தொழிற்சாலைக் கழிவு முகாமைத்துவத்தில் இலங்கையில் முன்னிலை வகித்து வருகின்ற INSEE Ecocycle, சுழற்சிப் பொருளாதாரத்தை ஆதரிப்பதற்காக, தொழிற்சாலைக் கழிவுகளை பெறுமதிமிக்க வளங்களாக மாற்றும் வகையில் அதிநவீன Pyrolysis ஆலையை புத்தளம் சீமெந்து தொழிற்சாலையில் திறந்து வைத்துள்ளது. புதிதாகத் திறக்கப்பட்ட, முழுத் திறன் கொண்ட Pyrolysis ஆலை, அதிநவீன தொழில்நுட்பங்களைக் கொண்டுள்ளதுடன், INSEE Ecocycle இன் நிலையான கழிவு முகாமைத்துவப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக மாறியுள்ளது. ஏனெனில் இது பல்வேறுபட்ட கைத்தொழில்கள் மூலமாக வெளியேற்றப்படும் இறப்பர் மற்றும் பிளாஸ்திக் கழிவுகளிலிருந்து வளங்களை மீட்டெடுப்பதன் அடிப்படையில் ஒட்டுமொத்த கழிவு முகாமைத்துவத் தீர்வை வழங்குகிறது. புதிதாக நிறுவப்பட்ட இந்த Pyrolysis ஆலைக்கு மேலதிகமாக, அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு நிலையான, சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளையும் INSEE Ecocycle வழங்குகிறது. குறிப்பாக தொழிற்சாலைகள் மூலமான அபாயகரமான கழிவுகள், அபாயமற்ற கழிவுகள், வர்த்தகநாம உணர்திறன் பொருட்களை அகற்றுதல் மற்றும் பல தீர்வுகள் அடங்கியுள்ளன.
INSEE Ecocycle இன் புதிய Pyrolysis ஆலை அண்மையில் (பெப்ரவரி 25) இடம்பெற்ற விசேட நிகழ்வில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கைத்தொழில் அமைச்சின் செயலாளரான ஜெனரல் ஆர்.எம். தயா ரத்நாயக்க அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்ததுடன், இலங்கை முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பணிப்பாளரான (அனைத்து வலயங்களுக்கான) எம்.கே.டி. லோரன்ஸ், வடமேல் மாகாண சுற்றாடல் அதிகார சபையின் பணிப்பாளரான சமன் குமார, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் வட மேல் மாகாண அலுவலக பணிப்பாளரான என்.ஜி. செனவிரத்ன, புத்தளம் பிரதேச செயலாளரான ரங்கனா ஜெயதிலக, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புத்தளம் மாவட்ட அலுவலகத்தின் உதவிப் பணிப்பாளரான டி எம் கே திசாநாயக்க, புத்தளம் பிரதிப் பொலிஸ்மா அதிபரான நிமால் பெரேரா, INSEE Cement நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நந்தன ஏகநாயக்க மற்றும் INSEE Cement நிறுவனத்தின் பணிப்பாளரான சஞ்சீவ சூலகுமார ஆகியோரும் கலந்து சிறப்பித்தவர்கள் மத்தியில் அடங்கியிருந்தனர். நிகழ்வில் INSEE Cement நிறுவனத்தின் நிர்வாக சபையின் உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட முகாமைத்துவ அணியினரும் கலந்து கொண்டனர்.
