SLT குழுமம் 2022 முதல் அரையாண்டில் நிலையான வருமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது

Share with your friend

– மீட்சியுடனான வியாபார மாதிரியை வெளிப்படுத்தியுள்ளது –

தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குனரான ஸ்ரீ லங்கா டெலிகொம் குழுமம் (SLT குழுமம்), 2022 முதல் அரையாண்டு காலப்பகுதியில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் வருமானம் 6% இனால் அதிகரித்து ரூ. 52.9 பில்லியனாகவும், வரிக்கு முந்திய இலாபம் (PBT) 19.8% இனால் அதிகரித்து ரூ. 7.2 பில்லியனாகவும் பதிவாகியுள்ளது.  நாட்டில் சிக்கல்கள் நிறைந்த சமூகப்பொருளாதாரச் சூழல்கள் காணப்பட்ட போதிலும், குழுமத்தினால் மீட்சியுடன் கூடிய வியாபார மாதிரியை பின்பற்றப்பட்டிருந்தமையை வெளிப்படுத்தியிருந்தது.

தொழிற்பாட்டு வினைத்திறனை வெளிப்படுத்தி SLT குழுமத்தின் EBITDA (Earnings Before Interest, Tax, Depreciation and Amortisation) பெறுமதி 2022 முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ. 20.9 பில்லியனாக அதிகரித்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 7.8% வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில் EBITDA எல்லைப் பெறுமதி(EBITDA Margin) 39.7% ஆக காணப்பட்டது.

முன்னைய காலாண்டின் வெற்றிகரமான செயற்பாட்டுக்கு மேலதிகமாக, SLT குழுமத்தினால் நேர்த்தியான போக்கை 2022 இரண்டாம் காலாண்டிலும் பேண முடிந்திருந்தது. முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் தொழிற்படு இலாபத்தில் 4% அதிகரிப்பை பதிவு செய்ய முடிந்தது. குழுமத்தினால் ரூ. 135 மில்லியன் அந்நியச் செலாவணி வருமானம் பதிவு செய்யப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், முன்னைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் காலாண்டில் வரிக்குப் பிந்திய இலாபம் 26.5% இனால் வீழ்ச்சியடைந்திருந்ததுடன், இதில் பிரதானமாக வருமான வரிச் செலவுகளில் ஏற்பட்ட உயர்வுகள் தாக்கம் செலுத்தியிருந்தன.

வருடத்தின் ஆரம்பத்தில் SLT குழுமத்தினால் நடைமுறைப்படுத்தப்பட்ட உத்திகளை தொடர்ந்து பின்பற்றியிருந்ததுடன், இரண்டாம் காலாண்டில் அதன் பெறுபேறுகளை அவதானிக்க முடிந்தது. எவ்வாறாயினும், ஏப்ரல் முதல் ஜுன் மாதம் வரையான காலப்பகுதியில், குழுமம் பல்வேறு வியாபார வளர்ச்சிச் சவால்களுக்கு முகங்கொடுத்திருந்தது. இதில் எதிர்பாராத பொருளாதார நெருக்கடி, இறக்குமதிக் கட்டுப்பாடுகள், பணவீக்கம் சார் அழுத்தங்கள் போன்றன அடங்கியிருந்தன. மேலும், தற்போதைய முதலீடுகளும் பாதிக்கப்பட்டுள்ளன முக்கியமாக தொழிற்பாட்டு செலவுகள் அதிகரித்தமையினால் புதிய திட்டங்களும் பாதிக்கப்பட்டன. வலு மற்றும் எரிபொருள் நெருக்கடியினால் செயற்பாட்டு சவால்களுக்கும் முகங்கொடுக்க நேரிட்டது. இந்த உறுதியற்ற நிலைகளிலிருந்து மீளும் வகையில், குழுமம் மீண்டு வருவதற்கான முதலீடுகளில் கவனம் செலுத்தியிருந்ததுடன், பல்வேறு பிரிவுகளில் வருமான இலாகாக்களை நிர்வகிப்பதற்கு மேலதிகமாக, முறையான நிர்வாகக் கட்டுப்பாடுகளையும் மேற்கொண்டிருந்தது. 

