம் வகுப்பவர்கள் மற்றும் தொடர்புபட்ட தரப்பினருடன் ஆழமான விடயங்கள் தொடர்புபட்ட உரையாடல்களை மேற்கொண்டதுடன், தமது சந்தேகங்களையும் கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ள முடிந்துள்ளது. Ex-Pack நிறுவனமானது முற்றுமுழுதாக Aberdeen Holdings நிறுவனத்தின் உரிமையாண்மையின் கீழானது. முன்னர் Expolanka Investments (Private) Limited என்ற பெயரில் அறியப்பட்ட Aberdeen Holdings நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளதுடன், இலங்கையில் மிகவும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள, பன்முகப்படுத்தப்பட்ட, குடும்ப கூட்டு வணிகங்களின் பெரு நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது.

முதலீட்டு வங்கியாளர்களான Capital Alliance Partners Limited மற்றும் Asia Securities Advisors Pvt Ltd ஆகிவற்றால் நிர்வகிக்கப்படுவதுடன், Ex-Pack Corrugated Cartons Limited ஆனது இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கை மூலமாக பங்கொன்று ரூபா 8.40 விலையில் 83,333,333 சாதாரண வாக்குரிமைப் பங்குகளை (25% பங்குகள்) விற்பனை செய்வதன் மூலமாக சந்தை மூலதன மதிப்பு ரூபா 2.8 பில்லியனை ஈட்ட முடியும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது. இது 2022 நிதியாண்டில் 7.7 மடங்கு விலை ஆதாய விகிதத்தைக் கொண்டிருக்கும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதுடன், 8.9 மடங்கு (2021 ஆகஸ்டில் உள்ளவாறு) பன்னிரண்டு மாதங்கள் பின்தங்கிய விலை ஆதாய விகிதமானது என உட்கிடையாக புலப்படுகின்றது.

Ex-Pack நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான ஸ{ல்ஃபிகர் கௌஸ் அவர்கள் இந்நிகழ்வு தொடர்பில் கருத்து வெளியிடுகையில், “எமது முதலீட்டாளர்கள் அமர்வு மிகவும் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் குறிப்பிட விரும்புகின்றோம். எமது நிலைப்பாட்டை முதலீட்டாளர்கள் மத்தியில் முன்வைத்து, எமது பெறுமான முன்மொழிவு தொடர்பில் அவர்களுடன் ஆழமாக கலந்தாலோசிக்க முடிந்துள்ளது. மிகவும் ஆர்வமான பல வினாக்கள் முன்வைக்கப்பட்டதுடன், அவற்றுக்கு நாம் எமது பதில்களையும் நிறைவாக வழங்கியுள்ளோம். ஒட்டுமொத்தமாக எமது ஆரம்ப பொது பங்கு வழங்கல் நடவடிக்கையானது உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் பரந்த ஆர்வத்தை ஈட்டும் என நாம் திடமாக நம்புகின்றோம். இது தொடர்பான முடிவுத் திகதியை நாம் நெருங்குகின்ற இத்தருணத்தில், Ex-Pack நிறுவனத்தின் ஒட்டுமொத்த முகாமைத்துவ அணியின் சார்பில் எதிர்கால முதலீட்டாளர்கள், வாடிக்கையாளர்கள், பணியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் அனைவருக்கும் எமது அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டினை மீளவும் வலியுறுத்த விரும்புகின்றேன். இலங்கையில் அபிமானம் பெற்ற பொதியிடல் தீர்வுகள் வழங்குனராக நாம் வளர்ச்சி கண்டு, எமது எதிர்காலம் தளைத்தோங்கி, எம்முடன் தொடர்புபட்ட அனைத்து தரப்பினருக்கும் பெறுமதியை சேர்ப்பிப்பதற்கு நாம் ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.    

இரு தசாப்தங்களுக்கும் மேலாக தொழிற்துறைகளுக்கு சேவைகளை வழங்கும் வணிகச் செயற்பாடுகளில் அசைக்கமுடியாத நன்மதிப்பினைக் கட்டியெழுப்பியுள்ள Ex-Pack Corrugated Cartons Limited நிறுவனம், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் பொதி செய்யும் அட்டைப் பெட்டிகளைப் பொறுத்த வரையில் சந்தையில் நன்கு அறியப்படும் பெயராகவும், அங்கீகாரத்தைச் சம்பாதித்துள்ள ஒரு நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்றது. 8 இற்கும் மேற்பட்ட நாடுகளில் பாரிய வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்களை உள்ளடக்கிய விசாலமான வாடிக்கையாளர் தளத்தை அது கட்டியெழுப்பியுள்ளது. இலங்கையில் Ex-Pack நிறுவனம் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி ஆகிய இரண்டிலும் முன்னிலை வகித்து வருவதுடன், அதன் வருவாயில் 52% டொலர் வடிவில் அந்நிய செலாவணி வருமானமாக ஈட்டப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. வலுவான, பன்முக ஆற்றல் கொண்ட தலைமைத்துவ அணியின் வழிகாட்டலுடனும், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் திருப்தி மீதான அர்ப்பணிப்பினாலும் முன்னெடுத்துச் செல்லப்படுகின்ற இந்நிறுவனம் தேசத்தின் முன்னணி முழுமையான சேவைகள் கொண்ட பொதி செய்யும் அட்டைப் பெட்டிகளுக்கான தீர்வு வழங்குனராக வளர்ச்சி கண்டுள்ளதுடன், இலங்கையில் தற்போது 5 க்கு 1 என்ற அடிப்படையில் அதன் உற்பத்தி ஆற்றல் காணப்படுகின்றது.  Ex-Pack நிறுவனத்தின் தயாரிப்பு வரிசையில் வழக்கமான துளையிடப்பட்ட அட்டைப்பெட்டிகள் (Regular slotted cartons), டை-கட் அட்டைப்பெட்டிகள் (die-cut cartons), லெமினேட் செய்யப்பட்ட அட்டைப்பெட்டிகள் (laminated cartons) மற்றும் மீள்சுழற்சி செய்யப்பட்ட மூலப்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய விசேடமாக வடிவமைக்கப்பட்ட விசேட தயாரிப்புக்கள் அடங்கியுள்ளன. இந்த விசேட தயாரிப்புகளில் ஆடையணிகள் மற்றும் இலகுரக மீன் கொள்கலன்களின் சேமிப்பு மற்றும் போக்குவரத்துக்காக தயாரிக்கப்படும் அலுமாரி வடிவ அட்டைப்பெட்டிகள் (ஆடை தொங்கிகளுடன்) போன்ற தனித்துவமான மற்றும் புத்தாக்கமான தீர்வுகள் அடங்கியுள்ளன. 2020 பொதுத் தேர்தலுக்காக இலங்கையின் தேர்தல் ஆணையத்திற்கு முதன்முறையாக மேம்பட்டு பாதுகாப்புடனான, இலகுவில் எடுத்துச் செல்லக்கூடிய தொழில்நுட்ப அம்சம் நிரம்பிய வாக்குப்பெட்டிகளை Ex-Pack பெருமையுடன் வடிவமைத்து, தயாரித்து வழங்கியிருந்தது. விரைவாக விற்றுத்தீரும் நுகர்வு உற்பத்திகள், நீடித்து உழைக்கும் நுகர்வு சாதனங்கள், ஆடையணி, தேயிலை மற்றும் மீன்பிடி அடங்கலாக பல்வேறுபட்ட தொழில் துறைகள் மத்தியில் உலகளாவில் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வர்த்தகநாமங்களுக்கு இந்நிறுவனம் தனது சேவைகளை வழங்கி வருகின்றது.


Share with your friend