NDB வங்கியின் அனுசரணையில் நடைபெற்ற வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் LOLC ஹோல்டிங்ஸ் அணியை 190 ஓட்டங்களால் வெற்றி கொண்ட நவலோக்க மருத்துவமனை அணி சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
திவங்க கக்குலவெலவின் சகலதுறை ஆட்டம், சமில நதீஷின் அரைச் சதம் மற்றும் சம்பத் நிஸ்ஸங்கவின் அபார பந்துவீச்சு என்பன நவலோக்க மருத்துவமனை அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.
வர்த்தக நிறுவனங்களுக்கிடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி, கடந்த செப்டமபர் 29ஆம் திகதி ப்ளூம்ஃபீல்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நவலோக்க மருத்துவமனை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ஓட்டங்களைக் குவித்தது. இதில் இடதுகை துடுப்பாட்ட வீரரான திவங்க கக்குலவெல 5 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 87 பந்துகளில் 62 ஓட்டங்களைப் பெற்றதோடு, வலதுகை துடுப்பாட்ட வீரரான சமில நதீஷ் 3 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 37 பந்துகளில் 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்
பந்துவீச்சில் LOLC ஹோல்டிங்ஸ் அணி சார்பாக சிதத் மல்லவாராச்சி 46 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், எரந்த மதுசங்க 49 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தனர்.
266 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பாடிய LOLC ஹோல்டிங்ஸ் அணி, எதிரணியின் பந்துவீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 17.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 75 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
அந்த அணியின் துடுப்பாட்டத்தில் லஹிரு ஹிரன்ய 17 ஓட்டங்களையும், ஷிஹான் பெர்னாண்டோ 12 ஓட்டங்களையும் அதிகபட்சமாக எடுத்தனர்.
நவலோக்க மருத்துவமனை அணியின் பந்துவீச்சில் அபாரமாக செயல்பட்ட சம்பத் நிஸ்ஸங்க 28 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளையும், திவங்க கக்குலவெல 17 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளையும், சானக தேவிந்த 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதன்படி, 190 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டிய நவலோக்க மருத்துவனை அணி, வர்த்தக நிறுவனங்களுக்கு இடையிலான டிவிஷன் – C மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கிரிக்கெட் தொடரின் சம்பியன் பட்டத்தை சுவீகரித்தது.
இந்த நிலையில், துடுப்பாட்டத்தைப் போல பந்துவீச்சிலும் அசத்திய திவங்க கக்குலவெல இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் தட்டிச்சென்றார். இவர் இந்த தொடரில் 175 ஓட்டங்களையும், 12 விக்கெட்டுகளையும் கைப்பற்றியிருந்தார்.
இதனிடையே, இம்முறை போட்டித் தொடரில் 15 விக்கெட்டுகளை வீழ்த்திய MAS யுனிச்செல்லா அணியின் அசேல சம்பத் சிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை தட்டிச் செல்ல, 5 இன்னிங்ஸ்களில் 5 அரைச் சதங்களுடன் 376 ஓட்டங்களைக் குவித்த நவலோக்க மருத்துவமனை அணியின் தவீஷ அபிஷேக் கஹந்துவாரச்சி தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரருக்கான விருதைப் பெற்றுக்கொண்டார்.
இதேவேளை, இறுதிப் போட்டியை அடுத்து இடம்பெற்ற பரிசளிப்பு வைபவத்தில் சிறப்பு விருந்தினராக தேசிய அபிவிருத்தி வங்கியின் சந்தைப்படுத்தல் பிரிவின் துணைத் தலைவர் தர்ஷன ஜயசிங்க கலந்துகொண்டதுடன், வர்த்தக நிறுவனங்களின் தலைவர் மகேஷ் டி அல்விஸ், துணைத் தலைவர் தரிந்திர கலுபெரும மற்றும் போட்டி ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் லக்மால் டி சில்வா ஆகியோர் இதில் பங்கேற்றனர்.