குழுமத்தின் தொழிற்படு பணப்பாய்ச்சல் முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 21.2% இனால் அதிகரித்து ரூ. 23. 5 பில்லியனாக வளர்ச்சியடைந்திருந்தது. மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியின் நிறைவில் குழுமத்தினால்  பண மற்றும் பணத்துக்கு நிகரான மூலங்களின் நிலை ரூ. 27 பில்லியனாக பதிவாகியுள்ளது. 2022 இன் முதல் அரையாண்டு காலப்பகுதியில் அரசாங்கத்துக்கு நேரடி மற்றும் மறைமுக வரிகளினுடாகவும் பங்கு இலாபங்களூடாகவும் ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் பங்களிப்பு ரூ. 14 பில்லியனாகும். 

ஸ்ரீ லங்கா ரெலிகொம் குழுமத்தின் தவிசாளர் ரொஹான் பெர்னான்டோ கருத்துத் தெரிவிக்கையில், “மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதி, எமக்கு (SLT-MOBITEL) மிகவும் சவால்கள் நிறைந்ததாக அமைந்திருந்தது. கடுமையான சூழலுக்கு முகங்கொடுத்து இயங்க வேண்டியிருந்தது.  எவ்வாறாயினும், எமது வியாபார மாதிரியில் காணப்படும் நெகிழ்ச்சித்தன்மையினால், எம்மால் வளர்ச்சியை பதிவு செய்ய முடிந்ததுடன், ஊக்கத்துடனான குழுநிலைச் செயற்பாட்டினால், நேர்த்தியான பெறுபேறுகளை எய்தக்கூடியதாக இருந்தது.” என்றார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில், “2021 ஆம் ஆண்டில் நாம் எதிர்கொண்டிருந்த சிறந்த மாற்றத்தை தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதுடன், எமது வளர்ச்சிக்கு பிரதான காரணிகளினூடாக எமது தொழில்நுட்பத்தை மேம்படுத்தக்கூடியதாக இருக்கும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளதுடன், டிஜிட்டல் பகுதியில் எமது முயற்சிகளுக்கு ஊக்கமளிப்பதாக அமைந்திருக்கும். அதனூடாக எதிர்கால வளர்ச்சிக்கு வலுவூட்டுவதுடன், எதிர்வரும் காலாண்டுகளில் வருமானங்களை பதிவு செய்ய ஏதுவாக அமைந்திருக்கும்.” என்றார்.

SLT குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி லலித் செனெவிரட்ன கருத்துத் தெரிவிக்கையில், “காலாண்டு நிதிப் பெறுபேறுகளினூடாக, நாம் மேற்கொண்டிருந்த உத்திகள் சந்தையில் எமது வியாபாரத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மேற்கொண்டிருந்த உறுதியான நடவடிக்கைகள் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. வியாபாரச் சூழலை மீளமைக்கும் பல்வேறு பாரிய பொருளாதாரக் காரணிகளுக்கு மத்தியில், நேர்த்தியான கட்டமைப்புடன் எதிர்காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்ளக்கூடியதாக இருக்குமென நாம் கருதுகின்றோம். 2022 ஆம் ஆண்டின் அடுத்த அரையாண்டு காலப்பகுதியில் எமது முதலீடுகளை துரிதப்படுத்த நாம் எதிர்பார்ப்பதுடன், அதற்காக எமது உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரசன்னம், வலையமைப்புகள் மற்றும் கட்டமைப்புகள் போன்றவற்றை விரிவாக்க எதிர்பார்க்கின்றோம். தேசத்தை டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கும் பயணத்தில் நாம் ஈடுபட  எதிர்பார்க்கின்றோம்.” என்றார்.

குழுமத்தின் தாய் நிறுவனமான ஸ்ரீ லங்கா டெலிகொம் பிஎல்சி (SLT), முன்னைய ஆண்டுன் ஒப்பிடுகையில், 2022 இன் முதல் அரையாண்டில் 12.4% வருமான அதிகரிப்பைப் பதிவு செய்திருந்தது. நிறுவனத்தின் EBITDA ரூ. 11.8 பில்லியனாக அதிகரித்திருந்ததுடன், வருடாந்த அடிப்படையில் ஒப்பிடுகையில் இது 10.2% அதிகரிப்பாகும்.