புதிய Pyrolysis ஆலை தொடர்பில் INSEE Cement நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான நந்தன ஏகநாயக்க அவர்கள் கருத்து வெளியிடுகையில், “நிர்மாணத் துறையில் சந்தையில் முன்னிலை வகிக்கும் ஒரு நிறுவனம் என்ற ரீதியிலும், நாட்டில் ஒரேயொரு முழுமையான ஒருங்கிணைந்த சீமெந்து ஆலையைக் கொண்டிருப்பதுடன் இலங்கையின் மிகவும் பிரபலமான சீமெந்து வர்த்தகநாமங்களான சங்ஸ்தா மற்றும் மகாவலி மெரின் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனம் என்ற வகையிலும், INSEE Cement ஒரு பொறுப்பான வர்த்தக நிறுவனமாக, தேசிய கழிவு முகாமைத்துவ பிரச்சினைக்கு ஆதரவளிப்பதற்கும் தீர்வுகளை காண்பதற்கும் எப்போதும் முன்னின்று உழைத்து வருகிறது. இந்த புதிய அதிநவீன ஆலையானது, இறப்பர் மற்றும் பிளாஸ்திக் கழிவுகளை கையாளக்கூடியதாக இருப்பதுடன், இது INSEE Ecocycle இன் தற்போதைய சேவைகளின் வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. நாட்டின் கழிவுப் பிரச்சினையை திறம்பட எதிர்கொள்ள, நிலையான கழிவு முகாமைத்துவத் தீர்வுகளில் INSEE தொடர்ந்து முதலீடு செய்யும். INSEE Ecocycle வணிகங்களுக்கு நிலையான கழிவு முகாமைத்துவத் தீர்வுகளை வழங்குவதில் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைத்துவத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்வதுடன், நிரூபிக்கப்பட்ட நிபுணத்துவம், திறமையான வளங்கள், தொழில்நுட்ப அறிவு மற்றும் தொழில்முறை சேவைகள் மூலம் வர்த்தக நிறுவனங்களுக்கு அவற்றின் நிலைபேண்தகைமை இலக்குகளை அடைய உதவுகிறது,” என்று குறிப்பிட்டார்.
Pyrolysis என்பது ஒட்சிசன் வாயு இல்லாத கார்பனேசியப் பொருட்களின் வெப்பச் சிதைவு ஆகும். மேலும் இயக்க வெப்பநிலை மற்றும் வெப்பமேற்றல் விகிதத்தை மாற்றுவதன் மூலம் பல்வேறு விகிதங்களில் திண்ம, திரவ மற்றும் வாயு பொருட்களின் கலவையை உற்பத்தி செய்வதில் அதிக நெகிழ்வுத்தன்மையின் காரணமாக Pyrolysis செயல்முறை மிகவும் ஈர்க்கிறது. இறப்பர் மற்றும் பிளாஸ்திக் கழிவுகளுக்கு 100 சதவீத வள மீட்பு அடிப்படையிலான தீர்வை வழங்குகிறது.
INSEE Ecocycle நிறுவனத்தின் பணிப்பாளரான சஞ்சீவ சூலகுமார அவர்கள் மேலும் விளக்கமளிக்கையில், “இலங்கையில் இத்தொழிற்துறையில் இரண்டு தசாப்த கால அனுபவத்தைக் கொண்ட நிலையான கழிவு முகாமைத்துவ தீர்வுகளை வழங்கும் நிறுவனம் நாம் மட்டுமே. எனவே, INSEE Ecocycle இன் நிலையான கழிவு முகாமைத்துவச் சேவைகள் வரிசையில், குறிப்பாக இறப்பர், பிளாஸ்திக் கழிவுகளுக்கு Pyrolysis ஐ சேர்ப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். Pyrolysis என்பது ஒரு சுழற்சிப் பொருளாதார அடிப்படையிலான வள மீட்பு தீர்வாகும். இது Pyrolysis எண்ணெய் மற்றும் கரிமம் (Carbon Black) ஆகியவற்றை முதன்மை வளங்களாக உற்பத்தி செய்கிறது. இது Ecocycle இற்கு குறிப்பிடத்தக்க ஒரு மைல்கல் ஆகும். இந்த அதிநவீன ஆலையுடன், எங்களின் மதிப்புமிக்க வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் நிலைபேண்தகைமை இலக்குகளை அடைய உதவும் வகையில் கழிவு முகாமைத்துவ தீர்வுகளின் வரிசையை நாம் விரிவுபடுத்தியுள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
கடந்த இரண்டு தசாப்தங்களாக, INSEE Ecocycle ஆனது, அரச நிறுவனங்கள், பன்னாட்டு நிறுவனங்கள், உள்ளூர் கூட்டு நிறுவனங்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்புச் சபை அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் உட்பட, நாட்டில் உள்ள 1000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு, ஆண்டுதோறும் 1,000,000 மெட்ரிக் தொன் தொழிற்சாலைக் கழிவுகளை நிலையான வழிமுறையில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் தூய்மையான மற்றும் பசுமையான நாட்டிற்கு பங்களிப்பு செய்தல் என்ற பொதுவான இலக்குடன் பொறுப்புடன் அகற்றுவதற்கு உதவியுள்ளது.