SLT குழுமத்தின் வருமானம் ரூ. 100 பில்லியனைக் கடந்ததுடன், வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 12.2 பில்லியனைப் பதிவு செய்துள்ளது

Share with your friend

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) குழுமம், டிசம்பர் 31, 2021 உடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்த வருமானம் ரூ. 102.3 பில்லியனைப் பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் மொத்த வருமானம் 12.3% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இக்காலப்பகுதியில் SLT குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் ரூ. 12.2 பில்லியனாக பதிவாகியிருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 54.3% வளர்ச்சியாகும்.

குழுமத்தின் இலாபத்தில் அதன் பல்வேறு வியாபாரப் பிரிவுகளின் உயர் பெறுபேறுகள் பங்களிப்பு வழங்கியிருந்தன. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் குழுமத்தின் EBITDA பெறுமதி 16.6% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் தொழிற்படு இலாபம் 19.0% வளர்ச்சியடைந்திருந்தது. ஃபைபர் இணைப்பை (FTTH) விரிவாக்கம் செய்வது தொடர்பில் SLT இன் முதலீடுகள் மற்றும் 4G/LTE வலையமைப்பில் பெருமளவான விரிவாக்கங்கள் மற்றும் மேம்படுத்தல்கள் போன்றன புரோட்பான்ட் வருமானத்தில் அதிகளவு வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தன. மேலும், தரமான கல்வி மற்றும் களிப்பூட்டும் நிகழ்ச்சிகள் போன்றவற்றை வழங்குகின்றமைக்காக PEO TV சந்தையில் வளர்ச்சி பதிவாகியிருந்ததுடன், வருமானத்தில் அதிகரிப்பையும் பதிவு செய்திருந்தது. SLT-MOBITEL இன் சர்வதேச அலகான Xyntac ஒட்டு மொத்த வியாபாரத்திற்கும் வலிமை சேர்ந்திருந்தது. புதிய SEA-ME-WE 6 கேபிளில் முதலீடு மேற்கொள்வதனுடாக, இலங்கையின் சர்வதேச இணைப்புத் திறனை அடுத்த நிலைக்கு கொண்டு செல்வதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. நவீன வசதிகள் படைத்த டேட்டா நிலையத்தினூடாக(data center), SLT-MOBITEL இன் டிஜிட்டல்(Digital) ஆற்றல்கள் மேம்படுத்தப்பட்டிருந்ததுடன், Akaza multi-cloud இனாலும் நிறுவனத்துக்கு தொடர்ந்தும் பெறுமதி சேர்க்கப்பட்டிருந்தது.

SLT குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “2021 ஆம் ஆண்டை மீட்டுப் பார்க்கையில், நாம் எதிர்பார்த்ததை விட உயர்ந்த பெறுமதிகளைப் பதிவு செய்துள்ளோம் என்பதை பெருமையுடன் அறியத்தருகின்றேன். நிதியியல் பிரிவின் சகல அம்சங்களிலும் இதுவரை பதிவு செய்திருந்த உயர்ந்த பெறுமதியை நாம் எய்தியிருந்ததுடன், கூட்டாண்மை ஆளுகையிலுவும் அனைத்துக்கும் மேலாக தேசிய பொறுப்பிலும் சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்தோம். பூஜ்ஜிய மோசடி, கழிவுக் கட்டுப்பாடு, உயர் வினைத்திறன் மற்றும் உள்ளடக்கமான நிர்வாகம் போன்றவற்றில் நாம் கவனம் செலுத்தியிருந்ததன் காரணமாக 2021 ஆம் ஆண்டில் சகல தடைகளையும் எம்மால் தகர்த்து முன்னேற முடிந்தது. எதிர்காலத்தில் போட்டியை எதிர்கொள்வது மற்றும் SLT குழுமத்துக்கு வாடிக்கையாளர்களை இணைப்பது போன்றவற்றில் நாம் கவனம் செலுத்துவோம். தொலைத்தொடர்பு என்பதிலிருந்து தொழில்நுட்பம் எனும் நிலைக்கு எமது வியாபாரத்தை மாற்றியமைப்பதில் நாம் கவனம் செலுத்துவோம். அதனூடாக எமது வியாபாரத்தில் நேரடியாக தொடர்பைக் கொண்டுள்ள பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை உள்வாங்குவோம். உலகில் மிகவும் சக்தி வாய்ந்த நிறுவனங்களாக தொழில்நுட்ப நிறுவனங்கள் காணப்படுகின்றன. உலகின் பொருளாதாரத்தை வழிநடத்துவதுடன், மனிதர்களுக்கு தேவைப்படும் சகல அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொடுப்பதிலும் பங்களிப்பு வழங்குகின்றன. SLT-MOBITEL ஐச் சேர்ந்த நாம் தொழில்நுட்பத்தை மையப்படுத்தி இயங்குவதுடன், இலங்கையில் தொழில்நுட்பத்தை வழிநடத்திச் செல்லக்கூடிய சிறந்த நிலையில் காணப்படுகின்றோம்.” என்றார்.

