SDB வங்கி மற்றும் CA Sri Lanka ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் கூட்டுறவு கணக்காய்வு நடைமுறைகளை வலுப்படுத்தும் முயற்சி  

Share with your friend

உங்களுக்கு மதிப்பளிக்கின்ற ஒரு வங்கியான SDB வங்கியானது கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தைச் சேர்ந்த கணக்காய்வு அலுவலர்களுக்கான விசேட செயலமர்வைவொன்றை நடாத்துவதற்காக இலங்கை பட்டயக் கணக்காளர்கள் கற்கை நிறுவனத்துடன் (Institute of Chartered Accountants of Sri Lanka – CA Sri Lanka) கைகோர்த்துள்ளது. இத்திணைக்களத்துடன் தொடர்புபட்ட அடிமட்ட சமுதாயங்களுக்கு அறிவு, நிபுணத்துவம், மற்றும் அனுபவம் ஆகியவற்றைப் பரப்பி, கூட்டுறவுச் சங்கங்களினுள் நிதியியல் ரீதியான பொறுப்புக்கூறலை வலுப்படுத்தி, ஈற்றில் மேம்பட்ட கணக்காய்வு தராதரங்கள் மூலமான நன்மைகளை அனுபவிப்பதற்கு இடமளிப்பதே இதன் முக்கிய நோக்கம்.     

கேகாலை, குருணாகல், மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து அலுவலர்களை ஒன்றுதிரட்டிய இச்செயமலர்வு, கூட்டுறவுச் சங்கங்களில் நிதியியல் கவனக்குறைவுகளைப் போக்குவதை மேம்படுத்தும் நவீன கணக்காய்வு மற்றும் கணக்கியல் நுட்பங்களை அவர்களுக்கு வழங்கியது. இம்முயற்சியின் முதலாம் கட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட மூன்று மாவட்டங்கள் மீதும் கவனம் செலுத்தப்பட்டுள்ள நிலையில், இலங்கை எங்கிலும் நிதியியல் வெளிப்படைத்தன்மை மற்றும் நிர்வாக ஆட்சியை வலுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கத் திட்டமிடப்பட்டுள்ள பாரிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகும். கூட்டுறவுச் சங்கங்கள் நாட்டின் அடிமட்டப் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிப்பதுடன், சிறப்பாக நிர்வகிக்கப்படுகின்ற நிதியியல் கட்டமைப்புக்கள் சிறப்பான வழியில் கடன் வசதி வாய்ப்புக்களுக்கான அணுகலுக்கு அவற்றுக்கு இடமளிப்பதுடன், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளின் வளர்ச்சிக்கு நேரடியாக உதவி, பரந்தளவிலான நிலைபேற்றியல் இலக்குகளைப் பலப்படுத்துகின்றது.    

அறிவு தொடர்பான இடைவெளிகளைப் போக்கி, கூட்டுறவு ஸ்தாபனங்களின் நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்து, சமகாலத்து சிறந்த நடைமுறைகளை அறிமுகப்படுத்துவதனூடாக இம்முயற்சியானது நிதியியல் நேர்மையை வலுப்படுத்துகின்றது. கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் SDB வங்கி ஆகியவற்றுக்கு இடையில் மகத்தான ஒத்துழைப்பை இது வளர்ப்பதுடன், நிர்வாக ஆட்சி மற்றும் நிதியியல் முகாமைத்துவம் ஆகியவற்றில் தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு வழிவகுக்கின்றது.

SDB வங்கியின் கூட்டுறவு மேம்பாட்டுக்கான உதவிப் பொது முகாமையாளர் திரு. லசந்த எதிரிசூரிய அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “கூட்டுறவுச் சங்கங்களின் நிதியியல் ஆரோக்கியத்தை நிலைபேணச் செய்வதில் பொருத்தமான திறன்களுடன் கணக்காய்வு அலுவலர்களுக்கு வலுவூட்டுதல் அத்தியாவசியம் என்பதை நாம் இனங்கண்டுள்ளோம். தொழில்துறை தராதரங்களை வலுப்படுத்தி, நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட கலாச்சாரத்தை வளர்ப்பதில் எமது பரந்த அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இச்செயலமர்வு அமைந்துள்ளது. கூட்டுறவுச் சங்கங்கள் சிறந்த முறையில் நிர்வகிக்கப்படும் போது, நிதி வசதிக்கான சிறந்த அணுகலை அவை பெற்றுக்கொள்வதுடன், அடிமட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு நன்மையளிக்கும் அலையைத் தோற்றுவிப்பதுடன், எமது நீண்ட கால நிலைபேற்றியல் மூலோபாயங்களுடனும் ஒன்றிக்கின்றது. சிரேஷ்ட பட்டயக் கணக்காளரும், SDB வங்கியின் முன்னாள் தலைவருமான திரு. லக்ஷ்மன் அபேசேகர அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட CA Sri Lanka ன் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி பணிக்குழுவால் முன்னெடுக்கப்படுகின்ற பாரிய செயற்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் இந்நிகழ்ச்சித்திட்டம் காணப்படுகின்றது. இந்த அமர்வுக்கான முக்கிய வளவாளராக 25 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ள CA Sri Lanka ன் பேரவை அங்கத்தவரும், RTA Sri Lanka ன் முகாமைத்துவப் பங்காளருமான திரு. சமன் சிறிலால் அவர்கள் எம்முடன் இணைந்துள்ளமை உண்மையில் ஒரு வரப்பிரசாதமாகும்.”    

கூட்டுறவுத் துறையுடன் SDB வங்கி கொண்டுள்ள ஈடுபாடானது கூட்டுறவுத் துறை மீது விசேட கவனத்துடன், இலங்கை எங்கிலும் நிலைபேற்றியல் கொண்ட வங்கிச்சேவையை முன்னெடுக்கும் அதன் மேலோட்டமான குறிக்கோளைப் பிரதிபலிக்கின்றது. உள்ளூர் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலமாகவும், பெண்கள் மத்தியில் தொழில்முயற்சியாண்மையை ஊக்குவிப்பதன் மூலமாகவும், மற்றும் நிதியியல் மற்றும் டிஜிட்டல் ரீதியாக அனைவரையும் அரவணைக்கும் வகையில் வாய்ப்பளிப்பதன் மூலமாகவும் அர்த்தமுள்ள பொருளாதார விளைவைத் தோற்றுவிக்கும் அதேசமயம், நெகிழ்திறன் கொண்ட மற்றும் முற்போக்கான சமூகங்களை வளர்ப்பதே வங்கியின் நோக்கம்.


Share with your friend