நாட்டின் இளைஞர்கள் தங்கள் திறன்களை வளர்த்து வெற்றிப் பயணத்தை மேற்கொள்வதற்கான ஏராளமான வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துடன், தொழில் துறை திறன்கள் கவுன்சில் (ISSCs) Skills Expo 2024 கண்காட்சியை பெருமையுடன் வழங்குகிறது. கல்வி அமைச்சின் அங்கீகாரத்துடன் இந்த வருடம் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக இக்கண்காட்சி நடைபெறுகிறது. Skills Expo 2024 இன் செய்தியாளர் மாநாடு இன்று (24ஆம் தேதி) நெலும் பொகுண லோட்டஸ் லோஞ்சில் கௌரவ. (டாக்டர்.) சுசில் பிரேமஜயந்த (கல்வி அமைச்சு) தலைமையின் கீழ் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திருமதி. திலகா ஜெயசுந்தர (செயலாளர், கல்வி அமைச்சு), திருமதி. ஹிமாலி W.K. அதாவுடகே (கூடுதல் செயலாளர் (SSD), கல்வி அமைச்சு), திரு. நிஷாந்த விக்கிரமசிங்க (தலைவர், கட்டுமானத் தொழில் திறன்கள் துறை கவுன்சில் – CISC), திரு. சம்பத் திரிமாவிதான (தலைவர், தகவல் தொடர்பு தொழில் துறை கவுன்சில் – ICTISC), திரு. சனத் உக்வத்த (தலைவர், சுற்றுலா தொழில் துறை கவுன்சில் – TISC) திரு. காவிந்த திசாநாயக்க (தலைவர், விவசாய தொழில் துறை கவுன்சில் (AISC), திரு. ரவித சில்வா (தலைவர், ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரி கவுன்சில் (ஏஐசி), கலாநிதி சுனில் ரத்னப்ரிய (தலைவர், சுகாதார குழு) ஆகியோரும் கலந்துகொண்டனர்.
“உலகளாவிய தொழில் சந்தை ஒரு முன்னுதாரணமான மாற்றத்தை கொண்டுவந்துள்ளது. அங்கு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகள் இப்போது தங்களின் புதிய பணியாளர்களிடையே தனித்துவமான திறன்களைத் தேடுகின்றன. மிகவும் பாரம்பரியமான தொழில் தெரிவுகளிலிருந்து புதிய திறன்கள் சார்ந்த பாத்திரங்களுக்கான வழிகளைத் திறப்பதற்கு உலகம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய தேவையை உணர்ந்து, Skills Expo 2024 ஆசியா முழுவதும் திறன்கள், கல்வி மற்றும் தொழில் ஆய்வு ஆகியவற்றின் அடிப்படையில் மறுவரையறை செய்ய உள்ளது. நாட்டிலேயே முதன்மையான திறன் அடிப்படையிலான கண்காட்சியை நடத்துவதற்கு கல்வி அமைச்சின் ஒப்புதலைப் பெற்றமையிட்டு நாங்கள் உண்மையில் பெருமிதமடைகிறோம்” என்று Skills Expo 2024 கண்காட்சியின் தலைவர் ரவித் சில்வா தெரிவித்தார்.
2024 ஆம் ஆண்டு செப்டம்பர் 10, 11 மற்றும் 12 ஆம் திகதிகளில் நெலும் பொகுன மற்றும் கிரீன் பாத் ஆகிய இடங்களில் இக்கண்காட்சியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு “உங்கள் எதிர்காலத்தைத் திறக்க” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு Skills Expo 2024 நடைபெறுகிறது.
2023 இல் BMICH இல் நடைபெற்ற எக்ஸ்போ கண்காட்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஏற்கனவே தாம் பெற்றிருந்த திறன்களைப் பயன்படுத்துவதற்கும், சரியான வாழ்க்கைப் பாதையில் வழிகாட்டுதலைப் பெறுவதற்கும் நாடு முழுவதிலுமிருந்து ஏராளமானோர் இக்கண்காட்சிக்கு வருகை தந்திருந்தனர். இந்த ஆண்டும் இளைஞர்கள் தங்களுக்கான சரியான பாதையை கண்டறியும் நோக்கத்துடன் பங்குபற்றும் அதேவேளை, அவர்களுக்கு உதவும் வகையில், கண்காட்சியில் ஏராளமான நிறுவனங்கள் தங்கள் அமைவிடங்களை அமைத்துக்கொள்வதாக உறுதியளித்துள்ளன. கட்டுமான தொழில் திறன் கவுன்சில் (CISC), தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப தொழில் திறன் கவுன்சில் (ICTISC), உற்பத்தி மற்றும் பொறியியல் தொழில் துறை திறன் கவுன்சில் (MESSCO), சுற்றுலா தொழில் திறன் கவுன்சில் (TISC), மற்றும் விவசாய துறை திறன் கவுன்சில் (ASSC) ஆகியவை, கிடைக்கக்கூடிய தொழில்துறை பயிற்சித் திட்டங்கள், இந்தத் துறைகளில் உள்ள வேலை வெற்றிடங்கள் தொடர்பான தரவுகளைப் பகிர்ந்துகொள்வதுடன், வேலை தேடுபவர்களுக்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்புகளையும் பெற்றுக்கொடுக்கும்.
இந்நிகழ்வில், பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த தொலைநோக்கு பார்வையாளர்கள் தங்களின் குறிப்பிட்ட நிபுணத்துவம் பற்றிய நுண்ணறிவுகளைப் பகிர்ந்துகொள்வார்கள். மேலும் மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும், கல்வி வாய்ப்புகள், தொழில் வழிமுறைகள் மற்றும் திறன் மேம்பாட்டில் சமீபத்திய பார்வைகள் தொடர்பான ஆலோசனைகளையும் வழங்குவார்கள். பிரத்தியேக நுண்ணறிவு, நெட்வெர்க்கிங் வாய்ப்புகள் மற்றும் சிந்தனையைத் தூண்டும் விவாதங்களும் நடைபெறும். பங்கேற்பாளர்கள் நேர்காணல்களில் ஈடுபடுவதற்கும் Skills Expo 2024 இன் உற்சாகமிக்க தருணங்களை படம்பிடிப்பதற்கும் சலுகையைப் பெறுவார்கள்.
Skills Expo 2024 பற்றிய கூடுதல் தகவலுக்கு, 077 776 6867 என்ற எண்ணிற்கு அழைக்கவும் அல்லது சமூக ஊடகப் பக்கங்களைப் பார்வையிடவும்.