Intrepid இலங்கையில் சர்வதேச மாநாடு 2025 ஐ முன்னெடுக்கத் திட்டம்

Share with your friend

உலகின் மாபெரும் சாகச பிரயாண பிரயாண வசதிகளை வழங்கும் நிறுவனம் தனது பிரதான மக்கள் தொடர்பு மாநாட்டை முன்னெடுக்க கொழும்பை தெரிவு செய்துள்ளது

உலகின் மாபெரும் சாகச பிரயாண வசதிகளை வழங்கும் Intrepid Travel, தனது வருடாந்த சர்வதேச அமர்வு 2025 ஐ முன்னெடுப்பதற்காக இலங்கையின் கொழும்பை தெரிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. அதன் தலைமையகம் அமைந்துள்ள அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகருக்கு வெளியே இந்த நிகழ்வை முன்னெடுக்கும் இரண்டாவது சந்தர்ப்பமாக இது அமைந்திருப்பதுடன், Intrepid இன் சர்வதேச செயற்பாடுகளில் இலங்கை ஆற்றும் முக்கிய பங்கு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

    Intrepid பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் தோர்ன்டன் கடந்த ஆண்டின் சர்வதேச மாநாட்டில் காணப்படுகின்றார்.

    2012 ஆம் ஆண்டில் கொழும்பில் அலுவலகத்தை நிறுவிய Intrepid, படிப்படியாக வளர்ச்சி கண்டுள்ளது. நாடு முழுவதிலும் பயணங்களை நிர்வகிக்கும் திறன் கொண்ட இலங்கையின் அலுவலகம், நிறுவனத்தின் செயற்பாடுகளின் முக்கியமான அங்கமாக திகழ்கின்றது. இந்த அலுவலகத்தினூடாக தொழினுட்பம், வருமான நிர்வாகம், மனித வளங்கள், தயாரிப்பு சேவைகள், நிதியியல் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் போன்றவற்றுக்கான ஆதரவு வழங்கப்படுகின்றது. Intrepid இன் உள்நாட்டு அணியில் 276 அலுவலகசார் ஊழியர்கள் மற்றும் 45 உள்நாட்டு சுற்றுலா தலைமை செயற்பாட்டாளர்கள் போன்றவற்றை கொண்டுள்ள நிலையில், இலங்கையின் அலுவலகத்தின் உறுதியான செயற்பாட்டின் காரணமாக, இந்த பெருமைக்குரிய நிகழ்வை முன்னெடுப்பதற்கான இயற்கையான தெரிவாக கொழும்பு அமைந்துள்ளது.

    2025 பெப்ரவரி 24 முதல் 27 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ள Intrepid இன் சர்வதேச மாநாட்டினூடாக, அதன் 40 க்கும் அதிகமான அலுவலகங்களைச் சேர்ந்த 50 க்கு மேற்பட்ட இனங்களைச் சேர்ந்த 200 க்கும் அதிகமான சர்வதேச பங்குபற்றுனர்கள் ஒன்றிணைக்கப்படுவர். அதில் Intrepid இன் பணிப்பாளர் சபை, இணை ஸ்தாபகர்கள் மற்றும் பிரதான முகாமைத்துவ அணியினர் போன்றவர்களுடன் 300 உள்நாட்டு அணி அங்கத்தவர்களும் அடங்கியிருப்பர்.

    நான்கு நாள் மாநாட்டில் மூலோபாய கலந்துரையாடல்கள், தலைமைத்துவ பயிற்சிப் பட்டறைகள், உள்ளூர் சமூக ஈடுபாடுகள் மற்றும் உலகளாவிய ரீதியில் தமது ஊழியர்களுக்கான அனுபவ பயணங்கள் போன்றவற்றை உள்ளடக்கியிருக்கும். உறுதியான, உள்ளடக்கமான நிறுவன கலாசாரத்தை ஊக்குவிக்கும் Intrepid இன் பரந்த நோக்குடன் இந்தத் திட்டம் பொருந்துவதாக அமைந்திருப்பதுடன், வியாபார செயற்பாடுகளை சீரமைப்பதில் அணி அங்கத்தவர்கள் வகிக்கும் பணியை மேம்படுத்துவதில் இது முக்கிய பங்காற்றும். இலங்கையில் பிரதான பங்காளர்களை ஒன்றிணைப்பதன் மூலமாக, சர்வதேச அணிகளை வலிமைப்படுத்துவதில் காண்பிக்கும் உறுதியான அர்ப்பணிப்பு மற்றும் ஆசியாவில் நிறுவனத்தின் பிரசன்னத்தை மீளுறுதி செய்வது போன்றவற்றுக்கான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

    அண்மையில் நடைபெற்ற இலங்கை தேசிய சுற்றுலா விருதுகள் 2024 இல் Best Destination Loyal Partner விருதை Intrepid பெற்றிருந்த நிலையிலும், சிறந்த நிலைபேறான செயற்பாடுகளின் இறுதியாளராக தெரிவு செய்யப்பட்டிருந்த நிலையிலும், இந்நிகழ்வை முன்னெடுப்பதற்கு இலங்கை தெரிவு செய்யப்பட்டுள்ளமை மிகவும் பொருத்தமானதாக அமைந்துள்ளது.

