IASL மற்றும் IRCSL இணைந்து மாத்தறையில் நடத்திய பொதுமக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சி

Share with your friend

இலங்கையின் காப்புறுதித் துறையில் முதன்முறையாக, இலங்கை காப்புறுதி ஒழுங்குமுறை ஆணையமும் (IRCSL) இலங்கை காப்புறுதி சங்கமும் (IASL) இணைந்து அனைத்து காப்புறுதி நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரு முழு நாள் பொதுமக்கள் ஈடுபாட்டு நிகழ்ச்சியை நடத்தின. காப்புறுதி அன்றாட வாழ்வில் எவ்வாறு உதவுகிறது என்பதை மக்கள் புரிந்துகொள்ளவும், பல்வேறு சமூகங்களில் நிதி கல்வியறிவை மேம்படுத்தவும் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிகழ்ச்சி IRCSL நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அஜித் ரவீந்திர டி மெல் அவர்களின் தொலைநோக்குத் திறனால் முன்னெடுக்கப்பட்டது. இலங்கையில் காப்புறுதிப் பாதுகாப்பு இடைவெளியை நிரப்பும் நோக்கில், காப்புறுதித் துறையை ஒன்றிணைத்த இந்த நிகழ்ச்சி மாத்தறை நகரில் ஆரம்பிக்கப்பட்டு, அக்குரஸ்ஸ, தெனியாய, பெலியத்த, கம்புருப்பிட்டிய, வெலிகம, திக்வெல்ல மற்றும் ஹக்மன ஆகிய பகுதிகளில் ஒருங்கிணைக்கப்பட்ட செயல்பாடுகள் மூலம் மாவட்டம் முழுவதும் ஒரே நேரத்தில் விரிவுபடுத்தப்பட்டது.

ஒவ்வொரு பிராந்திய செயல்பாடும் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனங்களால் வழிநடத்தப்பட்டது. இவர்கள் விழிப்புணர்வு நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதிலும், உள்ளூர் சமூகங்களுடன் நேரடியாக தொடர்புகொள்வதிலும் முக்கிய பங்காற்றினர். இந்த நிகழ்ச்சியில் உரையாடல் அமர்வுகள், கல்வி சார்ந்த ஈடுபாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் தனிப்பட்ட உரையாடல்கள் இடம்பெற்றன. இதன்மூலம் சமூகத்தின் அனைத்து பிரிவினரும் காப்புறுதி எவ்வாறு நிதி நெகிழ்திறனை மேம்படுத்துகிறது என்பதை தெளிவாக புரிந்துகொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டது.

நகர்ப்புற மையத்திற்கு அப்பால் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தியதன் மூலம், இந்த நிகழ்ச்சி மாத்தறை மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு மற்றும் அதிகாரமளித்தலின் தாக்கத்தை ஏற்படுத்தியது. இது இலங்கையில் தொழில்துறை-ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒத்துழைப்புக்கு ஒரு புதிய தரநிலையை அமைத்து, அடிமட்ட அளவில் நிதிக் கல்வி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையை முன்னெடுப்பதில் ஒருங்கிணைந்த செயலின் வலிமையை வெளிப்படுத்தியது.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாத்தறையில் உள்ள ருஹுன பல்கலைக்கழகத்தின் ரவீந்திரநாத் தாகூர் ஞாபகார்த்த மண்டபத்தில் ஜூன் 26 ஆம் திகதி “காப்புறுதியின் நடைமுறை அம்சங்களும் அதன் முக்கியத்துவமும்” என்ற தலைப்பில் ஒரு பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. இந்த அமர்வில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட 1,500க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சிக்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில், இலங்கை பொலிஸ், Clean Sri Lanka திட்டம் மற்றும் Fairfirst காப்புறுதி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து வீதிப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றும் முன்னெடுக்கப்பட்டது. இது சமூக நலன் மற்றும் பொதுப் பாதுகாப்பை மேம்படுத்துவதில் காப்புறுதியின் பரந்த பங்கை வலுப்படுத்தியது.

‘இந்த நிகழ்ச்சி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட IRCSL நிறுவனத்தின் தலைவர் டாக்டர் அஜித் ரவீந்திர டி மெல், “இந்த முயற்சி பொது மற்றும் ஆயுள் காப்புறுதித் துறைகள் இரண்டிலும் நிதி ரீதியாக பாதுகாப்பான மற்றும் நன்கு பாதுகாக்கப்பட்ட நாட்டை உருவாக்குவதற்கான எமது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. தொழில்துறையை ஒன்றிணைத்து பொதுமக்களுடன் நேரடியாக ஈடுபடுவதற்கான முயற்சிகளை முன்னெடுப்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். இது காப்புறுதியை அன்றாட வாழ்க்கைக்கு மேலும் அணுகக்கூடியதாகவும், புரிந்துகொள்ளக்கூடியதாகவும், தொடர்புடையதாகவும் மாற்றுகிறது” என்று தெரிவித்தார்.

இது தொடர்பில் IASL நிறுவனத்தின் தலைவர் லசித விமலரத்ன கருத்து தெரிவிக்கையில், “காப்புறுதி எவ்வாறு வாழ்க்கையை மாற்றக்கூடும் என்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது, மேலும் நெகிழ்திறன் மற்றும் நிதி ரீதியாக பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான முதல் படியாகும். இத்தகைய விழிப்புணர்வு இன்னும் ஒரு சவாலாக உள்ளது என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். மேலும், இது போன்ற முயற்சிகள் அந்த இடைவெளியை நிவர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கின்றன” என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக முன்னெடுத்த IASL நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றத்தின் தலைவர் ரொஷான் பீரிஸ் கூறுகையில், “பொதுமக்களிடமிருந்து எங்களுக்குக் கிடைத்த பதில் மிகவும் சாதகமானதாக இருந்தது. அனைத்து பங்குதாரர்களும் பகிரப்பட்ட நோக்கத்துடன் ஒன்றிணையும்போது, நாம் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்க முடியும் என்ற எமது நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியது. நாங்கள் இந்த முயற்சியை நாடு முழுவதும் விரிவுபடுத்துவதற்கும், தொடர்ந்து முன்னேற்றத்தை உருவாக்குவதற்கும் எதிர்பார்த்திருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

IASL, IRCSL உடன் இணைந்து, “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலத்திற்காக” என்ற கருப்பொருளை வலுப்படுத்தும் வகையில், எதிர்வரும் மாதங்களில் நாடு தழுவிய ரீதியில் நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளது.


Share with your friend