2021 நான்காம் காலாண்டில் குழுமத்தின் வருமானம் முன்னைய நிதியாண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 7.5% இனால் அதிகரித்து ரூ. 25.7 பில்லியனாக பதிவாகியிருந்தது. EBITDA மற்றும் தொழிற்படு இலாபம் (Operating Profit) என்பன முறையே 21.3% மற்றும் 34.8% இனால் அதிகரித்திருந்தன. காலாண்டில் குழுமத்தின் வரிக்குப் பிந்திய இலாபம் (PAT) ரூ. 3.0 பில்லியனாக அதிகரித்திருந்தது. இது முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 162.9% வளர்ச்சியாகும்.

SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “கடந்த ஆண்டில் நாம் முழுமையாக முதலீடுகளை மேற்கொண்டிருந்த காலமாக அமைந்திருந்ததுடன், கண்டறிதல்கள் மற்றும் மீண்டெழுதலில் கவனம் செலுத்தப்பட்டது. சகல பிரிவுகளிலும் நாம் பதிவு செய்துள்ள வளர்ச்சி இதற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது. SLT-MOBITEL வர்த்தக நாம ஒன்றிணைப்பு என்பது குழுமத்தை முன்நோக்கி நகர்வதற்கு ஏதுவாக அமைந்திருந்ததுடன், தேசிய சேவை வழங்குநரை நாட வாடிக்கையாளர்களுக்கு வழிகோலியிருந்ததுடன், நாடு சவால்களுக்கு முகங்கொடுத்திருந்த போதிலும் தொடர்ச்சியாக தடங்கல்களில்லாத சேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கும் நம்பிக்கை கொள்வதற்கும் ஏதுவாக அமைந்திருந்தது. பிரதானமல்லாத வர்த்தகங்களின் உரிமையாண்மையை கைமாற்றியிருந்ததனூடாக, சிறந்த பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருந்ததுடன், எமது பிரதான வியாபார நடவடிக்கைகளில் நேரடியாக கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருப்பதுடன், டிஜிட்டல் தலைமைத்துவத்தில் (Digital Leadership) SLT குழுமத்தின் கவனம் செலுத்துவதற்கு ஏதுவாக அமைந்திருந்தது. தொழிற்துறையில் எமது தலைமைத்துவத்தை உறுதியாக பேணுவதில் குழுமம் அதீத ஆர்வம் கொண்டிருப்பதுடன், போட்டியை நேரடியாக எதிர்கொள்வதற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது. உள்ளடக்கமாக நிர்வாகத்துக்கான அர்ப்பணிப்புடன், SLT-MOBITEL ஆக எமது வியாபார இலக்குகளை எய்துவதற்கு ஓரணியாக நாம் செயலாற்றுவோம்.” என்றார்.

குழுமத்தின் தாய் நிறுவனமான ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிஎல்சி (SLT) வருமானத்தில் 16.0% அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 59.8 பில்லியனை எய்தியிருந்தது. நிறுவனத்தின் வரிக்குப் பிந்திய இலாபம்(PAT) ரூ. 5.9 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 45.9% வளர்ச்சியை பிரதிபலித்திருந்தது. புரோட்பான்ட்(Broadband), PEOTV மற்றும் உள்ளக சேவைகள் போன்றவற்றில் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெருமளவு வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது. 

SLT பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “தொற்றுப் பரவல் காலப்பகுதியிலும் நாம் டிஜிட்டல் மயமாக்கலை தொடர்ந்து மேற்கொள்ள தீர்மானத்ததினூடாக, எம்மால் அதீத வளர்ச்சியை எய்த முடிந்திருந்தது. தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரிடமிருந்து தடங்கலில்லாத உள்ளக மற்றும் சர்வதேச குரல் மற்றும் டேட்டா சேவைகளில் மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததுடன், அவற்றை வழங்குவதற்கான எமது ஆற்றல் என்பதனூடாக, நிறுவனத்தின் புரள்வு மற்றும் வருமான வளர்ச்சியில் பங்களிப்புச் செலுத்தியிருந்தன. டிஜிட்டல் பாகுபாட்டை குறைத்து, எமது வளர்ச்சியை கட்டியெழுப்புவதில் நாம் தொடர்ந்தும் பணியாற்றுவதுடன், எமது அர்ப்பணிப்பான ஊழியர்களின் ஆதரவுடன் எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவைகளைப் பெற்றுக் கொடுக்கக்கூடியதாக உள்ளது.” என்றார்.