    Intrepid Travel இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜேம்ஸ் தோர்ன்டன் குறிப்பிடுகையில், “எமது நிறுவனத்தின் முக்கியமான அங்கமாக இலங்கையிலுள்ள எமது அணியினர் திகழ்வதுடன், இந்த சாகச அம்சங்கள் நிறைந்த நாட்டுக்கு விஜயம் செய்வதற்கு எமது வாடிக்கையாளர்களும் அதிகம் ஆர்வத்தைக் கொண்டுள்ளனர்.  இலங்கைக்கான எமது நோக்கம் என்பது சுற்றுலாத்துறைக்கு அப்பாற்பட்டதாக அமைந்துள்ளது. நிலைபேறான வளர்ச்சியை முன்னெடுப்பது மற்றும் அர்த்தமுள்ள, நீடித்து நிலைத்திருக்கும் தாக்கத்தை ஏற்படுத்துவது அவற்றில் அடங்குகின்றன. பெருமளவான Intrepid பிரயாணிகள் இலங்கையை தெரிவு செய்வதனூடாக, இலங்கையில் சுற்றுலாவுக்கு காணப்படும் பெருமளவு வாய்ப்பு புலப்படுவதுடன், இந்த வெற்றிகரமான செயற்பாட்டின் பலன்களை உள்ளூர் சமூகத்தாரும் பெறுவதை உறுதி செய்வதில் நாம் எம்மை அர்ப்பணித்துள்ளோம். இலங்கையின் கலாசாரத்தை பகிர்ந்து கொள்வதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், உள்நாட்டு வியாபாரங்களுக்கும் சமூகங்களுக்கும் ஆதரவளிப்பதையிட்டு மகிழ்ச்சியடைகின்றோம்.” என்றார்.

    2024 இல், Intrepid சிறந்த வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், இலங்கைக்கு 4000 க்கு அதிகமான பிரயாணிகளை வரவேற்றிருந்தது. இது 2023 ஆண்டுடன் ஒப்பிடுகையில் 206% அதிகரிப்பாகும். கொவிட்-19 தொற்றுப் பரவலுக்கு முன்னரான எண்ணிக்கையை விட இது மிகவும் உயர்வானதாகும். 2030 ஆம் ஆண்டளவில் 15,000க்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதற்கான திட்டங்களை நிறுவனம் கொண்டுள்ளது. அதனூடாக இலங்கையின் சுற்றுலாவுக்கு பெருமளவு பங்களிப்பு வழங்கவும், பொருளாதார அனுகூலங்களை உள்ளூர் சமூகங்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சிறு வியாபாரங்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கவும் எதிர்பார்க்கின்றது.

    Intrepid இன் இலங்கைக்கான பொது முகாமையாளர் பூர்ணக தெல்பசித்ர குறிப்பிடுகையில், “எமது சர்வதேச தலைமைத்துவ மற்றும் உலகளாவிய ரீதியில் காணப்படும் சக ஊழியர்களை கொழும்புக்கு வரவேற்பதையிட்டு நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இலங்கை ஒரு சுற்றுலாத் தலமாக வழங்கும் சேவைகளை வெளிப்படுத்தவும், எமது கலாசாரத்தை பகிர்ந்து கொள்ளவும் மற்றும் எமது நிறுவனத்தின் மாபெரும் முக்கியமான நிகழ்வை எனது சொந்த நாட்டில் முன்னெடுப்பதும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.” என்றார்.

    முன்னணி பிரயாண தலங்களில் ஒன்றாக இலங்கை தொடர்ந்து மீண்டு வரும் நிலையில், Intrepid இன் சர்வதேச மாநாட்டை முன்னெடுப்பது என்பது, நாட்டின் சுற்றுலாத் துறைக்கு பெரும் ஊக்கமளிப்பாக அமைந்திருக்கும் என்பதுடன், தீர்மானம் மேற்கொள்வோர் மற்றும் முன்னணி சர்வதேச தலைவர்கள் கொழும்பில் பிரசன்னமாவது துறைக்கு உந்து சக்தியாகவும் அமையும்.


    Share with your friend