Lumala ஊழியர்கள் இலங்கையின் சைக்கிள் தொழிற்துறையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்

Share with your friend

ஆசியாவின் முன்னணி சைக்கிள் உற்பத்தியாளர்களாக திகழும் Lumala City Cycle Industries Manufacturing Pvt Ltd இன் செயற்பாடுகளை மூடிவிடும் நிலைக்கு தள்ளியுள்ள பாரிய நெருக்கடியிலிருந்து நிறுவனத்தை பாதுகாப்பதற்கு அரசாங்கத்தை தலையிடுமாறு நிறுவனத்தின் ஊழியர்கள் அவசர கோரிக்கைவிடுத்துள்ளனர். பாணந்துறையில் அமைந்துள்ள Lumala, ஐந்து தசாப்த காலத்துக்கு மேலாக இலங்கையின் தொழிற்துறையில் முக்கிய பங்கை வகிப்பதுடன், அதிகரித்துச் செல்லும் செலவுகள் மற்றும் நேர்மையற்ற சந்தை செயற்பாடுகள் போன்றன நிறுவனத்தின் நிலைத்திருப்புக்கு பெரும் இடரை தோற்றுவித்துள்ளன.

தொழிற்சாலையின் பொது முகாமையாளர் ரஞ்ஜித் சிறிவர்தன கருத்துத் தெரிவிக்கையில், “ஸ்டீல் ரிம் பிரிவையும் இலங்கையிலுள்ள குரோமியம் பூச்சு ஆலைகளில் ஒன்றையும் மூடியுள்ளதுடன், கட்டம்கட்டமாக தமது செயற்பாடுகளை இடைநிறுத்தும் பணிகளை நிர்வாகம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளது. போர்க் மற்றும் மட்கார்ட் உற்பத்தி, அலொய் ரிம் உற்பத்தி, பிரேம் உற்பத்தி மற்றும் பெயின்ட் பிரிவு போன்றன அடங்கலாக இதர பல பிரிவுகளும் மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளன. இவற்றில் உடனடியாக கவனம் செலுத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளது. Lumala இல் இரு தசாப்த காலப்பகுதிக்கு மேலாக பணியாற்றியுள்ள ஊழியர்கள், தமது வாழ்வாதாரத்தை தக்க வைத்துக் கொள்வதில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.” என்றார்.

இந்த நெருக்கடி நிலைக்கு பங்களிப்பு வழங்கியுள்ள சில பிரதான சவால்கள் குறித்து ஊழியர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். இறக்குமதி செய்யப்படும் சைக்கிள்கள் மற்றும் மின் சைக்கிள்கள் போன்றவற்றால் உள்நாட்டு சந்தை நிறைந்துள்ளது. இவற்றில் பல ஒழுங்குபடுத்தல் பரிசோதனைகளையும் மீறி நாட்டினுள் காணப்படுகின்றன. மேலும், சில விற்பனை நிலையங்கள் இறக்குமதி செய்யும் உதிரிப்பாகங்களை மூலப்பொருட்களாக பிரகடனப்படுத்தி, வரி விதிப்புகளிலிருந்து தமக்கு விலக்கைப் பெற்றுக் கொள்ளும் மோசடிச் செயற்பாடுகளிலும் ஈடுபடுகின்றன. அதனூடாக சுங்க வரி மற்றும் பெறுமதி சேர் வரி போன்றவற்றிலிருந்து அவை விடுபட்டு, அசாதாரணமாக குறைந்த விலைகளில் தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்கின்றன. பாதுகாப்பு கட்டணக் கொள்கைகள் இன்மை காரணமாக, உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு இந்த அசாதாரண செயற்பாடுகளுக்கு எதிராக போட்டியிட முடியாத நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முழுமையான தயாரிப்புகள் குறைந்த விலைகளில் இறக்குமதி செய்யப்படும் நிலையில், உள்நாட்டு உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்கள் பெருமளவில் வரிவிதிப்புக்கு ஆளாகின்றன. இதனால் உற்பத்திச் செலவுகள் பெருமளவு அதிகரிப்பதுடன், உள்நாட்டு வியாபாரங்கள் குறைந்தளவு போட்டிகரத்தன்மை வாய்ந்தனவாக அமைந்துள்ளன. இந்த சவால்கள் Lumala போன்ற ஒழுக்கமான முறையில் உற்பத்தியில் ஈடுபடும் நிறுவனங்களின் நிலைத்திருப்புக்கு சவாலாக மாத்திரம் அமைந்திராமல், அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரி வருமானத்தையும் இல்லாமல் செய்கின்றன.

Lumala தொடர்ந்தும் தனது செயற்பாடுகளை படிப்படியாக இடைநிறுத்தும் நடவடிக்கைகளை தொடர்ந்தால், அதன் தாக்கம் பணியாளர்களையும் தாண்டி உணரப்படும். நூற்றுக் கணக்கான ஊழியர்கள் தமது தொழில்களை இழந்துவிடும் இடரை எதிர்நோக்கியுள்ளனர். அதில் பலர் பல தசாப்த காலமாக நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். செயற்பாடுகள் மூடப்படுவதன் காரணமாக Lumala இன் செயற்பாடுகளின் தங்கியிருக்கும் புகழ்பெற்ற உள்நாட்டு விநியோகத்தர்களும் நெருக்கடிகளுக்கு முகங்கொடுப்பர். மூலப்பொருட்களுக்காக Lumala வசதிகளில் தங்கியிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் மோட்டார் வாகனங்கள் போன்ற தொடர்புடைய தொழிற்துறைகளும் பின்னடைவுகளை சந்திக்கும். தொழிற்துறை அமைச்சினால் உறுதி செய்யப்பட்டதற்கமைய, உள்நாட்டு பெறுமதி சேர்ப்பில் 50% முதல் 70% வரை அதிகரிப்பை பதிவு செய்துள்ள நிலையில், தமது கரிசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என ஊழியர்கள் கருதுகின்றனர்.

Lumala இன் ஊழியர்கள் ஒன்று சேர்ந்து, இந்த விடயம் தொடர்பில் தலையிடுமாறு அரசாங்கத்திடம் கோருவதுடன், நேர்மையான வரிக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி, சீரற்ற சந்தை செயற்பாடுகளை தவிர்ப்பதுடன், முறையான வரி வருமானத்தை உறுதி செய்யுமாறும் கோரியுள்ளனர். தொழிற்துறை அமைச்சு, தொழிற்துறை அபிவிருத்தி சபை (IDB), இலங்கை சுங்கம் மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் ஆகியன இணைந்து பரந்த விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளனர். தமக்கு விசேட வெகுமதிகள் அல்லது வரி நீக்கங்களை கோரவில்லை என்பதுடன், சகல உற்பத்தியாளர்களுக்கும் சீரான களத்தை உறுதி செய்யும் கொள்கைகளை நடைமுறைப்படுத்துமாறு ஊழியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

உள்நாட்டு தொழிற்துறைகளுக்கு ஆதரவளிப்பதற்கான தமது அர்ப்பணிப்பை அரச அதிகாரிகள் முன்னர் வெளிப்படுத்தியிருந்தனர், மேலும் தொழில் இழப்புகள் மற்றும் தொழிற்துறை வீழ்ச்சி போன்றவற்றை தவிர்க்கும் வகையில் அரசாங்கத்தின் தலையீடு அமைந்திருக்கும் என்பதில் Lumala ஊழியர்கள் எதிர்பார்ப்பைக் கொண்டுள்ளனர்.


Share with your friend