குழுமத்தின் மொபைல் பிரிவான மொபிடெல், அதன் 28 வருட கால வரலாற்றில் மிகவும் உயர்ந்த வரிக்குப் பிந்திய இலாபமாக (PAT) ரூ. 8.0 பில்லியனை பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 63.8% வளர்ச்சியாகும். புரோட்பான்ட் பிரிவு இந்த வளர்ச்சியில் பிரதான பங்களிப்பு வழங்கியிருந்தது. பாரதூரமான பாரிய பொருளாதார சூழ்நிலைகள் மற்றும் இதர சவால் நிலைகளுக்கு மத்தியில் மொபிடெல் ரூ. 47.1 பில்லியனை வருமானமாக பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 8.7% வளர்ச்சியாகும். மொபிடெலின் பிற்கொடுப்பனவு குரல் பிரிவின் வருமானம் மற்றும் சர்வதேச உள்வரும் குரல் அழைப்புகள் வருமானமும் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியை இந்தக் காலப்பகுதியில் பதிவு செய்திருந்தது. EBITDA பெறுமதி 17.7% இனால் அதிகரித்து ரூ. 19.5 பில்லியனாக பதிவாகியிருந்தது. வருமானம் மற்றும் தொழிற்படு வினைத்திறனில் வளர்ச்சிப் பிரதிபலிப்பை ஏற்படுத்தியிருந்தது.

மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென கருத்துத் தெரிவிக்கையில், “இலங்கையில் அத்தியாவசிய மொபைல் இணைப்புத்திறனுக்கான தேவையை உறுதி செய்யும் வகையில் மொபிடெல் அணி அர்ப்பணிப்புடன் செயலாற்றியிருந்தது. நெருக்கடியான பொருளாதார சூழலில் அந்த கடுமையான உழைப்பினூடாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்றிருந்தமையானது உண்மையில் மகிழ்ச்சியளிக்கின்றது. இலங்கையின் உள்நாட்டைச் சேர்ந்த மொபைல் சேவைகள் வழங்குநரான மொபிடெல், நாடு முழுவதையும் சேர்ந்த எமது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த குரல் மற்றும் டேட்டா பாவனை அனுபவத்தை வழங்க முன்வந்துள்ளதுடன், அனைவருக்கும் மிருதுவான டிஜிட்டல் பயணத்தை உறுதி செய்யவும் முன்வந்துள்ளது.” என்றார்.

மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட ஆண்டில் குழும மட்டத்திலான கடன் பெறுகைகளை SLT குறைத்துக் கொண்டிருந்தது. மேலும், குழுமத்தின் தொழிற்படு பணப்பாய்ச்சல்கள்(Operating cashflow) என்பது தொடர்ச்சியான அதிகரிப்பை பதிவு செய்திருந்தன. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்தப் பெறுமதி 22.8% அதிகரிப்பைக் காண்பித்திருந்தது. நாட்டில் அந்நியச் செலாவணி நெருக்கடிகள் காணப்பட்ட போதிலும், குழுமத்துக்கான மதிப்பிறக்க வெளிப்படுத்துகை குறைவானதாக அமைந்திருந்தது. முறையான அந்நியச் செலாவணி நிர்வாகத்தினூடாக SLT இனால் வருமானத்தைப் பதிவு செய்ய முடிந்திருந்தது.

2021 நிதியாண்டில் ரூ. 19.3 பில்லியனை நேரடி மற்றும் மறைமுக வரியாக குழுமம் செலுத்தியிருந்தது. இதில் இலங்கை அரசாங்கத்துக்கான கட்டணங்கள் மற்றும் பங்கிலாபங்கள் போன்றனவும் அடங்குகின்றன. 

SLT குழுமத்தினால் வாடிக்கையாளர் பராமரிப்புக்கான அர்ப்பணிப்பு மற்றும் தொடர்ச்சியான தடங்கல்களில்லாத சேவைகள் போன்றவற்றினூடாக கடந்த ஆண்டில் பெற்றுக் கொண்ட வருமதிகளின் அனுகூலங்களை அடுத்த ஆண்டிலும் தொடர்ந்தும் பேணக்கூடியதாக இருக்கும். நுகர்வோர் புதிய வாழ்க்கை முறைக்கு தம்மை மாற்றியமைத்து வரும் நிலையில், புரோட்பான்ட் பாவனையில் வளர்ச்சி என்பது தொடர்ந்தும் இடம்பெறும் என குழுமம் எதிர்பார்க்கின்றது. நுகர்வோரை கவனத்தில் கொண்டமைந்த கட்டணம் மற்றும் பக்கேஜ்கள் மூலமாக வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு பொருத்தமான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. நிலைமை மீண்டும் வழமைக்குத் திரும்பினாலும் நுகர்வில் வீழ்ச்சி ஏற்படாது என்பதில் குழுமம் உறுதியாக உள்ளது. சிறிய நடுத்தரளவு வியாபாரங்களுக்கு ஒன்லைன் மற்றும் e-வணிக வியாபாரங்களில் வளர்ச்சியை எய்துவதற்கு ஆதரவளிப்பது என்பதில் குழுமம் கவனம் செலுத்துவதுடன், நம்பகத்தன்மை மற்றும் தன்னியக்கமயமாக்கல்(Automation) தீர்வினூடாக சிறந்த சந்தைப்பகுதியை உருவாக்கிக் கொள்ளவும், நிறுவனங்கள் பிரிவில் வளர்ச்சியை எய்தக்கூடியதாகவும் இருக்கும்.


Share with your friend