INSEE தனது பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாக துசித் சீ குணவர்ணசூரிய அவர்களை வரவேற்றுள்ளது

Share with your friend

இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளராகத் திகழ்ந்து வருகின்ற INSEE Cement என பிரபலமாக அறியப்படுகின்ற Siam City Cement (Lanka) Limited நிறுவனம், 2025 ஜனவரி 1 முதல் அமுலுக்கு வரும் வகையில் துசித் சீ. குணவர்ணசூரிய அவர்களை தனது பிரதம தொழிற்பாட்டு அதிகாரியாக நியமித்துள்ளதை மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.     

துசித் சீ. குணவர்ணசூரிய  
பிரதம தொழிற்பாட்டு அதிகாரி  
Siam City Cement (Lanka) Limited

பல்வேறு துறைகளில் பல்வகைப்பட்ட தலைமைத்துவ பதவிகளில் 24 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள துசித் அவர்கள், தொழிற்பாட்டு மகத்துவம், மூலோபாய நுண்ணறிவு மற்றும் புத்தாக்கம் ஆகியவற்றில் நிலைநாட்டியுள்ள சாதனைப் பயணத்துடன் INSEE நிறுவனத்தில் இணைந்துள்ளார்.       

Holcim (Lanka) Ltd, LafargeHolcim, மற்றும் INSEE ஆகிய நாமங்களின் கீழ் ஒரு தசாப்தத்திற்கும் மேற்பட்ட தனது தொழில் வாழ்வை INSEE நிறுவனத்திற்கு அர்ப்பணிப்புள்ள துசித், நிறுவனத்தின் தொழிற்பாட்டு மூலோபாயங்களை பட்டை தீட்டுவதில் மூலகர்த்தவாக செயற்பட்டுள்ளதுடன், அதன் வெற்றியை முன்னெடுப்பதற்குப் பங்களித்துள்ளார். அவருடைய பங்களிப்புக்கள் INSEE நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் போட்டித்திறனுக்கு நீடித்து நிலைக்கும் நற்பயனைத் தோற்றுவித்துள்ளன.      

தனது நியமனம் குறித்து துசித் குணவர்ணசூரிய அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், “புத்தாக்கம், நிலைபேற்றியல் மற்றும் தொழிற்பாட்டு மகத்துவம் ஆகியவற்றுக்கு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன், நான் பணியாற்றி வந்துள்ள INSEE நிறுவனத்தில் இப்புதிய பொறுப்பை ஏற்பது எனக்கு மிகவும் கௌரவமளிக்கின்றது. அனைவருக்கும் நீடித்து நிலைக்கும் எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற INSEE நிறுவனத்தின் குறிக்கோளுக்கு பங்களித்து, INSEE நிறுவனத்தை புதிய உச்சங்களை நோக்கி முன்னெடுத்துச் செல்வதற்கு, அர்ப்பணிப்பு மிக்க எமது அணியுடன் இணைந்து உழைப்பதற்கு ஆவலாக உள்ளேன்,” என்று குறிப்பிட்டார்.     

INSEE நிறுவனத்தைத் தவிர, Lion Brewery (Ceylon) PLC, Hemas Manufacturing (Pvt) Ltd, Fonterra Brands Lanka (Pvt) Ltd, GlaxoSmithKline மற்றும் MAS Active உள்ளிட்ட முன்னணி பல்தேசிய மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் தலைமைத்துவப் பொறுப்புக்களை வகித்த சிறந்த தொழிற்பயணத்தை அவர் கொண்டுள்ளார். அவருடைய நிபுணத்துவம் மிக்க அனுபவத்தில் இலங்கை மற்றும் இந்தியா, பங்களாதேஷ், சுவிட்சலாந்து, தாய்லாந்து மற்றும் கென்யா உள்ளிட்ட முக்கிய சர்வதேச சந்தைகளில் பொறுப்புக்களை வகித்துள்ளார்.    

பேராதனை பல்கலைக்கழகத்தில் மின்னியல் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறையில் விஞ்ஞானமாணி சிறப்புப் பட்டத்தையும், கொழும்பு பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ள அவர், ஐக்கிய இராச்சியத்தின் Coventry பல்கலைக்கழகத்தில் வணிகம் மற்றும் நிறுவன உளவியல் துறையில் விஞ்ஞான முதுமாணிப் பட்டத்தையும் பெற்றுள்ளார். சுவிட்சலாந்து IMD மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் நிறைவேற்று தலைமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களிலும் அவர் பங்குபற்றியுள்ளார்.     

வணிக மூலோபாயம், தொழிற்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த செயற்பாட்டுச் சங்கிலி முகாமைத்துவம் ஆகியவற்றில் அங்கீகாரம் பெற்ற சிந்தனைச்சிற்பியான துசித், உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் அறிவு சார் அமர்வுகளில் தீவிரமாக பங்களிப்பாற்றியுள்ளார். IEEE (அமெரிக்கா), The Chartered Institute of Logistics and Transport (CILT) ஐக்கிய இராச்சியம், The Institute of Supply and Materials Management (ISMM) Sri Lanka, மற்றும் The Institution of Engineers Sri Lanka (IESL) உள்ளிட்ட புகழ்பெற்ற தொழில்சார் நிறுவனங்களில் அங்கத்தவராகவும் உள்ளார்.

அவரது ஆழமான நிபுணத்துவம் மற்றும் தீர்க்கதரிசனம் மிக்க தலைமைத்துவம் ஆகியவற்றுடன், எதிர்வரும் ஆண்டுகளில் நிலைபேணத்தக்க வளர்ச்சியையும், தொழிற்பாட்டு மகத்துவத்தையும் மேம்படுத்தி, INSEE நிறுவனத்தை உச்சங்களுக்கு வழிநடத்திச் செல்வதற்கு அவர் தயாராக உள்ளார்.

INSEE Cement நிறுவனம் தொடர்பான விபரங்கள்:

INSEE Cement என்ற நாமத்தில் அறியப்படுகின்ற Siam City Cement (Lanka) Limited ஆனது 1969 ஆம் ஆண்டில் தாய்லாந்தில் நிறுவப்பட்ட தென்கிழக்கு ஆசியாவின் முன்னணி சீமெந்து உற்பத்தியாளரான Siam City Cement Public Company Limited (SCCC) இன் உறுப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கையின் முன்னணி மற்றும் ஒரேயொரு முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட சீமெந்து உற்பத்தியாளராகத் திகழ்வதுடன், இலங்கையில் மிகவும் கேள்விமிக்க INSEE சங்ஸ்தா, INSEE மகாவலி மரைன் பிளஸ் வர்த்தகநாமங்கள் அடங்கலாக, நிர்மாணத் தீர்வுகளின் முழுமையான தயாரிப்பு வரிசையையும் வழங்கி வருகின்றது. 550 பேரைக் கொண்ட தொழில் வல்லுனர்கள் அணியின் பக்கபலத்துடன், உள்நாட்டு கட்டட மற்றும் நிர்மாணத் தொழிற்துறையை உயர் செயல்திறன் கொண்டதாக, காபனைக் குறைக்கும் வழிமுறைகளுடன், எதிர்காலத்திற்கு ஏற்றவாறான கட்டுமானங்களை நோக்கி தொடர்ந்து நகர்த்திச் செல்வதுடன், புத்தாக்கம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றில் நிறுவனத்தின் வலுவான முதலீட்டினூடாக உயர் தரம் மிக்க கலவை சீமெந்து தயாரிப்புக்கள் மற்றும் நிலைபேணத்தகு கட்டட மூலப்பொருட்களை தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தி வருகின்றது.


Share with your friend