ஸ்ரீ லங்கா ரெலிகொம் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜனக அபேசிங்க கருத்துத் தெரிவிக்கையில், “எமது இரண்டாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகளினூடாக, சவால்கள் நிறைந்த தொழிற்பாட்டுச் சூழலிலும் நிதிசார் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முடிந்தது. எமது தொடர்ச்சியான சிக்கனமான செயற்பாடுகளினூடாக, எம்மால் எல்லைப் பெறுமதிகளை அதிகரித்துக் கொள்ள முடிந்ததுடன், ஒட்டுமொத்தமாக உறுதியான பெறுபேறுகளை பேண முடிந்தது. சந்தையின் அழுத்தநிலை தணிய ஆரம்பித்துள்ள நிலையில், வருடத்தின் எஞ்சியிருக்கும் காலப்பகுதியில் வளர்ச்சியை பதிவு செய்ய முடியும் என நாம் எதிர்பார்க்கின்றோம். குறிப்பாக பண வீக்கம் தொடர்பான அழுத்தம் காணப்பட்ட போதிலும், எமது உத்திகள் ரீதியான செயலாற்றுகைகளினூடாக சிறந்த வருமதிகளைப் பதிவு செய்யக்கூடியதாக இருக்கும்.” என்றார்.

குழுமத்தின் மொபைல் சேவைகள் பிரிவான மொபிடெல், முதல் அரையாண்டு காலப்பகுதியில் ரூ. 23 பில்லியனை வருமானமாக பதிவு செய்திருந்தது. முதல் அரையாண்டு காலப்பகுதியில் EBITDA வளர்ச்சி 1% எல்லையளவு உயர்ந்து ரூ. 9.5 பில்லியனாக பதிவாகியிருந்ததுடன், EBIT பெறுமதி 3% இனால் வீழ்ச்சியடைந்து ரூ. 4.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. 

சவால்கள் நிறைந்த பாரிய பொருளாதாரச் சூழலிலும், மொபிடெலின் இரண்டாம் காலாண்டு நிதிப் பெறுபேறுகள் ஊக்கமளிப்பதாக அமைந்திருந்தது. காலாண்டில் 0.7 பில்லியன் ரூபாயை இலாபமாக பதிவு செய்திருந்தது. அதனூடாக வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் சிறந்த பெறுபேறுகளை தொடர்ந்து பேண முடிந்திருந்தது. எதிர்காலத்தில் மொபிடெல் சர்வதேச வியாபார வருமானங்களில் வளர்ச்சியை அதிகரிக்க எதிர்பார்ப்பதுடன், வலு மற்றும் மின்சக்தி அடங்கலாக சகல பிரிவுகளிலும் உற்பத்தித் திறன் மற்றும் வினைத்திறனை மேம்படுத்தவும் எதிர்பார்க்கின்றது.

மொபிடெல் பிரதம நிறைவேற்று அதிகாரி சந்திக விதாரென கருத்துத் தெரிவிக்கையில், “மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட காலப்பகுதியில், நாம் தொடர்ச்சியாக சிறந்த பெறுபேறுகளைப் பதிவு செய்திருந்ததுடன், தொடர்ந்து மாற்றமடைந்து வந்த வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் சந்தைப்போக்குகளுக்கமைய எமது சேவைகளை மாற்றியமைத்து வழங்கியிருந்தோம். மதிநுட்பமான டிஜிட்டல் எதிர்காலத்தை வழங்கக்கூடிய பிரதான தந்திரோபாய முன்னுரிமைகளை எய்துவது பற்றி நாம் தொடர்ந்து கவனம் செலுத்தியிருந்ததுடன், புத்தாக்கமான தயாரிப்புகள் மற்றும் திட்டங்களுடன் சிறந்த வாடிக்கையாளர் அனுபவத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு முயற்சிக்கின்றோம்.” என்றார்.


Share with your friend